குறளில் பிறந்த கதை – 1

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
(குறள் – 789)


(மனம் மாறுபடாமல், முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும்
தன்மையே, நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும் என்கிறார் வள்ளுவர்)


நல்ல நண்பர்களே உலகத்தின் மிகப் பெரிய செல்வம் என்று சொல்கிறார்கள்.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல. நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம். நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும். தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.

ஒரு தூய்மையான நட்பானது, எப்போதும் ஒரு தாயின் அரவணைப்பைப் போல் ஓர் இனிமையான சுகத்தைக் கொடுப்பதாகும். எவ்வேளையிலும் மனம் மாறுபடாமல் முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும் தன்மையே நல்ல நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும்.

கடல் மீது பயணம் செய்யும் வள்ளத்திற்கு துடுப்பதுவும் கைத்துணையாய்
இருந்து… கரை சேர உதவுவது போல்… ஒரு நல்ல நண்பனானவன் வாழ்கை
என்னும் பயணத்தில் துடுப்பைப் போல் உற்ற நண்பனாக இருந்து உதவுவதே
நட்பின் சிறப்பாகும். இக் கருத்தினையே வள்ளுவரும் இந்தக் குறளில் மிக
அழகாகக் கூறியுள்ளார்.

உண்மையான நட்பு கோடானகோடி மக்களில் ஒருவருக்குத்தான் வாய்க்கிறது
என்கிறார்கள். அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த உண்மையான… தூய்மை நிறைந்த நட்பை நானும் அனுபவித்து இருக்கின்றேன்.

ஆமாம். அந்தப் பள்ளிப் பருவத்தில் என் வகுப்பில் வந்து சேர்ந்தாள் சியாமா. என்ன அதிசயம்? உருவத்தில் அப்படியே என்னைப் போலவே காணப்பட்டாள். பார்ப்பவர்கள் எல்லோரும் எம் இருவரையும் பார்த்து இரட்டையர்களா நீங்கள்?… என்று கேட்கும் அளவிற்கு அப்படி ஓர் ஒற்றுமை உருவத்தில் எம் இருவருக்குள்ளும் இருந்தது.

அவளின் அன்பான வார்த்தைகள், அமைதியான சுபாவம் இவை எல்லாம் எனக்கு நிறையவே பிடித்திருந்தது. அதனால் நானும் சியாமாவும் இணை பிரியாத நண்பிகள் ஆனோம். வாழ்க்கையில் எவ்வளவுதான் வசதி வாய்ப்புக்கள் இருந்த போதும், சிறு வயதிலேயே அன்னையை இழந்த எனக்கு மனதில் இனம் புரியாத ஒரு சோகம் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருந்தது.

சில வேளைகளில் என் மனம் மிகவும் சோர்ந்து விடுவதும் உண்டு. அந்த வேளைகளில் எல்லாம் நீளும் அவளின் பாசக் கரங்கள் ஓர் தாயின் அரவணைப்பைப் போல் எனக்கு எப்போதும் இருக்கும்.

அவளின் அந்தத் தூய்மையான நட்பின் பின்னால் என் தனிமைகள் யாவும் விரட்டப்பட்டு விட்டன. எந்த ஒரு உறவுக் குள்ளும் ஓர் சுயநலம் இருக்கும் என்பார்கள். ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவளிடம் அதை நான் கண்டதே இல்லை. என் இன்பத்திலும்… துன்பத்திலும்… சுக துக்கங்களிலும் அவளின் பங்களிப்பு எப்போதும் அதிகமாக இருக்கும்.

ஒரு சிறு தலையிடி என்று சொன்னாலே துடித்துப் போகும் அவளின் உள்ளம் கண்டு நான் மலைத்து நின்ற பொழுதுகளும் உண்டு. என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு என் தந்தை தன் வாழ்வைத் தியாகம் செய்து… ஓர் ஏணிப் படியாக எப்படி இருந்தாரோ… அதே போல் சியாமாவும் என் வாழ்விற்கு ஓர் ஏணிப் படிதான்.

பாடசாலையில் வரும் ஒவ்வொரு பரீட்சைகளின் போதும் அவள் என் மனதிற்கு தரும் உற்சாகமானது எனக்கு அவ்வப்போது பெரும் வெற்றிகளை ஈட்டித் தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு நட்பை… நானும் மீண்டும் இன்று வரை தேடுகிறேன். இது வரை கிடைக்கவே இல்லை. நாட்டின் போர் சூழ்நிலையால் நானும் புலம் பெயர்ந்த போது தொலைத்த பலவற்றுள் என் அன்புத் தோழி சியாமாவும் அடங்குவாள். இப்போதும் அவளின் அந்த பாசமான நட்பினை நினைத்துப் பார்க்கின்றேன். என் கண்கள் ஈரமாகின்றன. ஆனால் அவளின் நினைவுகள் இப்போதும் என் மனதில் ஈரமான நினைவுகளாய் சாமரம் வீசுகின்றன.

ஆம்!… மனதிலே சலிப்புத் தட்டும் போது எண்ணங்கள் யாவும் ஒடிந்து விடுகின்றன. அதைத் தூக்கி நிறுத்த எவன் ஒருவன் விசுவாசமுள்ள ஒரு நண்பனைப் பெற்று விடுகின்றானோ, அவன் தன் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுவான் என்பது உண்மையே. அப்படி ஒரு நட்பினை நானும் பெற்றிருந்தேன்.

ஆக்கம் – சத்தியா

 
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=23&t=1327&st=0#entry14430

*** இவள் – சத்தியா ***

1 மறுமொழி

  1. shamini சொன்னது,

    செப்டம்பர் 26, 2009 இல் 8:50 பிற்பகல்

    வணக்கமங்கா, எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் கதையை வாசித்தேன்.மகிழ்ச்சியாகவும் இருந்தது கவலையாகவும் இருந்தது.உங்களுக்கு ஒரு நல்லதோழி கிடைத்திருந்தால் அதில் மகிழ்ச்சி ஆனால் அந்த தோழி உங்கள் அருகில் இல்லை என்பது கவலை.என்ன இருந்தாலும் அவள் உங்கள் மனதில் இப்பவும் இருக்கிறாள் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விடயம்.உங்களுக்கு வாழ்த்து சொல்வதா அல்லது உங்கள் நண்பியை தொலைத்த உங்களுக்கு ஆறுதல் சொல்வதா என்று தெரியவில்லை.
    அன்புடன்
    உங்களுடைய புதியநண்பி
    ஷாமினி.


மறுமொழியொன்றை வழங்குக