43 - உன் நினைவாய்!
ஏப்ரல் 15, 2008 இல் 11:39 நான் (43 - உன் நினைவாய்!)
Tags: உன் நினைவாய்...

உன் நினைவாய்…
ஓ!…
சித்திரை வருடப் பிறப்பு!
என் வாழ்வின்
நித்திரை தொலைத்து
முத்திரை பதித்து விட்டுச் சென்ற
சித்திரை வருடப் பிறப்பு இது!
கனவுகளைக் கருக்கி
என் உள்ளமெல்லாம்
விரக்தியையும்
வேதனையையும்
விதைத்து விட்டுச் சென்ற
அந்த நாளை
இன்றும் மீட்டிப் பார்க்கிறேன்!
ஓ…
இதயம் வலிக்க
விழி நீர் வடித்து
கதறிக் கதறி
எல்லோரும் கண்ணீரில் மூழ்க…
சிரித்த முகத்துடன்
விழிகள் மூடியபடி
விறைத்துப் போய்க்
கிடக்கிறாய் நீ!
பின்…
பட்டுச் சேலை கட்டி
பொட்டு வைத்துப்
பூச் சூடி
சுமங்கலியாய் நீயும்…
தலையாட்டும்
விதியின் கையில்
எம்மை விளையாட்டுப்
பொம்மையாக்கி விட்டு…
இதே போல் ஒரு
சித்திரை வருடப் பிறப்பில்தான்
விடைபெற்றுச் சென்றாய்!
ம்…
என் அன்னையே!
இன்றும் கூட
உன் நினைவாய்
என்னிடம் எதுவுமே இல்லை!
பிஞ்சு வயதில்
என் நெஞ்சில்
நீ தந்து விட்டுச் சென்ற
இந்த நிகழ்வின்
நினைவுகளைத் தவிர…!
