நினைவோ ஒரு பறவை…..
விரிக்கும் அதன் சிறகை…..
பிஞ்சு வயதில் என் நெஞ்சில் பதிந்த ஓர் உண்மைச் சம்பவத்தை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து… இந்தப் பதிவேட்டை பதியத் தொடங்குகின்றேன்.
எம் தாய் நாட்டில் வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல்… இவை போன்ற திருநாட்கள் வரும் போதெல்லாம் எமக்குள் அளவில்லாத கொண்டாட்டமும் மகிழ்ச்சியும்தான்… இல்லையா? ம்… அந்த வகையில் அப்போது வந்த ஓர் நல்ல நாள் பெரு நாளில் நடந்த ஓர் உண்மைச் சம்பவமே இந்தச் சம்பவம் ஆகும்.
அது ஒரு சித்திரை மாதம். சித்திரை வருடப் பிறப்பிற்காக எமது காத்திருப்பு. பலகாரங்கள், வெடிகள், பூந்திரிகள் இவற்றின் ஆவல் ஒரு பக்கம். மறு புறம் வாங்கி வைத்திருக்கும் அந்த புத்தம் புதிய அழகான பச்சைச் சட்டையை போட்டு எல்லோருக்கும் காட்டத் தவிக்கும் குழந்தைத்தனம் ஓர் புறம்.
ஓவ்வொரு நாளும் அம்மாவிடம் அந்தச் சட்டை போடுவது பற்றியே என் கதைகள் நீண்டு கொண்டு செல்லும். அப்போது என் அம்மா சொல்லுவா…
“இந்தச் சட்டையை வருடப் பிறப்பன்றுதான் போட வேணும். அதுவும் மருத்து நீர் வைத்து குளிச்சுப் போட்டுத்தான் புதிதாய் போட வேணும்”… என்று என் அம்மா சொன்னார்.
ஆனாலும்… அந்த வருடப் பிறப்பு பிறக்க இன்னும் சில நாட்கள் இருந்தன. அந்த நாலைந்து நாட்கள் வரை காத்திருக்க அந்தப் பிஞ்சு வயதில் எனக்குப் பொறுமை மிகவும் குறைவாகவே இருந்தது.
அப்படியானால் என் அப்பாவிடம் கேட்டு விட்டால்? … ம்… அப்பா என் மீது வைத்திருக்கும் செல்லத்தால் விட்டுத் தருவார் என்று ஒரு நட்பாசை வேறு.
ம்… சரி என அப்பாவிடம் போய் அந்தச் சட்டையை போட ஐஸ் வைத்தேன். ம்கூம்… அங்கேயும் நல்ல பதில் கிடைக்கவில்லை. அப்பாவும் அம்மா கூறிய அதே பதிலைத்தான் சொன்னார்.
ம்… அப்படியானால் என்ன செய்ய முடியும்? இனி வருடப் பிறப்பு வரும் நாள் வரை பார்த்துப் பார்த்து காத்திருக்க வேண்டியதுதான்… என்ற நிலைக்குத் நான் தள்ளப்பட்டேன்.
இந்த நிலை எனக்கு மட்டுமல்ல… இதே நிலைதான் என் சகோதரர்களின் நிலையும்.
சரி… இனி என்ன செய்வது? வருடப் பிறப்பிற்கு இன்னும் எத்தனை நாள் இருக்கின்றது?… என்று தினசரி எண்ணிய படியே, ஒவ்வொரு நாளும் அந்தச் சட்டையை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாக நாட்களைக் கழித்துக் கொள்கின்றேன்.
ம்… நான் மட்டுமல்ல… நாம் காத்திருந்த அந்த வருடப்பிறப்பிற்கு இன்னமும் ஒரே ஒரு நாள்தான் இருந்தது. ஆனால் முதல் நாள் எம் வாழ்க்கையில் நாம் எதிர் பாராத அந்தப் பேரிடி வந்து விழுந்தது.
அன்று மாலை 3 மணியிருக்கும் நாமெல்லோரும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென வீட்டில் ஒரே பரபரப்பு… அழுகைச் சத்தம் வேறு கேட்கிறது. என் வீட்டிற்கு அருகில்தான் எனது அம்மம்மா வீடும் இருந்தது. அங்கிருந்தும் அம்மம்மா, அம்மப்பா, அன்ரிமார் எல்லோரும் கதறி அழுதபடி எங்கள் வீட்டிற்கு ஓடி வருகிறார்கள். எனக்கு அது ஏன் என எதுவுமே புரியவில்லை. விளையாடிக் கொண்டிருந்த நாமெல்லோரும் உள்ளே ஓடிச் செல்கிறோம்.
