24 - நிலாத் தூறல்!
ஜூலை 2, 2007 இல் 9:25 பிற்பகல் (24 - நிலாத் தூறல்!)
Tags: 24 - நிலாத் தூறல்!

என் தவமிருப்பு!
ஓ…!
என் உள்ளங்கையில்
ஆயுள் ரேகையை
தேடிப் பார்த்த படி…
தினமும்
உள்ளத்தில் பொங்கியெழும்
உன் நினைவு சுமந்து
மௌனங்களோடு மட்டுமே
நிமிடங்களைக் கழிக்கின்றேன்!
ஏனென்றும் தெரியவில்லை
விடை காணவும் முடியவில்லை!
நீ - எனக்கும் தெரியாமல்
சிக்கும் எடுக்காமல்
பிய்த்துக் கொண்டு
போய் விட்டாய்!
நீ என்னை விட்டு
தூரமாய்
போய் விட்டாய் என்று
இந்த மூளை சொல்கிறது!
ஆனால்
இந்த மனமோ
மூளைக்கு
பைத்தியக்காரப் பட்டம்
கட்டி விட்டு
உன் நினைவில்
மூழ்கிக் கிடக்கிறது!
உன் பிரிவினால்
காயப்பட்ட என் நெஞ்சம்
நானும் நீயுமாய்
நனைந்த பொழுதுகளை
எப்போதும்
இசை மீட்டிப் பார்க்கிறது!
ம்…!
நாட்களையும்
பொழுதுகளையும்
வெறுமையான பக்கங்களோடு
புரட்டியபடி…
சுடும் கண்ணீரில்
கவிதைகள் எழுதி
கவிதைகளில் கப்பல் செய்து
கடல் நீரில் மிதக்க விட்டு
கண்ணீரோடு காத்திருக்கின்றேன்!
ஏதாவது ஒரு கவிதை
உன் கரம் கிடைத்து
என்றாவது ஒரு நாள்
என்னைத் தேடி
வருவாயென்ற நம்பிக்கையில்…
உன் வரவுக்காய்
தினமும் என் தவமிருப்பு!
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4090
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***

