47 - பாசவலை அறுத்தாயோ…?
மார்ச் 19, 2008 இல் 7:31 பிற்பகல் (47 - பாசவலை அறுத்...)
Tags: பாசவலை அறுத்தாயோ...?

பாசவலை அறுத்தாயோ…?
கண் விழித்துப் பார்க்கின்றேன்
கண் எதிரே நீ!
கதை தொடுக்க முயன்றும்
கடிவாளம் போட்டவளாய்
மௌனித்து நிற்கின்றேன்!
ஓ!…
முட்டைகள் மீது
பின்னங் கால்களால்
மண் கிளறி மூடி விட்டு
திரும்பிப் பாராது செல்லும்
ஆமையைப் போலே…
பணம் குணத்தை மாற்ற
வசதிகளும் வாய்ப்புகளும்
வளர்ந்த நிலை மறக்க…
வந்த பாதை மறந்து
வாழ்ந்த வீடு கடந்து
விரைந்து செல்கிறாய் நீ!
உனைப் பார்த்ததும்
விக்கியழாக் குறையாக
விம்மி விழும்
மெல்லிய விசும்பல்கள்
என் நெஞ்சில் ஒலிக்கிறது!
இது பழகிய அடிதான்
என்றாலும்
மீண்டும் மீண்டும்
வலிக்கத்தானே செய்கிறது!
ம்…
எனக்குள்ளும்
உனக்குள்ளும்
ஓடும் ஒரே இரத்தத்தினுள்
எத்தனை
முரண்பாடுகள் பார்த்தாயா…?
போடா போ!
இனி என்ன…
நீ வாழ்ந்த இந்த இடத்தையும்…
நீ நேசித்த இந்தப் பூக்களையும்…
நீ அடிக்கடி பாடும்
அந்தப் பாடலையும் பாடிக் கொண்டு…
உன் நினைவுகளோடு
வாழ்ந்து விட்டுப் போகின்றேன்!