அப்போது அன்ரி என்னைக் கட்டி அணைத்தவாறே கதறி அழுகிறார். அந்த அழுகைக்கு காரணம் என்ன என்று தெரியாமலேயே என் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நானும் அழுகிறேன்… அழுதவாறே…
“ஏன் அன்ரி எல்லோரும் அழுகின்றீங்கள்?” … நான் அன்ரியின் முகத்தைப் பார்த்தவாறே கேட்கின்றேன். அன்ரி என்னை தூக்கி அணைத்தவாறே…
“உங்களை எல்லாம் தவிக்க விட்டு உங்கட அம்மா செத்துப் போயிற்றாவடி”… என்று சொன்னா. அன்ரி அப்படிச் சொன்னதும் அங்கே எல்லோரின் அழுகையும் இன்னமும் பலமாக ஓங்கி ஒலிக்கிறது.
அம்மா செத்துப் போனாவா?… அப்படி என்றால் என்ன?…
எனக்கு எதுவுமே விளங்கவில்லை. அருகில் நின்ற அக்காவிடம் கேட்கிறேன். அவளும் சிறியவள்தான். அவளும் தனக்குத் தெரியாது என்று சொன்னாள். சகோதரர்கள் எவருக்குமே அப்படி என்றால் என்ன என்று தெரியவில்லை. எல்லோரும் திரு திரு என முழித்தவாறே ஒதுங்கிக் கொள்கின்றோம்.
நேரம் கரைகின்றது. இடையிடையே அம்மாவின் அருகே சென்று நான் அம்மாவின் முகத்தை நோட்டம் விடுகின்றேன். சிரித்த முகத்துடனே பொட்டும் வைத்தபடி… மாலைகளுடன் அமைதியாக படுத்துக் கிடக்கின்றாள்.
அம்மாவை ஏன் இப்படி வைத்திருக்கிறார்கள்?… அம்மா ஏன் எழுந்திருக்கவில்லை? ஏன் கண் விழித்துப் பார்க்கவில்லை? ஏன் ஒரு வார்த்தை கூட கதைக்கவில்லை?…
என்று எனக்கு எதுவுமே புரியாமல் ஓடிப் போய் அப்பாவின் மடிக்குள் புதைந்து கொள்கின்றேன்.
அங்கே அப்பாவும் அழுகின்றார். அப்பா ஏன் அழுகின்றார்? அப்பா ஓர் நாள் கூட அழுவதில்லையே? … அப்பா அழுவதை அன்றுதான் நான் முதன் முதலில் பார்க்கின்றேன். அப்பா அழுவதைப் பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பாவின் தோள்களை கட்டிப் பிடித்தவாறே நானும் அழுகின்றேன்…
பொழுதாகிப் போனதே இன்னும் தூக்கமா…?
சொல்லாமல் போனது தாயே நியாயமா…?
கூட்டை விட்டுத் தாய்க் கிளி பறந்ததெங்கே…?
தனது 30 வயதிலேயே கட்டிய மனைவியை இழந்து… தன் வாழ்க்கையைத் தொலைத்து அழுது துடிக்கும் என் தந்தையின் அழுகை ஓரு புறம்…
காரணம் புரியாமல் கதறும் குழந்தைகளாய் எங்கள் அழுகை ஓர் புறம்…
அது மட்டுமல்ல… பிறந்து 15 நாள் நிறைந்த பச்சிளம் பாலகனாய் தாய்ப் பாலுக்காக தொட்டிலில் தேம்பி அழும் என் குட்டித் தம்பியின் அழுகை ஓர் புறம்…
தாம் ஆசையாய் ஆசையாய் பெற்றெடுத்த தங்கள் மூத்த மகளைப் பறி கொடுத்த தாய், தந்தையின் அழுகை ஓரு புறம்…
தமது உடன் பிறப்பை பறிகொடுத்துக் கதறும் சகோதரங்களின் அழுகை ஒருபுறம்…
உற்றார், உறவினர்களின் ஒப்பாரி ஒரு புறமுமாய் அன்றிரவு முழுவதும் கண்ணீரில் கரைகின்றது.
பொழுதும் விடிகின்றது. நாம் ஆசை ஆசையாய் காத்திருந்த அந்த வருடப் பிறப்பும் பிறக்கின்றது. அம்மாவின் இறுதிச் சடங்குகள் யாவும் நடைபெறுகின்றன.
