பாதை மாறிய பயணங்கள்!

ப்ரியா ஓவெனக் கதறி அழுதபடி தலையணைக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி, விம்மி அழு தாள். எரியும் நெருப்பினுள் எண்ணெயை ஊற்றியது போல் எங்கிருந்தோ காற்றலையில் மிதந்து வந்த அந்தக் கானம் அவளை மேலும் வேதனைக் கடலினுள் மூழ்க வைத்தது.

படம்—– கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
பாடல்—-எங்கே எனது கவிதை

ப்ரியா முட்டி மோதிக் கொண்டு அழுதாள். கருணை யின் காதுகள் செவிடாகி விட்டால், கவலைக் குரலுக் கும், காற்றுக்கும் ஒரே மதிப்புத்தான். குமுறியழும் அந்த ஜீவனுக்கு ஆறுதல் கூற அருகில் எவரும் இல்லை. வேதனையைத் தாங்க முடியாது அந்த உள்ளம் அன லில் இட்ட புழுவினைப் போல் துடி துடித்தது.

“அரவிந் உன்னால் எப்படி முடிந்தது?… ஐந்து வருடக் காதலை ஐந்து நிமிடத்தில் தூக்கி எறிந்து விட்டாயே?… நான் ஏழை என்பதால் என்னைத் தூக்கி எறிந்து விட் டாயே?… உன் பணக்காரப் புத்தியைக் காட்டி விட் டாயே?… ஆரம்பத்திலேயே இந்தக் காதலை அடியோடு மறுத்தேனே. விட்டாயா என்னை?… என்னை ஏன்?
எதற்காகப் பழி வாங்கினாய்?… நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்?.. சொல் அரவிந் சொல்.”….

என தனிமையிலேயே கதறிக் கதறி அழுதாள் ப்ரியா. அமைதியான அந்த இரவில் இந்தப் பேதை மட்டும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

“ஓ!… அரவிந் விடிந்தால் உன் திருமணம். புத்தம் புது மாப்பிளையாய் புதுக் கோலம் பூணப் போகின்றாய். உன் மனச் சாட்சியைத் தொட்டுக் கேட்டுப் பார். நீ செய்தது சரியா?… என விம்மி வெடித்த அந்தப் பேதையின் உள்ளத்து நினைவுகள் பின் நோக்கிப் பறந்தன.

ஆம். ப்ரியா அப்போது உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. சாதாரண குடும்பத்தில் பிறந்த ப்ரியா ஒழுக்கத்தாலும் அன்பான, பணிவான சுபாவத்தாலும் எல்லோரின் அன்புக்கும், பாராட்டுக்கும் உரியவளாகத் திகழ்ந்து பாடசாலையில் மாணவத் தலைவியாகவும் இருந்தாள்.

ப்ரியாவுடன் சக மாணவனாக அதே வகுப்பில் படித் தவனே அரவிந். அன்று மதியம் பியோன் வந்து… ஏதோ மெதுவாக வகுப்பாசிரியரிடம் கூறவும் ஆசிரியரின் முகம் திடீரென மாற்றமடைந்தது. தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்ட ஆசிரியர்…

“ப்ரியா!… உங்களை அதிபர் ஆபிசுக்கு உடனடியாக வரும்படி அழைக்கின்றார்.”… என்றார். ப்ரியாவும் எழுந்து பியோனின் பின் தொடர்ந்து செல்ல அங்கே பக்கத்து வீட்டுப் பரமசிவம் அண்ணர் நிற்பதைக் கண்டாள். பிரியாவின் கண்கள் அகல விரிந்தன. ப்ரியாவைக் கண்ட அதிபரும் ப்ரியாவின் அருகில் வந்து…

“ப்ரியா அப்பாவிற்கு சிறிது உடல் நலமில்லையாம்.” எனக் கூறி உடனடியாக வீட்டிற்குச் செல்லும் படியும் கூறினார்.

“பரமசிவம் அண்ணா அப்பாவுக்கு என்ன?”… பதட்டத் துடன் கேட்டாள் ப்ரியா.

