20 - நிலாத் தூறல்!
ஜூன் 30, 2007 இல் 10:24 பிற்பகல் (20 - நிலாத் தூறல்!)
Tags: 20 - நிலாத் தூறல்!

விடிவு வருமா…?
இருட்டறையில் வாழ்ந்த
ஏழை என் மனதின்
இதயத்தில் வெளிச்சம் ஏற்றி…
எழுவதற்கே வாழ்வு என
எனக்குள்ளே நினைத்து
எங்கோ தொலைத்த நம்பிக்கையை
அவசரமாய் தேடத் தொடங்கினேன்!
சுமைகள் அழுத்தி
என்னை விழுத்திய போதும்
உதிரத்தை உப்பாக்கி
உடம்பைச் சாறு பிழிந்து…
அன்றாடம் திண்டாடி
அரை வயிறு நிரப்பி
மீதி அரை வயிற்றை
தண்ணீர் கொண்டு நிரப்பி…
இருப்பையும் இழப்பையும்
இன்று
கணக்கிட்டுப் பார்க்கின்றேன்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்!
ஓ…!
உதிரத்தைச் செலவு செய்து
உறங்கவென அமைத்த
ஓட்டைக் குடிசையும் இங்கே
ஓடமாய் மிதக்கிறது!
திசை தெரியாமல் திண்டாடி
தலைசாய்க்க இடமின்றி
தவித்தலைவதை - என்
தலை விதி என்றிடவா…?
தேய்ந்து போகும்
என் போன்ற ஏழைகளின்
தேவையினை ஈடு செய்ய
இங்கே யார் வருவார்கள்…?
ம்…!
நாளையும் விடியல் வரும்!
ஆனால்
எங்களுக்கு விடிவு வருமா…?
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3789&st=0#entry46650
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***