பந்தம் பிடித்ததுவும்… அரிசி போட்டதுவும்… பூப்போட்டு அம்மாவை தொட்டுக் கும்பிட்டதும்… எல்லாம் முடிந்து அம்மாவை வைத்து பெட்டி மூடும் போது யாவரும் கதறி அழுத காட்சிகளும், பின் என் அம்மாவை ஊர்வலமாய் எடுத்துச் சென்ற காட்சிகளும்… எல்லாமே என் மனத்திரையில் தழும்பாய் பதிந்து… இப்போதும் அவை யாவும் கண்முன்னே நிழலாடுகின்றன.
நாம் காத்திருந்த அந்த வருடப் பிறப்பு கண்ணீரைத் தந்து என் நெஞ்சில் அழியாத ஓரு இடத்தைப் பிடித்து விடுகின்றது.
நாட்கள் மெல்ல நகர்கின்றன. அடிக்கடி மாறி மாறி நாம் அம்மாவைத் தேடி அழுகின்றோம்.
“அம்மா சாமியிடம் போயிற்றா நாளை வருவா”… என்று அப்பா எம்மைத் தேற்றிக் கொள்கின்றார். பகலெல்லாம் ஒருமாதிரி எம்மைத் தேற்றினாலும், மாலை நேரம் ஆனதும் அம்மாவைத் தேடி அழும் எம் விழிகள் சமாதானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து… தினசரி அழுகையிலேயே எம் இரவுகள் கரையும்.
அப்பா எமக்கெல்லாம் சமாதானம் சொல்லியவாறு செய்வதறியாமல் தவித்துப் போய் நிற்பார்.
இறைவா உனக்கொரு கோயில் உண்டு
இரவும் பகலும் தீபம் உண்டு
எமக்கென இருந்தது ஓர் விளக்கு
அதனுடன் தானா உன் வழக்கு
அதனுடன் தானா உன் வழக்கு…?
நாட்கள் மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்கள் ஆகி வருடங்கள் சில உருண்டோடின. பாடசாலைக்குள் என் கால்கள் பதித்த காலப் பகுதியில்…
என்னுடன் படித்த சக மாணவி ஒருத்தி நல்ல அருமையாக கதை சொல்வாள். அதிலும் பேய்க் கதை சொல்வதில் நல்ல விண்ணி. கடவுள் பேய்க் கதை சொல்
வதற்கென்றே சிலரை இந்த உலகத்தில் படைத்துள்ளார். அதில் ஒருத்திதான் இவள் என்றும் சொல்லிக் கொள்ளலாம். சாதாரணமாகவே அவளுக்குப் பெரிய கண். அந்தக் கண்ணை பேய் மாதிரி உருட்டி உருட்டி கையால் செய்கையும் காட்டி நல்ல அருமையாக பேய்க் கதை சொல்லுவாள். அவளின் பேய்க் கதை ரசிப்பதற்கென்றே வகுப்பில் ஓர் கூட்டம் இருந்தது. அதில் நானும் ஒருத்திதான். கதை கூறி முடிய கூறுவாள்…
“சத்தியா கவனம் இரவில் உன் அம்மா பேயாக வந்து உன் கழுத்தை திருகி விடுவா”… என்றெல்லாம் பயப்படுத்தி விடுவாள். அப்போது இல்லை அப்படி இல்லை… என அவளுடன் வாதாடினாலும் கூட… உள்ளே ஓர் பயம் எனக்குள் வந்து தொற்றிக் கொள்ளும்.
நானும் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அவள் சொன்ன பேய்க் கதையை என் சகோதர்களுக்கு கூறி விடுவேன். பிறகு என்ன? மாலை நேரம் ஆனதும் எல்லோருக்கும் பயம் பிடித்து விடும். வெளியில் காலடி வைக்க ஒரே நடுக்கம். நானோ இரவில் பயங்கரக் கனவு கண்டு கதறி அழுவேன். அப்படி ஓர் தடவைபயங்கரக் கனவு கண்டு பயந்து வாய் புலம்பத் தொடங்கி விட்டேன். அத்தோடு பயங்கரக் காச்சலும் பிடித்து விட்டது.