“ஒன்றுமில்லை ப்ரியா. சிறிது உடல் நலமில்லை. அவ்வளவுதான். அதுதான்… உங்களைக் கூட்டி வரச் சொன்னார்.”… என்றார். ப்ரியாவும் படபடத்த மனத் தோடு ஓடிச் சென்று பரமசிவம் அண்ணரின் காரில் ஏறிக் கொண்டாள். விரைந்த கார் வீட்டு வாசலை அடைந்தது. வீட்டு வாசலில் அயலவர்கள், தெரிந்த வர்கள் எல்லோரும் கூடி நிற்பதைக் கண்டதும் மனம் படபடக்க இறங்கி ஓடினாள். உள்ளே தந்தையாரின் தலைமாட்டில் விளக்கு எரிவதைக் கண்டதும்…

“ஐயோ அப்பா என்னைத் தனியே தவிக்கவிட்டு நீங்களும் போய் விட்டீங்களா?”… என தந்தையின் சடலத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள்
ப்ரியா. கூடியிருந்தவர்கள் ப்ரியாவைத் தேற்றினார்கள். யார் தேற்றி என்ன? எவரின் தேற்றுதல்தான் அவளின் இந்த இழப்பை ஈடு செய்யப் போகிறது?

தந்தையாரின் இறுதிக் கிரியைகள் முடிந்ததும் எல்லோ ரும் தம்பாட்டிற்கே சென்று விட்டார்கள். ப்ரியா தன்னந் தனிமையில் விடப்பட்டாள்.

ஆம்… ப்ரியா மண்ணில் ஜனனிக்கவும் அவளின் தாய் நிரந்தரமாகத் தூங்கி விட்டாள். தாயார் மரணித்த போதே சொந்தங்களும், பந்தங்களும் ஓடி ஒதுங்கிக் கொண்டன. தந்தையாரின் அரவணைப்பில்தான் ப்ரியா வளர்ந்தாள். இப்போது தந்தை யாரும் இறந்து விட… ப்ரியா தனித்து விடப்பட்டாள்.

தனிமைப் படுத்தப்பட்ட ப்ரியாவின் நிலயைக் கண்டு ஆசிரியர்கள், சக மாணவ மாணவிகள் ஆறுதல்கள் கூறினார்கள். இவ்வேளையில்தான் அரவிந்தின் நட்பு அவளிற்குக் அதிகரித்தது எனலாம். தனிமையில் தினமும் கலங்கித் தவித்த ப்ரியாவை அடிக்கடி தேற்றினான் அரவிந்.

துன்பங்களைப் பிறரிடத்தில் பகிர்ந்து கொள்வதால் மனதிற்கு ஓர் ஆறுதல் கிடைக்கும் என்பார்களே. உண்மைதான். தன் சோகங்களை எல்லாம் அரவிந்திடம் பகிர்ந்து கொண்டாள்.

அன்று பாடசாலையில் மதிய இடைவேளை நேரம். ப்ரியா தனிமையில் இருந்து அழுத வண்ணம் இருந்தாள். இதைக் கண்ட அரவிந்….

“என்ன ப்ரியா… என்ன சோகம்?… தினமும் இப்படி வேதனைப்பட்டு அழுது கொண்டிருந்தால் ஏதும் நடந்து விடப்போவதில்லையே? இறந்த அப்பா திரும்ப எழும்பி வரப் போறாரா என்ன? இல்லையே. மனதைத் தேற்றிக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்து ப்ரியா. உன் சோகத்தை எல்லாம் மறந்து விடு”……

என விழி வழிந்த கண்ணீரைத் தட்டி விட்டு அவளைத் தேற்றினான். கரை காண முடியாமல் தவித்த அந்த உள்ளத்திற்கு அவனின் தேற்றல் பெருத்த ஆறுதலைக் கொடுத்தது. சோகம் கப்பிய அவளின் மனதிற்கு அவன் பேச்சு ஆறுதலை அளித்தது.

படம்——-உன் கண்ணில் நீர் வடிந்தால்
பாடல்—–கண்ணில் என்ன கார் காலம்…….

அரவிந்தின் தேற்றலினால் ஓரளவு தன் கவலைகளி ருந்து தேறி வந்தாள் ப்ரியா. மெல்ல மெல்ல சோகங் களை எல்லாம் மறந்து படிப்பில் கவனம் செலுத்தினாள்.

