32 – அந்தக் கணப் பொழுதுக்காய்!



அந்தக் கணப் பொழுதுக்காய்…!
————————————-

வீட்டின் கூரையில்
ஏறி நின்று
சேவல் கூவி
பொழுது விடிந்தது எனச் சொல்லி
எழும்பிய காலம் தொலைத்து…

குருவிகளின்
சுப்ரபாதங்கள் கேட்டு
பொழுது விடிந்தது எனச் சொல்லி
எழும்பிய காலம் தொலைத்து…

கிழக்கு வெளுக்கு முன்னே
கடிகாரத்தின் அலாரம்
இதய ஓசையை அதிரவைக்க
துடித்து எழுந்து
இயந்திரத்தோடு இயந்திரமாகி
இயந்திர மனிதானாய்
இன்று நீ.

நீர்க் குமிழி போன்று
நிலைக்க முடியாத
இந்த வாழ்க்கையில்
அடுத்த நிமிடம் என்பது கூட
உத்தரவாதம் இல்லாத நிலையில்…

மின்னலாய் மறையும்
நாட்களுடன் சேர்ந்து
வருடங்களும் தொலைந்து விட
இளமையும் கூட
தொலைந்து போவதை
நீயும் உணர மறுக்கின்றாய்.

எளிமையான உள்ளத்தோடும்
கள்ளம் கபடமற்ற
பாசப் பிணைப்போடும்
ஆனந்திக்கத் துடிக்கும்
இந்த வாழ்வுக்கு
ஆயுள் குறைகிறது.

கண்ணோடு இமை
சங்கமித்த காலம் முதல்
தினமும் கனவோடு
உன் உருவம் சங்கமித்து
தடம் புரள்கிறது.

எப்போது நீயும்
விழிக்கப் போகின்றாய்…?

வானவில்லின்
வர்ணங்கள் பூசிய
உன் வண்ண முகம்
வாடிவிடாமல்
பாதுகாத்துக் கொண்டு…

அன்னை, தந்தை
உடன் பிறப்புக்களின்
அத்தனை அன்பையும்
மொத்தமாய்
உன்னிடம் எதிர்பார்த்த படி
இப்போதும் நான்!

என்னோடு சேர்ந்து சிரிப்பதற்கும்
என்னோடு சேர்ந்து அழுவதற்கும்
உன்னை விட்டால்
எனக்கென யாருள்ளார்
இந்த உலகில்…?

என் இதயத்தோடு
இதயம் வைத்து
நீ பேசும் போது
உன் நெஞ்சுக்குள்
முகம் புதைக்கும்
அந்தக் கணப் பொழுதுக்காய்…

நீ அன்பாய் எனை அணைத்து
என் தலைகோதிவிடும் போது
என் வேதனைகளை எல்லாம்
தூக்கி எறிந்து விட்டு
உனக்குள் நான் தொலையும்
அந்தக் கணப் பொழுதுக்காய்…

என் ஆயுளையே
உனக்காய் அர்ப்பணித்து
இன்றும்
உனக்காய் என் காத்திருப்பு!

*** இவள் – சத்தியா ***

1 மறுமொழி

  1. vani சொன்னது,

    மே 16, 2008 இல் 4:57 பிற்பகல்

    vanakam saththiya!
    nalama? unkal kaithiru veen pookathu sathiya anntha kanapooluthukkai


மறுமொழியொன்றை வழங்குக