ஏன் என அப்பா விசாரித்த போது நான் அவள் சொன்ன பேய்க் கதை பற்றி அப்பாவிற்கு சொன்னேன். அப்பாவிற்கு கோவம் வந்து விட்டது. அப்பா எனக்கு தைரியம் சொல்லி விட்டு நேரடியாக பாடசாலைக்கு போய் ஆசிரியரிடம் இது பற்றிக் கூறி விட்டார். பேய்க் கதை சொல்பவளுக்கு தண்டணை கொடுத்த ஆசிரியர் இனிமேல் சொல்லக் கூடாது என்றும் கூறி விட்டார். இப்படி எத்தனை துன்பங்களை என் அப்பா சுமந்தார் என இப்போது நினைக்கும் போது என் மனம் பாரமாகின்றது.
காலம் செல்லச் செல்ல… இந்தப் பாடசாலைப் பருவத்தில் சொல்ல முடியாத பல சோகங்களையும், எண்ணற்ற ஏக்கங்களையும் என் நெஞ்சம் சுமக்கத் தொடங்கியது. இதை எல்லாம் யாரிடமும் சொல்ல முடியாது என் நெஞ்சுக் குழிக்குள் புதைக்கத் தொடங்கினேன்.
அம்மாவின் இழப்பு அதிகமாய் என்னை வாட்டியது. பாடசாலையில் மற்றவர்கள் அம்மா பற்றிக் கதைக்கும் போதும், உணவு ஊட்டி விடுவது,உடை
கள் மாற்றி விடுவது, தலை இழுத்து விடுவது, இவை பற்றிக் கூறும் போதெல்லாம் பல தடவைகள் நான் அழுதிருக்கின்றேன்.
நாம் அந்தப் பிஞ்சு வயதில் என்ன பாவம் செய்தோம்? எதற்காக கடவுள் இப்படி ஒரு பெரிய தண்டணையை எமக்குத் தந்தார்? என்று நினைக்கும் போது என்னை அறியாமலேயே கடவுளில் ஓர் வெறுப்பு வந்ததும் உண்டு.
பருவங்கள் மாற மாற புரிந்துணர்வுகள் வளர்ந்தமையால் அப்பாவின் நிலையும் புரிந்தது. அப்பா அடிக்கடி சோகத்தில் துவண்டு தனிமையில் கண்ணீர் சிந்துவதையும் நான் கண்டிருக்கிறேன். அதனால் என் மனச் சோகத்தை எனக்குள் புதைத்து தனிமையில் அழுது என் மனப்பாரத்தைக் குறைக்கத் தொடங்கினேன்.
இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வகையான சோகம் வாட்டி
வதைத்தது.
மூன்று வருடங்கள் கழிந்து மீண்டும் ஓர் சித்திரை வருடப் பிறப்பு பிறந்தது. அந்த நாளில் அம்மாவிற்கான திதி கொடுக்கப்பட்டது. உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் வந்து கலந்து சிறப்பித்து விட்டு… மாலை வேளை எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். அந்த வேளையில்…
தன் சோகங்களையும், குடும்பச் சுமைகளையும் சுமக்க முடியாமலோ
என்னவோ தெரியவில்லை… அப்பா நஞ்சருந்தி விட்டார். அதிக நேரமாக அப்பாவைக் காணாது தேடிய போது… பூட்டப்பட்ட அறைக்குள் அப்பா மயங்கிய நிலையில் கிடந்தார்…
மீண்டும் ஒரு சித்திரை வருடப் பிறப்பில் எம் வாழ்வில் மீண்டும் ஒரு
பேரிடி விழுகின்றது.
அம்மாவும் நீயே!
அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும்
தெய்வமும் நீயே !!!!…………..
நஞ்சருந்திய அப்பா வைத்திய சாலையில் அனுமதிக்கப் படுகின்றார்.வைத்தியர்களின் பல மணி நேரப் போராட்டங்களின் பின்னர் அப்பா மெல்லக் கண் திறக்கின்றார்.
ஆனாலும் வைத்தியர்களுடன் ஒத்துழைக்க மறுத்ததனால் பெரிய டாக்ரரிடம் அடி வாங்கி கன்னத்தில் தழும்பு கூட காணப்பட்டது. ஏனென்று யோசிக்கிறீர்களா?
ம்… நாமெல்லோரும் இதே வைத்தியசாலையில்தான் பிறந்தோம். அப்போது தொடக்கம் இந்த டாக்ரர் அங்கு கடமையாற்றியதால் எமது நிலமை கள் சகலதையும் இந்த டாக்ரர் அறிவார். அதே வேளை அம்மாவின் இறப்பின் போதும் கூட இவரின் உதவிகள் கிடைத்ததுண்டு. ஆகையால் உரிமையுடன் அடி போட்டுள்ளார்.