நாட்கள் உருண்டோடி மாதங்களாகின. அன்று பரீட்சை முடிவும் வந்தது. ப்ரியாவே எல்லாப் பாடங்களிலும் மிகத் திறமையான சித்தியடைந்திருந்தாள். யாவரும் ப்ரியாவை வாழ்த்தினார்கள். தன் வெற்றிக்குக் காரண மான அரவிந்திடம் சென்ற ப்ரியா…..

“அரவிந்!… என்ர இந்தத் திறமைச் சித்திக்கு உங்கள் ஊக்கமும், உதவியும்தான் காரணம். நன்றி அரவிந்”… என ஆனந்தக் கண்ணீருடன் நன்றியினைக் கூறிக் கொண்டாள்.

ஆம்… மனதிலே சலிப்புத் தட்டும் போது எண்ணங்கள் யாவும் ஒடிந்து விடுகின்றன. அதைத் தூக்கி நிறுத்த எவன் விசுவாசமுள்ள ஓர் நண்பனைப் பெற்று விடு கின்றானோ, அவன் தன் வாழ்க்கையில் பெரும் வெற்றி யைப் பெறுவான். அப்படி ஓர் நண்பனையே ப்ரியாவும் பெற்றிருந்தாள்.

அரவிந்திற்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைத்திருந்த தால் இருவருமே கழகத்தினுள் காலடி வைத்தனர்.

காலங்கள் கரைந்தன. வழக்கம் போலவே அன்றும் அரவிந்தும், ப்ரியாவும் ஒன்றாகச் சேர்ந்து கழகத்திற்குச் சென்றனர். கழக மதிலில் அரவிந்துடன் ப்ரியாவையும் சேர்த்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதைக் கண்ட தும் அவளிற்கு தலை சுற்றியது. அன்று முழுவதும் அவளிற்கு வகுப்பில் கவனம் இருக்கவில்லை. அவள் மனம் ஊமையாய் அழுதது.

சீ… என்ன இந்தச் சமுதாயம்? ஓர் ஆணுடன் ஓர் பெண் பழகினால் உடனே சேர்த்து கதைகட்டி விடுவதா? அவள் மனம் குமுறியது. அவளிற்கு அரவிந்தை நினைக்க வேதனையாக இருந்தது. எனக்கு உதவி செய்யப் போய் அரவிந்திற்கும் இந்தக் கெட்ட பெயர். என்னால் இனிமேல் எந்த அவப் பெயரும் ஏற்படக் கூடாது என எண்ணிய ப்ரியா, ஓர் முடிவுக்கு வந்தவ ளாய் அன்றிலிருந்து அரவிந்தைக் காணவோ அல்லது கதைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் அறவே தவிர்த் துக் கொண்டாள்.

மீண்டும் அவள் வாழ்வில் இருள் சூழ்ந்து கொண்டது. வகுப்பு நேரம் தவிர்ந்த வேளைகளில் தனிமையில் தன் அறையினுள் முடங்கிக் கிடந்தாள் ப்ரியா. அவள் அப்படி ஒதுங்கியும் கூட அரவிந், ப்ரியா என கிண்டலடிக்கவே செய்தார்கள்.

ப்ரியா தன்னைக் கண்டு ஒதுங்கிச் செல்ல அரவிந்தின் மனதில் மிகுந்த வேதனை ஏற்பட்டது. அவன் பிரியா வுடன் கதைக்க முற்படும் போதெல்லாம், ப்ரியா சந்தர்ப் பங்களை எல்லாம் தட்டிக் கழித்தாள். அவள் எட்டிச் செல்ல செல்ல அரவிந்தின் உள்ளம் அவளுக்காய் ஏங்கித் தவித்தது. சக மாணவர்கள் ப்ரியாவின் பெய ரைச் சேர்த்துக் கிண்டலடிக்கும் போதெல்லாம் ஏதோ ஓர் இனம் புரியாத சந்தோசம் அவனுள் தோன்றியது.

சதா பிரியாவின் எண்ணமும், கற்பனைகளும் அவனுள் நிறைந்து அவனை இம்சைப்படுத்தியது. ப்ரியாவைப் பார்க்க வேண்டும், அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென அவன் விழிகள் ஏங்கின.

