
நிலவுக்கு ஒரு கடிதம்!
——————————-
எத்தனையோ முகம் பார்த்தேன் அத்தனையும் மனதிலில்லை
சித்திரையே உன் வதனம் சிந்தையிலே பதிந்ததடி!
சொத்தெனவே சேர்த்தெடுத்து முத்தெனவே காத்திருந்து
முத்திரைகள் பதித்து நல் முத்தமழை பொழிந்திடுவேன்!
மொத்தமென சேர்ந்து வந்த அத்தனை துயர்களையும்
மொத்தமென மறக்க வைத்தாய் உன்முகத்தை பதிக்கவைத்தாய்!
பத்தரை மாற்றுப் பசும் பொன்னே என் பைங்கிளியே
இத்தரை சாற்றும் நீ என் சொந்தம் என்று!
சித்தத்தில் நீ நிறைந்து சிறு பிறையாய் நீ நுழைந்து
மொத்தத்தில் வளர் பிறையாய் முழு மதியாய் என் மனதில்!
சித்தத்தில் இணைந்த காதல் சிறந்த நல் சுகங்கள் தர
மொத்தத்தில் உன் நினைவில் என்னையே நான் தொலைத்தேன்!
எத்திசை திரும்பினாலும் உன் வதனம் தெரிகையிலே
மொத்தத்தில் பைத்தியமாய் என் மனதை அலைய வைத்தாய்!
நித்தமும் புதிய சுகம் நீங்காமல் இணைத்துக் கொண்டு
மொத்தமாய் உன் நினைவால் மோகனமாய்க் கவி வடிப்பேன்!
நித்திரையை மறந்து நெஞ்சில் நித்தமும் உனைச் சுமந்து
நித்திரைக்குப் பகையாகி என் விழிகள் தவிக்கிறது!
இத்தனை நாள் பூட்டி வைத்த என் மனதின் காதல் சொல்ல
எத்தனை நாள் உன் வரவைப் பார்த்திருந்தேன் கண்மணியே!
சித்திரமாய் என் மனதில் சிலை வடித்த நிலவுக்கு
பத்திரமாய் மனம் திறந்தேன் பாவையவள் கை சேர!
முத்திரையாய் பதித்து வைத்த இத்தனை நாள் காதல்தனை
மொத்தமாய் அனுப்புகிறேன் என் நிலவுக்கு ஒரு கடிதம்!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=2282&st=0#entry23881