எப்படி இந்தக் குழந்தைகளை விட்டு சாக முடிவெடுத்தாய்? என்று கேட்டுத்தான் அடித்ததாகப் பின்னர் அறிந்தோம். அப்பாவைப் பார்க்க நாமெல்லோரும் வைத்தியசாலைக்குப் போகின்றோம். எம்மை எல்லாம் கண்டதும் அப்பாவும் அழுது விடுகின்றார். யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. அந்தக் கண்டத்திலிருந்தும் என் அப்பா மயிரிழையில் தப்பி விடுகின்றார்.
வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவில் பலத்த மாற்றங்கள் காணப்பட்டன. தன்னையே முழுமையாக எமக்காக அர்ப்பணிக்கத் தொடங்கினார். கோழி தன் குஞ்சுகளைக் காப்பது போல் பொத்திக் காக்கத் தொடங்கினார். எமக்கு உடையிலோ, உணவிலோ, படிப்பிலோ, அல்லது வேறு எந்தத் தேவைகளிலும் எந்த ஓர் குறையும் வைக்காது… ஒரு போதும் எம் கண்களில் இருந்து ஒரு துளிக் கண்ணீரைக் கூட விழ விடாது கவனிக்கத் தொடங்கினார்.
அப்போது உறவினர்கள் அப்பாவிற்கு இன்னுமோர் திருமணம் செய்து வைப்பதற்காக முயற்சிகள் எடுத்தனர். ஆனால் அப்பாவோ அதற்கு மறுத்து விட்டார். அதற்குக் காரணமும் உண்டு.
என் அப்பாவிற்கு 10 வயதிருக்கும் போதே அப்பாவின் அம்மாவும் இறந்து விட்
டாவாம். பிள்ளைகளிற்கு ஓர் அன்னை வேண்டும் என்பதற்காக அப்பப்பா மறு
மணம் செய்து கொண்டாராம். பிள்ளைகளுக்கு என வந்த இரவல் அம்மாவோ பிள்ளைகளைக் கவனிக்காது… பிறத்தி காட்டி பிள்ளைகளைக் கொடுமைப் படுத்தத் தொடங்கி விட்டாவாம்.
அந்தக் கொடுமையின் வடு அப்பாவிற்கு இருந்தமையால் அப்பா தன் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார். அத்தோடு உறவுகளும் மெல்ல மெல்ல ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கினார்கள். காரணம் எங்களைப் பார்க்க வேண்டிய பொறுப்பு தம் தலையில் பொறிந்து விடும் என அவர்கள் பயந்தார்கள். ஆனால் அப்பாவிற்கு அப்படி ஓர் சிந்தனையே இருக்கவில்லை.
காலங்கள் கரைந்தன. அப்போது எனக்கு 12 வயது. ஓர் நாள் இரவு அப்பா ரக்ரரில் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கும் போது, ஓர் சந்தியில் திரும்பும் வேளை ஒரு பெரிய விபத்துக்கு ஆளாகின்றார்.
ரக்கர் தடம் புரள்கிறது. அப்பா ரக்ரரின் கீழே மாட்டிக் கொள்கின்றார். ரக்கரின் 4 சில்லுகளும் மேலே காணப்பட… கீழே அப்பா நசிபட்டு விடுகின்றார். ரக்ரரின் சைலன்சர் அப்பாவின் கை, நெஞ்சு, வயிற்றுப் பகுதிகள் இவை எல்லாவற்றிலும் இருந்த தசையை அப்படியே கருக்கி எடுத்து விடுகின்றது. தலை, முகம் எல்லாம் பெரும் காயத்துடன் அதிக இரத்தம் வெளியேறிய நிலையிலும், நினைவற்ற நிலையிலும் அம்புலன்ஸ் மூலம் அப்பா மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுகின்றார்.
மீண்டும் நாம் தனிமையில் தவித்துப் போகின்றோம்…
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்…
மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட எங்கள் அப்பாவைப் பார்க்கப் போனபோது நாம் பயந்து துடி துடித்து விடுகின்றோம்.
என்ன கொடுமை இது? கண்களில் கண்ணீர் கரை புரண்டோட நாம் கதறி அழுகின்றோம். எம் அழுகையில் அந்த மருத்துவமனையே ஓர் கணம் கதிகலங்கி விடுகின்றது. எல்லோரும் எம்மைத் தேற்றுகின்றார்கள். எப்படி எம்மால் முடியும்? அப்பா அப்படி ஓர் கோலத்தில் தான் அங்கு கிடக்கின்றார்.
