225 – என் தாயுமானவனே!



என் தாயுமானவனே!

வாழ்க்கைப் பாதையில்
மரத்துப் போன மனதோடு
வியர்த்துப் போன வரலாறு
என்னோடு இழுபட்டுக் கிடக்க…

உன் பாதச் சுவடுகளில்
தேங்கிக் கிடக்கும் மழை நீரில்
என் தாகம் தீர்க்க எண்ணி…

கால இருள் கிழித்து
மண்ணை விட்டு
விண்ணோக்கிப் பறந்து
மண்ணுக்கும் விண்ணுக்கும்
நூல் கொண்டு பாலமமைத்து…

என் விரல்களுக்குள்
விழுந்துவிட்ட வெண்மதியை
மெல்லெனவே மீட்டி
விளையாடிக் களித்த குழந்தையாய்…

வண்ணக் கனவுகளின்
வர்ணங்கள் கரையக் கரைய
அங்குலம் அங்குலமாய்
விழி மொழியால் உனை அளந்த
அந்தக் கருக்கல் பொழுதுகளோடு
கவிதைகள் கறந்து கறந்து
காலங்கள் நீள நீள…

மீண்டும்
உன்னைத் தரிசிக்கும் ஆவல்
என்னைத் தொல்லை செய்ய…

ஓ…
என் தாயுமானவனே!

என்றோ ஓர் நாள்
நீ தலை தடவும் வேளைகளில்
என் தலைப் பாரம் நீங்கி
தாகங்கள் தீர்ந்து…

வாழ்வின் பூரணப் பக்கம் ஒன்று
உனக்கும் எனக்கும் வசப்படும்
என்னும் எண்ணத்தோடு
நாட்களை நகர்த்தி நகர்த்தி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்!

*** இவள் – சத்தியா ***

3 மறுமொழிகள்

  1. சின்னா சொன்னது,

    நவம்பர் 22, 2008 இல் 6:37 பிற்பகல்

    வணக்கம் சத்தியா… நீண்ட நாட்களாக உங்களை ஆளையே காணோமே… நலமாக இருக்கிறீர்களா… ?? மாதம் ஒரு கவிதையேனும் எழுதலாமே…. நன்றிகள்…

  2. ஜமால் A M சொன்னது,

    December 24, 2008 இல் 5:25 மு.பகல்

    ஆம் கவிதை எழுதுங்கள்

    மீண்டும் மீண்டும்…

  3. இதயநிலா சொன்னது,

    ஜனவரி 2, 2009 இல் 6:09 மு.பகல்

    இனிய கவிதை உள்ளம் மலர்கின்றது. நன்றி வாழ்துக்கள் சத்தியா….!


மறுமொழியொன்றை வழங்குக