31 - அது யார் அழுகையோ…?
செப்டம்பர் 17, 2006 இல் 5:43 பிற்பகல் (31 - அது யார் அழுகை...)

அது யார் அழுகையோ…?
என் நினைவுக் கூட்டுக்குள்
வழுக்கி விழுந்த
அந்த அழகான
பொழுதுகளை எல்லாம்
அசை போட்டுப் பார்க்கின்றேன்.
அழகான அந்த
கடற்கரை மண்ணில்
மணற் கோட்டை கட்டி
இடித்து விளையாடியதும்…
ஓடும் நண்டுகளை
துரத்திப் பிடித்ததுவும்…
சிப்பிகள் சோகிகள்
தேடிப் பொறுக்கியதும்…
பிஞ்சுக் குழந்தைகளோடு
கைகோர்த்து விளையாடி
களிப்பில் மூழ்கி
குளித்து விளையாடி
மகிழ்ந்த காலங்கள்.
எல்லாமே எல்லாமே
இப்போதும்
பசுமையாய் நிறைய
இன்னும் தொடற்சியாய்…
உரசி வரும்
கடல் அலைகள்
கரையைத் தொட்டு
காதல் பேசிக் கொண்டதை
கண்கொண்டு ரசித்ததுவும்…
மாலைப் பொழுதினிலே
மனமகிழ்வாய் இருந்து
இயற்கையின்
அழகையெலாலாம்
இனிதாய் ரசித்ததுவும்…
நெஞ்சத்து நினைவுகளில்
நான் கொண்ட நேசனைகளாய்
மீண்டும் மீண்டும்
இசை மீட்டிப் பார்க்கின்றேன்.
அந்த நாட்கள்
எவ்வளவு
அழகான நாட்கள்…?
அந்தப் பொழுதுகள்
எவ்வளவு
அழகான பொழுதுகள்…?
நினைவின் சுரங்களை
மெல்ல மீட்டியபடி
சுற்றும் முற்றும்
தேடிப் பார்க்கின்றேன்.
இப்போது
எல்லாமே
வெறிச்சோடிக் கிடக்கின்றன.
வெறிச் சென்று
மயானமாகிப் போனது
இந்தக் கடற்கரை மட்டுமல்ல
என் இதயமும்தான்.
ஏதோ
இனம் புரியாத
வெறுமை என்னை வாட்ட
மெல்லச் சென்று
என் பாதங்களை நனைக்கின்றேன்.
யாரோ
என் கால்களை
தொடுவதாய் ஓர் உணர்வு
மெல்லக் குனிந்து பார்க்கின்றேன்.
கணப் பொழுதில் குதித்தெழுந்த
அந்த ராட்சத அலைகளுக்குள்
கண்மூடி முழிக்கு முன்னே
காணாமல் போன குழந்தைகள்
அங்கே
பரிதாபமாய்
அழுத விழிகளுடன்…
பச்சைக் குழந்தைகள்
பதைத்துத் துடித்துக்
கதறியபடி
தம் பிஞ்சுக் கரங்களால்
என் பாதத்தை தழுவி
இறுகக் கட்டி அணைத்தனர்.
கருநீலக் கடலினுள்ளே
தத்தளித்தபடி
இன்னும் சில
பிஞ்சுக் கரங்கள்
என்னை நோக்கி நீண்டன.
என் மனம்
கனத்து துடிக்க
உதிரம் எல்லாம்
உறைந்து போவதாய்
உள்ளத்தில் லேசான உதறல்.
முகவரி தொலைத்த பிஞ்சுகளின்
முனகல் ஒலி
என் காதுகளைப் பிளக்க
சட்டென நிமிர்ந்து பார்க்கின்றேன்.
மோதி எழுந்து வரும்
அந்த அலைகளுக்குள்…
அன்னை தந்தையரின்
உறவுகளைத் தேடி
அலைகளுக்குள் அலையும்
ஈரப் பிஞ்சுகளின்
ஈனக் கதறல்கள்…
ஐயகோ
அது யார் அழுகையோ…?
துன்பச் சுமைகள் என்னை அழுத்த
கண்களில் கண்ணீர் மடை திறக்க
இதயமே வெடித்து விடுவதாய்
துடித்து உணர…
மரத்துப் போன மனதுடன்
அந்த கடற்கரையை வெறுத்து
என் கால்கள் நகர்கின்றன.
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=1851&st=0#entry19478