நினைவுகள் எதுவும் அற்ற நிலையில் மயக்கமாகக் கிடக்கின்றார். நாம் கதறி அழுகின்ற ஒலி எதுவுமே அப்பாவின் காதில் கேட்காத நிலையில் கிடக் கின்றார்.
அப்பாவின் இரண்டு கால்களை மட்டுமே நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. மிகுதிப் பகுதிகள் யாவும் பந்தமாகக் கட்டப்பட்டிருந்தது. அவ்வளவு கடுமை யான விபத்தில் சிக்கியிருந்தார். நாமும் சிந்திக்கக் கூடிய வயதில் இருந்தமை யால் எதிர் காலம் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கின்றோம். நினைக்கவே ஒரே பயமாக இருந்தது. அப்பாவிற்கு ஏதேனும் நடந்தால் நாம் அநாதைகளாகி விடுவோம். எம் எதிர்காலத்தை நினைக்க எமக்கு இருட்டாகவே தெரிந்தது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தோம்.
இந்த வேளையில் சொந்தம் என்றும், உறவென்றும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள்… எரிகிற வீட்டில் புடுங்கிற வரைக்கும் லாபம் என புடுங்கிப் போகத் தொடங்கினார்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல் நாம் தவிதவித்தோம். கிட்டத்தட்ட 3 வாரங்களாக அப்பா மயக்கத்திலேயே இருந்தார். பின் மயக்கம் தெளிந்த போதும் எம்முடன் கதைக்கக் கூட அவரால் முடியவில்லை.
கண்ணீர் மட்டும் கரை புரண்டோட ஆடாமல் அசையாமல் கிடந்தார்.
வாழ்க் கையே போர்க்களமானது. மனிதனாய் பிறந்தவனுக்கு சோதனைகள் வருவது இயற்கை தான். ஆனால் வாழ்க்கையே சோதனையாகி விட்டால்…?
எமக்கு ஆண்டவனில் அடியோடு வெறுப்பு ஏற்பட்டது. இனி எம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டிய நிலையில், எம் தலை விதியை நொந்து கொண்டு ஏதோ நடப்பது நடக்கட்டும் எம்மால் முயன்றவரை போராடுவோம் என்ற உறுதியுடன் சகோதரங்களுக்குள் ஒற்றுமையை மிக அதிகமாகப் பலப்படுத்திக் கொண்டோம். ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி நம்மை நாமே தேற்றிக் கொள்கின்றோம்.
தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்
உண்மைகள் தூங்காதே…!
மாதங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. எத்தனைதான் வசதி வாய்ப்புக்கள் எமக்கு இருந்தாலும் கூட… அன்பால்… பாசத்தால்… அரவணைப்பால் எம்மை அணைத்து… எப்போதும் எம் மனதை வருடிக் கொடுக்க அன்பான ஓர் ஜீவன் அருகில் இல்லாமல் வாழ்க்கையே போராட்டமாகி… இறுதியில் வாழ்வு என்பதே பிடிப்பற்றுப் போய் விடுகின்றது.
அதுவும் பிஞ்சு வயதில் தாயின் பாசத்தை இழப்பது என்பது மிகவும் கொடு மையானது. அது தான் தலை விதி என்று நொந்து கொண்டாலும் அதே வேளையில் தந்தையின் அன்பையும், பாசத்தையும் இழப்பது என்றால் அது கொடுமையிலும் கொடுமை அல்லவா…?
எமக்கு வேறு எதிலும் குறை இருக்கவில்லை. நினைத்தவை எல்லாம் கிடைத்தன. சொகுசான வாழ்க்கை வாழக் கூடிய வசதி இருந்தாலும் பாசம் என்பது மட்டும் எப்போதும் எமக்குப் பூச்சியமாகவே இருந்தது. அதற்காகத் தான் மனமும் ஏங்கி அழுதது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் உருண்டோடின. அப்பாவிற்கு பல முறை சத்திர சிகிச்சை நடைபெற்றது. அதன் பின் ஓரளவு குணமானதும் மருத்துவ மனை யில் காத்துக் கிடக்காது அப்பா எம்மைத் தேடி வீட்டிற்கு ஓடோடி வந்து விட்டார்.
அதன் பின் மீண்டும் எம் சோகங்கள் களையப்பட்டன. அடி மனதில் ஏக்கங்கள் ஆழப் பதிந்திருந்தாலும், அதை எல்லாம் வெளிக் காட்டாது படிப்பில் எம் கவனம் செல்லத் தொடங்கியது.