“அப்படி என்றால் நான் ப்ரியாவைக் காதலிக்கின் றேனா?”… தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

அவள் அருகில் இருக்கும் போது எதுவும் தெரிய வில்லை. அவள் எட்டிச் சென்ற பின்னரே அவளுக்காக என்னுள்ளம் ஏங்கித் தவிக்கிறதே. ஏன் நான் ப்ரியா வைக் காதலிக்கக் கூடாது? ஏன் அவளை என் எதிர்கால மனைவியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது?

ஓ!… ப்ரியா!… நிச்சயமாக உன்னைப் பிரிந்தோ, அல்லது மறந்தோ இனிமேல் என்னால் வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தவனாய், அன்று பிரியாவிடம் சென்றான்.

“ப்ரியா உன்னுடன் தனிமையில் கதைக்க வேணும். மாலை ஐந்து மணிக்கு பிள்ளையார் கோயிலில் காத்தி ருப்பன். கட்டாயம் வா ப்ரியா”… எனக் கூறிவிட்டு பதிலுக்காய் காத்திராது அவ்விடத்தை விட்டகன்றான் அரவிந்.

மாலை நாலு மணிக்கே கோயிலுக்குச் சென்ற அரவிந் ப்ரியாவின் வருகைக்காகக் காத்திருந்தான். சரியாக ஐந்து மணிக்கு ப்ரியா கோயிலுக்கு வந்தாள். அவளைக் கண்டதும் ஆயிரம் நினைப்புக்கள் அவன் உள்ளத்தில் தோன்றி நர்த்தனம் ஆடின. ஓர் அழகுத் தேவதை பூமியில் பவனி வருவதைக் கண்டதும் அவன் உள்ளம் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தது. அருகே வந்த ப்ரியா…

“என்ன விசயம் அரவிந்? முக்கியமான விசயம் கதைக்க வேணும் என்றீங்களே?”… என்றாள்.

“ஒன்றுமில்லை ப்ரியா வந்து”… தயங்கினான்.

“ஒன்றுமில்லாமலா என்னை இங்கு வரச் சொன்னீங்கள்?”…

மனதை தைரியப்படுத்திக் கொண்ட அரவிந்தும் தன் மனக் காதலை கூறத் தொடங்கினான்.

“ப்ரியா!… நான் உன்னை மனதாரக் காதலிக்கிறன். உன்னைப் பிரிந்தோ, மறந்தோ என்னால் இருக்க முடியவில்லை.”… என்று தன் மனக் கிடக்கலை மளமளவென கொட்டித் தீர்த்தான்…

முகம் சிவந்தாள் ப்ரியா

“அரவிந்!… உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சி ருக்கு? மற்றவர்கள் கட்டிய கதையை நீங்களும் நிஜமாக்கப் போறீங்களா என்ன? “…

என்று அனல் பறக்கப் பேசியவளும், சட்டெனத் திரும் பிப் புறப்படத் தயாரானாள். ஓடிச் சென்று குறுக்கே மறித்தான் அரவிந்.

“ஏன் ப்ரியா மாட்டேன் என்கிறாய்? ஏன் என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? … என்றான்.

கோபத்துடன் நிமிர்ந்த ப்ரியா…

“நான் உங்களுடன் அப்படிப் பழகவில்லையே அரவிந்”… என்றாள்.

“ப்ரியா கொஞ்சம் யோசிச்சுப் பாரேன். உனக்கு உற வென்று சொல்ல யாருமில்லை. அன்பு காட்டவோ, ஆதரவளிக்கவோ எவருமில்லை. அதை விடு… என்னால் உனக்கு வீணான களங்கமும் கூட வந்து விட்டது. இவற்றை எல்லாம் நான் நல்லா யோசிச்சுத் தான் இந்த முடிவுக்கு வந்தேன். இப்ப வெல்லாம் சதா உன் நினைவாகவே இருக்கு ப்ரியா. நீ என்னை விட்டு எட்டிச் சென்ற பிறகுதான் என் மனக் காதலையே நான் உணர்ந்து கொண்டேன்.”… என்று கூறவும்…

“இல்லை அரவிந் இல்லை. எனக்கும் உங்களிற்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. உங்கள் நிலமை என்ன? என் நிலமை என்ன? நீங்கள் பெரிய பணக்காரன். நானோ ஏழை. அது மட்டுமா?… நான் ஓர் அனாதை”… என அவள் கூறவும், அரவிந் எட்டி அவளின் வாயைப் பொத்தினான்.

