15 - நிலாத் தூறல்!

user posted image

எங்கே அந்த நான்…?
————————–

தட் தட்
என தாளமிட்டு
தட்டி அழைக்கும் சத்தம்
என் காதோரம் கேட்க…

நானும்
சாளரத்தை
மெல்லத் திறக்கின்றேன்!

அங்கே
முத்து முத்தாய்
மழைத் துளிகள்
சிமிட்டித் தரையில்
சிதறித் தெறிக்கின்றன!

இலைகள் எல்லாம்
சலசலத்து
மெய் சிலிர்த்து ஆடுகின்றன!

சற்று நேரம்
உற்றுப் பார்க்கின்றேன்
கற்பனை ஏதும்
கடுகளவும் பிறக்கவில்லை!

முன்பெல்லாம்
மழையைக் கண்டவுடன்
கற்பனை வானில் பறந்து
கவிதைகள் கிறுக்குவேன்!

தெப்பமாய் நனைந்து
தத்தி நடை போடுவேன்!

இப்போதெல்லாம்
என் காய்ந்து போன நெஞ்சில்
கற்பனைகள் பிறப்பதில்லை!

ஆனந்தமாய் நனைந்தாட
ஆசைகள் வருவது இல்லை!

அதோ…. அதோ
சின்னஞ் சிறுவர்கள்
சிரித்து மகிழ்ந்து
ஆனந்தக் கூத்தாடி
அடை மழையில்
நனைகிறார்கள்!

அதை ரசித்திடும்
மனமும் எனக்கில்லை!

ஒ…!
வாழ்க்கை வரம்பில்
இடறி விழுந்து
எல்லாமே தொலைத்தேனா…?

தொலைந்து போன
கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும்
இந்தக் கணப் பொழுதுக்கும்
இடையே
நான் எதைக் கொண்டு
பாலங் கட்ட…?

மனமெல்லாம் வெறுமையாக
ரசனைகளை தொலைத்து விட்டு
குடைக்குள் புகுந்து கொண்டு
என் கால்கள் போன போக்கில்
நானும் நடக்கின்றேன்!

ஓ…!
எங்கே அந்த நான்…?

 

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3568&st=0#entry42521


உங்களோடு வலம் வரும்

*** இவள் - சத்தியா ***
user posted image