16 - நிலாத் தூறல்!
ஜூன் 26, 2007 இல் 9:19 பிற்பகல் (16 - நிலாத் தூறல்!)
Tags: 16 - நிலாத் தூறல்!

சில்லறையாய் சிதறும்
உன் சின்னச் சின்னச் சிரிப்பெல்லாம்
இன்றும் என்னுள்
சில்லிட்டுச் செல்கிறது!
தூரிகை குழைத்து
வர்ணக் கலவையில் கலந்து
நான் எழுதிய
கவிதைகளில் எல்லாம்
என்மன வெற்றிடங்களை நிரப்பி
வழிந்தோடிய கருவாய்
தொடர்ந்து நிறைந்திருந்தது நீதான்!
காற்றில் உனது
ஈரப்பதம் உலரும் முன்னே
உன்னோடு
பின்னோடி வந்த
எனது எண்ணங்கள்
உன்னோடு மட்டும்
ஒட்டிக் கொண்டது!
உன்னை மட்டும்
நான் சந்தித்திருக்காவிட்டால்
இப்படி எல்லாம்
நொந்து துடித்திருக்க மாட்டேன்!
உன் இதயத்தில்
இப்போதும்
நான் இருக்கின்றேனோ…?
இது கூடத் தெரியவில்லை.
ஆனால்
என் இதயத்தில்
உனக்காய் ஓர் இடம் ஒதுக்கி
நம்பிக்கை சின்னம் ஏற்றி
உன்னை நான் - இன்றும்
நேசித்துக் கொண்டிருக்கின்றேன்!
ஓ…!
காலத்துகுத்தான்
எத்தனை அவசரம் பார்த்தாயா…?
நாட்கள் மாதங்களை விழுங்கி
மாதங்கள் வருடங்களை விழுங்கி
வாழ்வின் விளிம்பில் இப்போது நான்!
உனை நிரந்தரமாய்
பிரியப் போகும்
இவ்வேளையில்
என் உள்ளத்தின் உள்ளே
ஏதோ ஓர் சோகம்
அலைமோதி எழுகிறது!
முகவரிகள் தெரிந்திருந்தும்
முகங்கள் காணாதவர்கள் நாம்
இப்போதாவது
உன் முகத்திரை விலக்கி
உன் முகம் காட்ட மாட்டாயா…?
ம்…!
கல்லறைக் கவிஞன்
உனக்காய்
கண்ணீரால் எழுதும்
கடைசிக் கவிதை இது!
என் பரிசுத்தமான நேசத்தின்
பாசத் தவிப்பினையும்
வேசங்கள் போடாது
வேகித் தவித்ததையும்
வேதனைகள் தீரும் வரை
அழுது நான் தீர்க்க வேண்டும்!
ம்…!
கல்லறைக் கவிஞன்
உனக்காய்
கண்ணீரால் எழுதும்
கடைசிக் கவிதை இது!
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***
