
பட்டுச் சேலை கட்டி!
—————————–
என் அம்மா
கட்டிக்கொள் என்று தந்த
பட்டுச் சேலை
என் அருகிலிருந்தும்…
காரிருள் சூழ்ந்து
என் மனமும்
மரத்துப் போனதால்
நானோ
விட்டத்தைப் பார்த்த படி
கட்டிலில் கிடக்கின்றேன்!
எத்தனை தடவை
பட்டுச் சேலை கட்டிய என்னை
ஒரு பார்வைக்கு வைக்கப்பட்ட
பொம்மையைப் பார்ப்பது போல்
பார்வையிட்டுச் சென்றார்கள்…?
எத்தனை தடவை
பெண் வெள்ளை இல்லை
என்று சொல்லக் கேட்டு
என் மனமும்
பாறையாய்ப் போனது…?
சமைக்கத் தெரியுமா…?
சங்கீதம் தெரியுமா…?
என்று கேட்டு
திக்குவாயா என்று
சோதனையும் செய்தார்கள்.
என் மனதினையும்
என் உணர்வுகளையும்
புரிந்து கொள்ளும் இதயங்கள்
ஒரு போதும் வரவில்லை.
நாளை நீ வருவதாய்
என் அம்மா சொன்னார்.
நீயாவது என் வெள்ளை மனதை
புரிந்து கொள்ள மாட்டாயா
என்று புண்பட்ட நெஞ்சம்
கேட்டுத் தவிக்க…
இதயத்தின் ஒரு மூலையில்
சின்னதாய் ஓர் ஆசை எழ
எண்ணத் தூரிகை கொண்டு
உன் முகத்தை
வரைந்து பார்க்கின்றேன்!
நீயாவது என்னை
ஏற்றுக் கொள்வாய் என்று
எம்பி எம்பிக் குதிக்கும்
இதயத்துடன்
பட்டுச் சேலை கட்டி
உன் வருகைக்காய் காத்திருந்தேன்
நீயும் கூட
வாராமலேயே போய் விட்டாயே…!

gopi சொன்னது,
ஜனவரி 23, 2007 இல் 2:56 பிற்பகல்
ur poetry is nice… make ur font size smaller..
visit my web http://www.tamizhan4u.blogspot.com & Comment on it..