“ப்ரியா அப்படிச் சொல்லாதே. உனக்காக என்றுமே நானிருக்கிறேன்.” … என்றான்.

“இல்லை அரவிந் நீங்கள் எடுத்த முடிவு தவறான முடிவு. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்”… என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றாள் ப்ரியா.

மாதங்கள் சில உருண்டோடின. அரவிந்தின் கோலங்கள் முற்றாக மாற்றமடைந்தன. படிப்பில் எவ்வித கவன மும் செலுத்தாது, வகுப்புக்களுக்கு ஒழுங்காக வராது, தாடியும் வளர்த்து அலங்கோலமாக அரவிந் திரிவதைக் கண்ட ப்ரியா மிகவும் மனம் வருந்தினாள்.

தன் பிடிவாதத்தை தளர்த்தி அரவிந்தைக் கண்டு புத்தி மதிகள் கூறினாள். ஆனாலும் அவையெல்லாம் செவி டன் காதில் ஊதிய சங்கானது. கிளீன் சூட்டோடு Gentlemen போல் திரிந்த அரவிந் இப்போது அலங் கோலமானது தன்னால்தான் என்ற குற்ற உணர்வு அவளுள் எழுந்தது.

“நான் தவித்து நின்ற போதெல்லாம் நிழலாகத் தொடர்ந்து ஆறுதல் தந்த அரவிந்தை உதறித் தள்ளுவது சரியா?”… இப்படி அவள் மனதில் கேள்வி எழ, அவள் மனம் தடுமாறியது.

அப்போது அவளின் தோழி அடிக்கடி கூறுவது அவள் நினைவிற்கு வந்தது…

“நீ நேசிப்பவனை ஏற்பதிலும் பார்க்க, உன்னை நேசிப் பவனை ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும்”… என்று அடிக்கடி கூறுவாள். ப்ரியாவின் மனம் சங்கடப்பட்டது.

அன்றோர் நாள் வெள்ளிக்கிழமை மாலை நேரம் வழக் கம் போலவே கோயிலுக்குச் சென்ற ப்ரியா, கோயிலில் எதிர்பாராமல் அரவிந்தைக் கண்டாள். சோகமே உரு வான முகத்துடன் ஓர் ஏக்கப் பார்வையுடன் அவன் நின்ற கோலத்தைக் கண்டதும் அவளை அறியாமல் அவள் கண்கள் நீரைக் கொட்டின.

மனித சுபாவம் உணர்ச்சிகளுக்கு வளைந்து கொடுத்தும் விடுகின்றன. உணர்ச்சிகளையும் சுற்றுச் சார்புதான் கிளறியும் விடுகிறது. இதனால்தான் இன்று இவன் இந்த நிலமைக்குத் தள்ளப்பட்டான்.

அது மட்டுமா? அவளுக்கு என்று இருந்த ஓர் ஆறுதல் தரும் உள்ளத்தையும் அவள் இழந்திருந்தாள். பிரிந் திருந்த உள்ளங்களின் வேதனைகள் கண்ணீரில் மூழ்கின. வேதனை தாங்க முடியாமல் ப்ரியாவிற்கு விம்மலுடன் அழுகையும் பீறிட்டது.

அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர் களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின் றன என்பது உண்மைதான்.

நீண்ட நேர மௌனத்தைக் கலைத்து… அரவிந் மெல்லத் தன் உள்ளத்து வேதனையை கொட்டினான். முதலில் தயங்கிய ப்ரியா, அரவிந்தின் உறுதியான வாக்குறுதி களின் பின் மெல்ல மெல்ல காதலிற்கு சம்மதம் தெரிவித்தாள்.