காலங்களும் வேகமாகச் சென்றன. தன்னையே மெழுகாய் உருக்கி, எமக்காக மட்டும் வெளிச்சம் தந்து எல்லோரையும் படிப்பித்தது மட்டுமல்லாமல் பின் எல்லோரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு…
இன்று வெளி நாட்டிற்கு வர மறுத்து… தான் மட்டும் தனிமையாய் இருந்து, எம் சந்தோசத்தில் தன் வாழ்வை உருட்டிச் செல்லும் என் அப்பாவை இன்றும் நினைத்துக் கொள்கின்றேன்.
என் கண்களில் இன்றும் கண்ணீர் கரை புரண்டு ஓடுகின்றது. என் தந்தை யைப் போல் ஓர் தந்தை எவருக்கும் கிடைத்ததாக இதுவரை நான் அறிய வில்லை. என் தந்தைக்கு கடவுள் எழுதிய தலை எழுத்தைப் போல், வேறு எவனுக்கும் கடவுள் எழுதியிருக்கவும் போவதில்லை.
வாழ்க்கையில் சிறுவயதிலேயே தன் தாயை இழந்து, பல துன்பங்களை அனுபவித்து, பின் திருமண பந்தத்தில் இணைந்து பத்து வருடங்கள் ஆகு முன்னரே கட்டிய மனைவியை இழந்து… வாழ்க்கை ஆரம்பிக்கப்பட வேண்டிய அந்த வயதிலேயே தன் வாழ்வைத் தொலைத்து விட்டு…. சோதனைகள், வேதனைகளை மட்டுமே தினமும் சுமந்து கொண்ட என் தந்தையை இப்போதும் என் கண் முன் நிறுத்திப் பார்க்கின்றேன். ம்… என் கண்கள் குளமாகின்றன.
நான் எழுதிய இந்தப் பதிவேட்டில் எந்த ஓர் பொய்யினையோ புரட்டினையோ நான் எழுதவில்லை. இதில் ஒரு துளி கற்பனை கூட இல்லை. உண்மையில் நான் என்று சொல்லாமல், நாம் அனுபவித்த உண்மைச் சம்பவத்தையே எழுதி னேன். இதை எழுதும் போது என் மனம் மிகவும் நொந்து போனது என்பது உண்மையே.
ஆனாலும்… இவை எல்லாம் மறக்கக் கூடிய சம்பவங்கள் அல்ல. நான் சாகும் வரை என் மனதிலிருந்து அழிக்கக் கூடிய வடுவுமல்ல.
இதை எழுதி முடித்த போது… என் மனதின் ஓர் மூலையில் கொஞ்சமாய் பாரம் இறங்கியிருப்பது உண்மை தான்.
ஆனாலும் ஓர் உயிரின் இழப்பினால் எத்தனை இதயங்கள் நொந்தன…?
இன்னும் கூட அந்த நோ மாறாமல் வலித்துக் கொண்டிருக்கின்றன…?
ம்… எத்தனை துன்பங்கள், துயரங்கள் வந்த போதும் அத்தனை வலியையும் தாங்கி, தன் வாழ்வினை எமக்காக அர்ப்பணித்த என் தந்தையை நினைத்து நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்த வேளையில்…
என் தாயின் நினைவுகளையும் நெஞ்சில் சுமந்து, என் தாயின் நினைவாக இந்தப் பாடல் வரிகளையும் என் நினைவில் மீட்டிக் கொண்டு இந்தப் பதிவேட்டிலிருந்து விடைபெற்றுக் கொள்கின்றேன்.
ஆலயங்கள் தேவை இல்லை
ஆகமங்கள் தேவை இல்லை
தாயின் இதயம் போதும்
மனிதில் சஞ்சலம் ஏதுமில்லை.
தாய் போன்ற தெய்வமும் இல்லை
தாயின்றி ஜீவனும் இல்லை
தாயின் அன்புக் கடனைத் திருப்பி
தந்தவர் யாருமில்லை.
தூங்கும் வேளையில் பிள்ளை இருமினால்
துள்ளி எழுந்த என் அம்மா
ஆவி பதறி நான் அழுது புலம்பினேன்
இருக்கின்றாள் சும்மா
எங்கு சென்ற போதும் என்னை
துணையாக அழைப்பாயே!
சொர்க்க வாசல் போகும் போது
தனியாகச் சென்றாயே
தலையாட்டும் விதியின் கையில்
விளையாட்டுப் பொம்மையானேன்
தாயின் ஞாபக அலைகள் வீசும்
தனிமைத் தீ வாழ்க!
