யாரழுது யார் துயரம் மாறும்…?
விடியல்களை எழுப்பி
பகல்களை விரட்டி
பொழுதுகள் சாய்ந்து
ஆண்டொன்று முடிந்து போகும்
அந்த இரவின் மடியில்…
சாளரத்தை மெல்லத் திறந்து
வெளியே எட்டிப் பார்க்கிறேன்
வண்ணங்கள் சிதறச் சிதற
வந்து விழும்
வான வேடிக்கைகளும்…
மின்னியும், முழங்கியும்
ஆரவாரித்து வரும்
வெடிகளின் ஓசையும்…
புதிய ஆண்டை வரவேற்கும்
வாழ்த்து ஒலிகளுமாய்
என் காதைப் பிளக்கிறது.
அமைதியாய் நின்று
அனைத்தையும் பார்த்தவேளை
அப்பாவின் நினைவும்
அக்காவின் நினைவும் வந்து
அலைமோதிச் சென்றன.
அங்கே…
இயந்திரப் பறவைகளின்
எச்ச வீச்சில் விழும்
குண்டுகளுக்கும்…
போர்ப்பறை முழங்கி விழும்
செல்களுக்கும் நடுங்கி…
முகவரியைத் தொலைத்த முகங்களாய்
எந்தப் பதுங்கு குழியில்
பதுங்கிக் கிடப்பார்களோ…?
என்ற வேதனை மனதை வாட்ட
எதையுமே ரசிக்க மனமின்றி
படுக்கையில் விழுந்து
உருண்டு பிரண்டு
சற்று கண்ணயர்ந்த வேளை…
அதிகாலை நான்கு மணி
அலறிய தொலைபேசி அழைப்பில்
அடுத்த முனையில்
தளதளத்த குரலோடு
நலம் விசாரித்தபடி
என் அப்பா !!!
என்னப்பா…? என்னாச்சு…?
குரலெல்லாம் வித்தியாசம் என்றேன்.
“இல்லடா
பனிக் குளிருக்கு
குரல் அடைப்பு”… என்றார்.
வலிகளால்
அவர் விழிகள் நனைந்தபோதும்
என்னைச் சமாதானப்படுத்த
இப்படியெல்லாம் சமாளிக்கிறார்
என்பது எனக்கும் தெரியும்.
ஓ!… அப்படியா…?
என நானும் பொய்யாச் சிரித்து
உள்ளே அழுது துடித்து
அதை மறைக்க
வலிந்து நான் முயன்றபோது
மூச்சுத் திணறி
வார்த்தைகளும் தடுக்கி விழ…
அவிழ்ந்து விழுந்தன
கண்ணீர் முடிச்சுக்கள் !!!
ம்…
யாரழுது யார் துயரம் மாறும்…?

செங்கோடன் சொன்னது,
ஜனவரி 10, 2009 இல் 12:12 மு.பகல்
விழிகளின் வழிகள் கண்ணீர்ச் சாலை என்றால்
வாழ்க்கைக் கண்க்கை நீ
யாரிடம் கடன்பட்டாய்……….தோழி
ஜமால் A M சொன்னது,
ஜனவரி 19, 2009 இல் 2:40 மு.பகல்
நீண்ட நாட்களுக்கும் பிறகு தங்கள் கவிதை …
மிக அருமை …
ஜமால் A M சொன்னது,
ஜனவரி 19, 2009 இல் 2:42 மு.பகல்
உங்கள் உணர்வின் வலி தெரிகிறது …
\\என நானும் பொய்யாச் சிரித்து
உள்ளே அழுது துடித்து\\
ஜமால் A M சொன்னது,
ஜனவரி 19, 2009 இல் 2:42 மு.பகல்
ம்ம்ம் … உண்மையே …
யாரழுது யார் துயரம் மாறும்…?
செங்கோடன் சொன்னது,
ஜனவரி 20, 2009 இல் 12:20 மு.பகல்
தொடரட்டுக் உங்கள் கவிப்பணி
சு.சிவா. சொன்னது,
ஜனவரி 21, 2009 இல் 10:53 மு.பகல்
நல்ல கவிதை சகோதரி. ஒரு நிகழ்வின் பதிவையும், அது தந்த வலியையும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். குறிப்பாக அதன் நடை. பக்கத்திலிருக்கும் ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதுபோல் இயல்பான, எளிமையான, அழகான நடை. இன்றுதான் முதன் முதலாக உங்கள் தளத்தை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. தொடருங்கள் வாழ்த்துக்கள்.
http://susiva.blogspot.com/
Ramya சொன்னது,
ஜனவரி 31, 2009 இல் 7:36 மு.பகல்
//
விடியல்களை எழுப்பி
பகல்களை விரட்டி
பொழுதுகள் சாய்ந்து
ஆண்டொன்று முடிந்து போகும்
அந்த இரவின் மடியில்…//
ரொம்ப நல்ல இருக்கு சத்திய
வாழ்த்துக்கள்
சத்தியா அருமை அருமை
அருமையான ஒரு கவிதாயினியை
ஜமால் எனக்கு ஆறுமுகப் படுத்தி
இருக்கிறார்
நன்றி ஜமால்
கவின் சொன்னது,
பெப்ரவரி 2, 2009 இல் 4:23 பிற்பகல்
//ஓ!… அப்படியா…?
என நானும் பொய்யாச் சிரித்து
உள்ளே அழுது துடித்து
அதை மறைக்க
வலிந்து நான் முயன்றபோது
மூச்சுத் திணறி
வார்த்தைகளும் தடுக்கி விழ…//
ஜமால் சரியாத்தான் சொல்லி யிருக்கிங்க…. நன்றி…
சத்தியா.. வாழ்த்துக்கள்..