தன்னையும், தன் சுற்று நிலமைகளையும் நன்கு புரிந்து கொண்டவன் என்ற நிறைவு ப்ரியாவிற்கு. அவளுடைய அடக்கம் நிறைந்த அழகு “மனைவிளக்கு” என்ற அடை மொழிக்குப் பொருத்தமானவள் என்ற நிறைவு அவ னுக்கு. அந்தத் தேவதை கிடைத்த சந்தோசத்தில் உலக த்தில் துன்பம் என்பதாக ஒன்றுமே இல்லை என்று முடிவு கட்டிக் கொண்டு அவனுள்ளம் துள்ளிக் குதித்தது.

படம்——பெண்ணின் மனதைத் தொட்டு
பாடல்—-கண்ணுக்குள்ளே உன்னை வைப்பேன்…
(Unni Menon)

காலங்கள் உருண்டோடின. கழகப் படிப்பை முடித்துக் கொண்டு பட்டம் பெற்ற இருவரும் தொழில் துறையில் புகுந்து கொள்ள வேண்டிய காலம் வந்தது. அரவிந்திற்கு வேறோர் பிரதேசத்தில் ஆரம்பத் தொழிலைத் தொடங்க வேண்டிய நிலமை வந்தது.

ப்ரியாவை பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்ல வேண் டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். ப்ரியாவிடம் சொன்ன போது அவள் சம்மதிக்கவில்லை. தான் வெகு விரை வில் மாற்றம் பெற்று வந்து விடுவதாக உறுதியளித்து, இரண்டும் கெட்டான் மனத்தோடு பறப்பட்டான்.

அரவிந்தின் பிரிவு ப்ரியாவிற்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. பழைய நினைவுகளை மீட்டிக் கொண்டும், தன் தொழிலைக் கவனிப்பதிலும் ஓரளவுக்கு தன் மனதைத் தேற்றிக் கொண்டாள். அடிக்கடி அரவிந்தின் தேற்றலான மடல்கள் அவளிற்கு மனத் தெம்பைக் கொடுத்தன. ப்ரியாவும் ஆறுதல் கூறிப் பதில் மடலைத் தொடர்ந்து வரைந்தாள். இடையிடையே அரவிந் வந்து சந்தித்துக் கொண்டும் சென்றான்.

மாதங்கள் விரைந்தோடி வருடம் ஒன்றாகின. அரவிந் தின் மடல்கள் மெல்ல மெல்லக் குறைந்து இறுதியில் ஒரு தொடர்புமே இல்லாமல் அற்றுப் போனது. தவித் தாள் ப்ரியா. பல மடல்கள் வரைந்தும் எதுக்குமே பதில் வரவில்லை. உள்ளத்தில் சோகம் பலமாய் வாட்டியது.

அன்று வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவளுக்கு… அவள் மனம் என்றுமில்லாதவாறு வேதனையில் தவித் தது. உள்ளம் எதனையோ இழந்து விட்டது போல் படபடத்துக் கொண்டிருந்தது.

தன் வேலையைத் தொடர்ந்து செய்ய முடியாமல் வேலைக்கு லீவைப் போட்டு விட்டு வீடு திரும்பினாள் ப்ரியா. வீடு சென்றவளும், வந்திருந்த கடிதங்களை எடுத்தாள். வழமை போலவே அவள் கண்கள் அரவிந் தின் கையெழுத்தையே தேடின. நீண்ட கால இடை வெளியின் பின் அரவிந்தின் கையெழுத்தைக் கண்டதும் அவளுள்ளம் சந்தோசத்தில் குதித்தது.

வீடு திரும்பிய அவளை வேதனை வாசலிலேயே வரவேற்றதை அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கையெழுத்தை முத்தமிட்டபடி ஆவலுடன் உறையைப் பிரித்தாள். உள்ளே திருமண வாழ்த்து மடல்.

திருமண வாழ்த்தில் ப்ரியாவின் பெயர் இருக்க வேண் டிய இடத்தில் வேறோர் பெயர். அவளின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே இருந்து விட்டாள். நெஞ்சு வெடித்துச் சிதறி விடும்போல் இருந்தது. மெல்ல மடலை விரித்தாள். உள்ளே ஓர் துண்டுக் காகிதம்.

ப்ரியாவிற்கு…

பெற்றோர் சொல்லை மீற முடியவில்லை. அவர்கள் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்யப் போகின்றேன். என்னை மன்னித்துக் கொள்.

இப்படிக்கு… அரவிந்.

