14 - நிலாத் தூறல்!

உன்னில் நான் நனைகின்றேன்!

வா மழையே வா!

பூமிப் பெண்ணவளின்
உள்ளம் குளிர
வான் மேகம் மனமிரங்கி
வாழ்த்துக்கள் பல பாடி
தூவிடும் தூறல்கள்தான்
துளித் துளியாய்
விழும் மழையோ….?

சில்லெனத் தூவிடும்
சின்னச் சின்ன மழைத் துளியில்
சில்லறையாய் சிதறும்
சின்னச் சின்ன ஞாபகங்கள்…

அன்று
குடையிருந்தும்
குடை பிடிக்க மனமின்றி
தூக்கி எறிந்து விட்டு
கூத்தாடி மகிழ
மனதில் குட்டிக் குட்டி ஆசைகள்
குதூகலமாய் பிறந்தன!

ஆசையாய் நனைந்து
ஆடிப் பாடி
ஆனந்தக் கூத்தாடி
ஆழமாகப் பதிந்த
அந்த அழகிய பொழுதுகளை
அசை போட்டுப் பார்க்கின்றேன்!

அது
சிறு வயதின் சில்மிசங்களாய்….
சின்னச் சின்ன ஆசைகளாய்….
சொர்க்கமாய் பதிந்த
சொர்க்கமான நாட்கள் அவை!

இன்று
மீண்டும் உன்னில் நனைகின்றேன்!

உயிரோடு உயிராகி
உறவான உறவொன்று
பிரிவெனும் வலி தந்து
பிரிந்து சென்று விட
பிரிவின் வலியினை
பிரித்து எறியத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

மனதின் உள்ளே
மண்டியிட்டுக் கிடக்கும்
மாறாத சோகங்களை
மாற்றிடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

ஏமாற்றங்கள் பல கண்டு
ஏமாந்த உள்ளத்தின்
ஏராளமான சோகத்தை
அழித்திடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

வஞ்சிக்கப்பட்டு
வார்த்தைகள் வராமல்
வலிகளைப் புதைத்து
வதைபட்டு வதைபட்டு
வலித்திடும் வலிகளையும்
கழுவிடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

காயங்கள் பல பட்டு
கண்களின் ஓரத்தில்
கண்ணீராய் வழியும்
கண்ணீர்த் துளிகளையும்
கழுவிடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

நெஞ்சின் உள்ளே
நெருப்பாய் கொதித்து
சுவடாய் பதிந்து
சுடும் வேதனைகளை
கழுவிடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

 

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3186&st=0#entry33851


உங்களோடு வலம் வரும்

*** இவள் - சத்தியா ***
user posted image