வரம் ஒன்று தருவாயா…?
********************
உயிரான உறவொன்றின்
இனிதான உணர்வுகளை
உன்னவளாய் இருப்பதனால்
உள்ளத்தால் அறிகின்றேன்!
கனவுகளின் அலைமோதல்
கவிதைகளின் பிரசவங்களாய்
தினம் தோறும்
ஒரு புதுத்தேடல்!
காலங்கள் கடந்து
கவலைகள் மறந்து
காதலில் இணைவதில்
இப்படியும் ஓர் சுகமா…?
அறிய வைத்தாய்
உன் அன்பால் என் அன்பை!
உள்ளத்து நினைவுகளை
உரிமையாய் நீ கொடுத்து
என்னை நான் மறந்து
உன்னில் எனை தேடவைத்தாய்!
பயணங்கள் பிடிக்கிறது!
பகலெல்லாம் பிடிக்கிறது!
இரவும் இனிக்கிறது!
அதிகாலை அவசரத்திலும்
அசைவதில்லை நீ
அலட்சியமாய்!
பசி என்பதை
எங்கோ கேட்ட ஞாபகம்!
தூக்கத்தைத் தொலைப்பது
இவ்வளவு சுலபமா…?
தூக்கத்தைத் தூக்கி வளர்த்த நான்
அதைத் துக்கமின்றி விட்டெறிந்தேன்
உன் நினைவால்!
பேச்சில் கொஞ்சல்!
மூச்சில் ஏக்கம்!
இல்லாத கோபத்தை
பொல்லாத அன்பினால்
சீண்டிப் பார்க்கும் இன்பம்!
உனக்கு மட்டுமல்ல
அது எனக்கும்தான்!
என்றோ கூறி விட்டேன்
உன்னவள் நானென்று!
நீ இன்றும் கேட்கிறாய்
என்னவளா…?
நீ என்று!
எனக்கும் தெரியும்
உனக்கும் தெரியும்
உனக்கு என்னையும்
எனக்கு உன்னையும்
ஏன் பிடிக்கிறது என்று!
உன்னைக் கேட்டால்
தெரியாது என்பாய்!
ஆனாலும் பிடிக்கிறது
எம்மை எமக்குப் பிடிப்பது!
அன்பினால்
எனை ஆளும் உன்னிடம்
வரம் என்று நான் கேட்டால்
மறுப்பாயா…?
உன் அன்பில் எந்நாளும்
வாழும் வரம் வேண்டும்!
தருவாயா…?
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=255&st=0#entry1180

Sathya சொன்னது,
நவம்பர் 10, 2009 இல் 9:18 மு.பகல்
Really supurb.