என முடித்திருந்தான்.

“அரவிந் நீயா?… நீயா இந்த முடிவை எடுத்தாய்? எப்படி அரவிந் உன்னால் முடிந்தது? ஓ!… ஆண்டவனே!… மனிதருக்கு இதயம் என்று ஒன்றைப் படைத்தாயே? அதைக் கண்ணால் பார்த்து உள்ளிருக்கும் எண்ணத்தை அறியும் வண்ணம் ஏன் கண்ணாடிப் பெட்டிக்குள் படைக்கவில்லை? இதயத்தை உள்ளே மறைத்து அதற் குள் பொய்யும் புரட்டும் நிறைத்து அதை எலும்பாலும், தோலாலும் போர்த்தி எதையுமே அறியாத வண்ணம் ஏன் படைத்தாய்?…”

என்று கதறி அழுதபடி ஆண்டவைனையே கேட்டு நொந்து கொண்டாள்.

இரவு முழுவதும் கண்ணீரில் தத்தளித்து, தன் நினைவு களிலிருந்து மீண்ட அந்தப் பேதை ஓர் முடிவிற்கு வந்தாள். இனிமேலும் நான் இங்கு இருக்கக் கூடாது என்ற முடிவுடன் தன் பெட்டியை எடுத்து உடைமை களை அடுக்கிக் கொண்டு வாசலில் காத்து நின்ற ரக்சியை நோக்கி நடந்தாள்.

அவள் வாசலை நெருங்கவும், வேகமாக ஓர் கார் வாச லில் வந்து நின்றது. உள்ளிருந்து அரவிந் இறங்கினான். அவனைக் கண்டதும் ஓவென்று கதறி அழவேண்டும் போல் வேகம் அவளுள் எழுந்தது. ஆனாலும் பொங்கி வந்த அழுகையை கடிவாளம் போட்டு அடக்கிக் கொண்டாள்.

அதிகமாக வைக்கும் அன்பு அறிவுக் கண்ணை மூடி விடும் என்பார்களே! அது உண்மைதான்.

ஆதலால் அவள் தன் மனதை மீண்டும் திடப்படுத்திக் கொண்டாள். வேகமாக இறங்கி வந்த அரவிந்… அவளின் இரு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு…

“ப்ரியா!… என்னை மன்னித்துக் கொள். நான் விட்ட பிழைகளை மன்னித்து நீ என்னுடன் வரவேணும். இனி உன்னைப் பிரிந்து நான் செல்ல மாட்டேன்.”…
என்றான் அவன்.

ப்ரியா நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்…

திருமணம் தடைப்பட்டு விட்டதாகவும், அதுவும் சீதனப் பிரச்சனையால் நின்று விட்டதாகவும் அவன் கூறி முடித்தான்.

அரவிந்தின் பிடியிலிருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்ட ப்ரியா… ஒரு வினாடி நேரத்தை மௌனத்தில் கழிய விட்டாள். பின் விழிகளை உயர்த்தி அவன் முகத்தைப் பார்த்தாள்.

“அரவிந்… ஐந்து வருடக் காதலை ஐந்து நிமிடத்தில் தூக்கி எறிந்து விட்டு இன்னோர் பெண்ணை ஏற்றுக் கொள்ளத் துணிந்தீர்கள். இனிமேலும் மனம் மாறாது இறுதிவரை என்னோடு இணைந்திருப்பீங்கள் என்று என்ன நம்பிக்கை? ஆனாலும்… என் வாழ்வில் நான் தனித்து, செய்வதறியாது தவித்து நின்ற வேளையில் நீங்கள் செய்த உதவிகளை உயிருள்ளவரை நான் மற க்க மாட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.”

என்று கூறிவிட்டு ரக்சியில் ஏறி அமர்ந்து கொண்டாள். ரக்சி வேகமாய் விரைந்தது. அவளை அறியாமலேயே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

ஆம்!… ப்ரியா புதிய பாதை நோக்கி பயணம் செய்கின்றாள்.
ரக்சி ரைவர் தன் வானொலியை முறுக்கி விடவும்…

படம்———–கண்ணுக்குள் நிலவு.
பாடல்———-இரவு பகலைத் தேட………….

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2700

*** இவள் – சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக