மலரும் நினைவுகளில்…!
உறக்கம் தொலைத்த இரவில்
நிசப்தம் கொல்லும்
என் வீட்டுச் சுவர்க் கடிகாரம்!
தூக்கம் தொலைத்துக் கிடக்க
மனசை உரசிவிட்டுப் போகும்
என் தேசத்து நினைவலைகள்!
பலமாய் வீசும் காற்றில்
முற்றத்து மல்லிகைப் பந்தலில்
உதிர்ந்து விழும் பூக்களும்…
மாமரங்களின்
பழுத்த இலைகளும் சருகாகி
காற்றோடு பறந்து போகும்!
தூறல் போடும் வானம்
மண்வாசம் கிளர்த்தி
நாசியைத் துளைத்து
உள்ளே நுழையும் வாசம்!
அடடா! … அடடா!
இதைப் பார்ப்பதிலும்
அனுபவிப்பதிலும்
எத்தனை சுகம்தான்
இந்த மனதுக்கு…?
சேவல் கூவும் காலை!
தென்றல் தீண்டும் வாசல்!
அழகாய் உதிக்கும் சூரியன்!
கருக்கல் மாலைப் பொழுது!
கூடி வாழ்ந்த வீடு!
ஓடி விளையாடிய முற்றம்!
நான் வளர்த்த பூனைக் குட்டி!
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி!
நீச்சல் அடித்த குளம்!
மீன் பிடித்த வாய்க்கால்!
துள்ளித் திரிந்த சாலை!
பள்ளி பயின்ற கூடம்!
ம்…
இவை எல்லாமே
இன்னும் இன்னும்
என் நெஞ்சுக் குழிக்குள்
எஞ்சிக் கிடக்கும்
என் தேச வாசனைகள்!
ஓ!…
அந்தச் சொர்க்கமான
நிமிசங்களை எல்லாம்
எந்த வரிகள் கொண்டு
என்னால் பூரணப்படுத்த முடியும்…?
எண்ணிப் பார்க்கும் போது
ஏதோ ஒரு வெறுமை
நெஞ்சை அடைத்து
என்னைக் கொல்லாமல் கொல்லும்!
வாய் வலிக்கக் கேட்கிறேன்
நான் நடந்த பாதைகளில்
மீண்டும் என் கால் பதியுமா…?
ம்ம்…
இப்படித்தான்
மனதில் பொத்தி வைத்திருக்கும்
மலரும் நினைவுகளில் வீழ்ந்து
ஈரமாகும் என் விழிகளை…
யாரும் அறிந்திருக்கப் போவதில்லை
அறிந்த என் தலையணையைத் தவிர!
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9154&st=0#entry131847

புனிதா சொன்னது,
ஜூலை 15, 2008 இல் 12:23 மு.பகல்
//நான் நடந்த பாதைகளில்
மீண்டும் என் கால் பதியுமா…?//
இனி விடியும் பூமி அமைதிக்காக விடியவும் உங்கள் கனவு நனவாகவும் பிராத்திக்கிறேன்.
thamizhparavai சொன்னது,
ஜூலை 15, 2008 இல் 3:26 பிற்பகல்
//நான் நடந்த பாதைகளில்
மீண்டும் என் கால் பதியுமா…?//
என்னுள்ளும் சுவடுகள் ஏற்படுத்திய வரிகள்…
இன்றுதான் வருகிறேன்..கொட்டிக் கிடக்கும் கவிதைப்பூக்களை மிதித்துவிடாமல் கடந்து(பறந்து) பார்த்தேன்..விரைவில் வந்து நுகர்ந்து பார்த்துச் சொல்கிறேன்..
பறவைப் பார்வையிலேயே நெஞ்சில் பதிந்து விட்ட வரிகள் சில..
//யாரும் அறிந்திருக்கப் போவதில்லை
அறிந்த என் தலையணையைத் தவிர//
//அறிவுக்கும், உணர்விற்கும்
அகப்படாத எதற்குள்ளோ வீழ்ந்து
வாழ்க்கையின் வளைவுகளில்
முட்டி மோதும் உராய்வுகளோடு//
//வெறுமைகளின் சாயல்களோடு
அலையும்
என் உள்ளத்தின் கீதம்
என்றாவது
உன்காதுகளில் கேட்டதுண்டா…?
//
நர்மதா சொன்னது,
ஜூலை 28, 2008 இல் 2:28 பிற்பகல்
நெஞ்சோடு ஒட்டிக்கொள்கின்றது கவிதை சொல்லும் கணங்கள். நன்றிகள். தொடருங்கள்
யாழ்_அகத்தியன் சொன்னது,
ஆகஸ்ட் 15, 2008 இல் 10:07 மு.பகல்
இப்படித்தான்
மனதில் பொத்தி வைத்திருக்கும்
மலரும் நினைவுகளில் வீழ்ந்து
ஈரமாகும் என் விழிகளை…
யாரும் அறிந்திருக்கப் போவதில்லை
அறிந்த என் தலையணையைத் தவிர!
வாழ்த்துக்கள் சத்தியா, நல்ல கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்