மீண்டும் இன்னுமோர் பதிவேட்டில் சந்திப்போம்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=702&st=0

சத்தியா சொன்னது,
ஜூன் 21, 2008 இல் 3:01 பிற்பகல்
கடல்கணேசன் சொன்னது,
அக்டோபர் 30, 2006 இல் 5:43 நான் · திருத்தவும்
எழுத வார்த்தை வரவில்லை.. படிக்கும்போதே, கண்களில் ஈரம்..
உங்களின் சோகம் வாசிக்கும் எல்லோரையும் பாதிக்கும். உண்மையிலேயே உங்கள் கடந்த காலம், துயரம் தோய்ந்தது தான்.. யாருக்கும் இது நிகழக்கூடாது என்று வேண்டிக் கொள்ளத்தான் முடியும்.
வசந்தம் உங்கள் வாழ்க்கையில் மலரும் என்று வாழ்த்துகிறேன்.
கடந்து போன வாழ்க்கை துயரம் நிறைந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.. இனி வரும் நாட்களை ரசித்து வாழுங்கள் சத்தியா. நீங்கள் பட்ட துயரத்துக்கும், உங்களின் அன்பு உள்ளத்துக்கும் எதிர்காலம் உங்களுக்கு இனிய வாழ்க்கையை வழங்கும்.. ‘விடியலுக்கில்லை தூரம்.. மனதில் இன்னும் ஏன் பாரம்.. உன் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்’ என்ற பாடல் வரிகள் தான் நினைவில் நிழலாடுகிறது..
என்றென்றும் நட்புடன்
கடல்கணேசன்
சத்தியா சொன்னது,
ஜூன் 21, 2008 இல் 3:02 பிற்பகல்
VKN சொன்னது,
டிசம்பர் 1, 2006 இல் 2:45 நான் · திருத்தவும்
என்னால் படிக்கவே முடியலை. உங்கள் சோகத்துக்கு யாருமே ஆறுதல் சொல்ல முடியாது.நம்பிக்கை இழக்காதீர். வசந்தம் உங்கள் வாழ்வினில் மலர்ந்திடும். உங்கள் சகோதர்களையும் கேட்டதாக சொல்லுங்கள். அழகாக தமிழ் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் தந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைத்தப் பொக்கிஷம் அவர். நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.
நட்புடன்
-கவிதா நக்கீரன்
சத்தியா சொன்னது,
ஜூன் 21, 2008 இல் 3:02 பிற்பகல்
Appaavi சொன்னது,
மார்ச் 18, 2007 இல் 3:55 பிற்பகல் · திருத்தவும்
என்ன எழுதுவென்றே தெரியவில்லை, மனம் வெறுமையாக இருக்கிறது உங்கள், தந்தையின் வாழ்க்கையை படித்ததிலிருந்து…
இனி உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டுமே வீச இறைவனிடம் பிராத்திக்கிறேன்..
சத்தியா சொன்னது,
ஜூன் 21, 2008 இல் 3:03 பிற்பகல்
vani சொன்னது,
ஜூன் 30, 2007 இல் 10:39 பிற்பகல் · திருத்தவும்
sokankal athai sumappavarkalukuthan tharium athan param unkal manathin vali epadi enpathai purunthu kondain varum varthaikal unkaluku aruthal tharathu annalum kalankal unkaluku aruthal tharum sathiya unkal appavukum naala arokiyaumum mana amathium thara entha mukam thariya nanpiyin pirathanaikal enrum irukum
JungleDirector சொன்னது,
ஜனவரி 8, 2009 இல் 11:55 பிற்பகல்
Subj.
Anybody have?
I’ts better, if you have XRumer 5.04…
Gimme link
See ya
JungleDirector சொன்னது,
ஜனவரி 12, 2009 இல் 9:50 பிற்பகல்
Subj.
Anybody have?
I’ts better, if you have XRumer 5.04…
Gimme url
See ya
XRumerMonstroZ சொன்னது,
மார்ச் 14, 2009 இல் 1:10 மு.பகல்
Hi!
Gimme url to downloading XRUMER 5.0 Palladium crack!
Thank you…
Very-very much.
I’m so need this program for advertise my website! This software is the best thing for online promo and mass posting, you know…
And, dont send me XRumer 2.9 and XRumer 3.0 – that versions are too old!
P.S. Google cant help me((((
Ticaexceent சொன்னது,
நவம்பர் 13, 2009 இல் 4:57 மு.பகல்
I found this site using google.com And i want to thank you for your work. You have done really very good site. Great work, great site! Thank you!
Sorry for offtopic