கண்ணீர் அறுவடை!

user posted image

கண்ணீர் அறுவடை!
———————–

(இது ஓர் உண்மைச் சம்பவம்)

வீடிழந்து, வாசலிழந்து தங்கள் விதியினை நொந்து கொண்டு உயிரைக் காக்கவென ஊர் விட்டு ஊர் வந்து வாழ்க்கை வண்டியை ஓட்டுபவர்களில் இவர்களும் ஒருவர்.

அலையும் மனங்களோடு நிம்மதியைத் தேடிச் சோர்ந்து போயுள்ள முகங்களே இவர்களின் நிலை. ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக வாழவில்லை. தம் பிள்ளைகளுக்காக வாழ்கின்றார்கள்.

தனக்கும் தன் கணவன் பாலுவுக்கும் நான்கு, ஐந்து நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் மீனா.

அப்போது….

“மீனா நேரமெல்லே போகுது. இவ்வளவு தூரமும் சயிக்கிலில் போய் சேர வேணுமெல்லே… சீக்கிரம் ரெடியாக வேண்டாமே?”… என்றான் பாலு.

ம்ம்… இதோ நானும் ரெடியாகி விட்டேன். நீங்களும் ரெடிதானே?… என்றாள்.

அப்போது கடைசி மகன் ஓடி வந்து… தாயின் தோளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு….

“அம்மா நானும் வாரனம்மா”… இது மூன்று வயது நிரம்பிய மூன்றாவது மகன் அருண்.

“இல்லையப்பன் அம்மாவும், அப்பாவும் கடைக்குச் சாமான்கள் வாங்கிக் கொண்டு வரவெல்லோ போறம். கனக்கச் சாமான்கள் கடைக்கு வாங்கிக் கொண்டு வர வேணும். நீங்கள் அழாமல், குழப்படி செய்யாமல் நல்ல பிள்ளையாய் அம்மம்மாவோட இருக்க வேணும். சரியோ? … என்ர செல்லத்துக்கு என்ன வேணுமெண்டு சொல்லுங்கோ. அம்மா வேண்டிக் கொண்டு வாறன்.”

“அம்மா எனக்கு கனக்கச் சொக்கா வேண்டிக் கொண்டு வாங்கோ.

ம்ம்… என்ர குட்டிச் செல்லத்துக்கு அம்மா நிறைய சொக்கா வேண்டிக் கொண்டு வாறன்… ஓகே?

அருகில் நின்ற மகளும்….

“அம்மா எனக்கு அச்சாச் சட்டை வேணும்”….. இது ஆறு வயது நிரம்பிய இரண்டாவது மகள் சுருதி.

“அம்மா எனக்குச் சயிக்கில் வேணும்”….. இது ஒன்பது வயது நிரம்பிய மூத்தவன் திவ்வியன்.

“சரி…சரி…. நீங்களெல்லாம் அம்மம்மாவோட குழப்படி செய்யாமல் இருக்க வேணும். அப்பதான் இதெல்லாம் வாங்கித் தருவன் புரியுதோ?”….. என்று குறுக்கிட்டார் தந்தை பாலு.

சரி… அம்மா பிள்ளையளை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கோ… என தாயிடம் பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு பாலுவும், மீனாவும் சயிக்கிலில் ஏறி புறப்பட….. வாசல் வரை வந்த பிள்ளைகளும், தாயாரும் கை அசைத்து விடை கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.

தமது நீண்ட பயணத்தைத் தொடங்கிய இருவரும்… மண்டையைப் பிளக்கும் அந்த வெய்யிலில் அதிக தூரப் பிரயாணம் செய்து, இறுதியில் வவுனியாவிற் குள் செல்வதற்கு அனுமதிக்காக காத்திருந்தனர். ஆனாலும் அவர்களின் காத்திருப்பும் இறுதியில் ஏமாற்றத்தில் முடிந்தது. பாலு மனம் சோர்ந்த நிலையில்…..

மீனா….. எமக்கான அனுமதி தர்ரத்துக்கு இன்னும் இரண்டு நாளாகுமாம் எண்டு சொல்லுறாங்கள். இப்ப என்னதான் செய்யிறது? இஞ்ச எங்கையாவது ரெண்டு நாள் தங்கி அனுமதி எடுத்துக் கொண்டு வவுனியாவுக்கு போவமே? என்று பாலு கேட்கவும்.

“இல்லை அத்தான். இஞ்ச ரெண்டு நாள் நிக்கிற தெண்டால் வேண்டாம். வீட்ட போயிற்று ரெண்டு நாள் கழிச்சு திரும்பி வருவம்”… என்றாள் மீனா.

சரி என்ற பாலுவும் மீனாவை ஏற்றிக் கொண்டு திரும்பி வீடு நோக்கி விரைந் தான். நேரம் காற்றாய்க் கரைந்தது. இரவு எட்டு மணியளவில் இரணைமடு வந்தவனும், நேரத்தோடு வீடு போய் சேர்ந்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் குறுக்குப் பாதையூடாக சயிக்கிலைத் திருப்பி விரைவாக சயிக்கிலை மிதித்தான்.

ம்… இரவு நேரம். எட்டு மணிதான் ஆகியிருந்தது. இருந்தும் இருள் கும் மிருட்டாக எங்கும் சூழ்ந்து பரந்து வியாபித்து இருந்தது. சன நடமாட்டம் எதுவுமே இல்லை. ரோச் லைற்றையும் பிடித்துக் கொண்டு… அவர்கள் பயணம் தொடர்கிறது.

அவர்கள் வந்துகொண்டிருந்த அந்த வழியில் ஓர் குளம். அந்தக் குளத்தில் படையாக யானைகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. இவர்களைக் கண்டதும் யானைகள் எல்லாம் நிலை குலைந்தன. அப்போது ஓர் யானை வேகமாக ஓடி வந்து இருவரையும் சயிக்கிலோடு தூக்கி எறிந்தது. பாலு ஓர் பற்றையினுள் போய் விழுந்தான்.

மீனா “அம்மா” என்று கதறியவாறே ஓர் பக்கம் போய் விழுந்தாள். அத்தோடு இவர்களை அந்த யானைகள் விட்டனவா?…. இல்லையே. ஒரு யானை ஓடிச் சென்று விழுந்து கிடந்த மீனாவின் நெஞ்சில் ஏறி உளக்கவும்…

“அத்தான் என்னைக் காப்பாத்துங்கோ”…. என்று கதறினாள் மீனா.

பாவம் பாலு. யானை தூக்கியெறிந்த வேகத்தில் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. மெல்ல தலையைத் தூக்கிப் பார்க்கின்றான்…. எங்கும் ஒரே இருள் மூட்டம். யானைகளின் நடமாட்டத்தை மட்டும் அவனால் உணர முடிகிறது.

மீனாவின் அவலக் குரல் அவனின் நெஞ்சைப் பிளக்கிறது. மீண்டும் எழுந்து விட முயல்கிறான். முடியவில்லை. அப்படியே தலை சுற்றி மயக்கமடைந்து விட்டான் பாலு.

ஒரு சின்ன குங்குமப் பொட்டாய், கிழக்குத் திசையைக் கீறிக் கொண்டு சூரியன் மெல்ல புலரும் வேளை….. மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்தவனும்…

“மீனா!…. மீனா!…. ” என்று கத்தியபடி அங்கும் இங்குமாக அவளைத் தேடி
அலைந்தான். அலைந்தவனின் கண்களில் தூரத்தில் ஓர் உருவம் தென்பட்டது. அவன் அந்த உருவம் இடத்தை நோக்கி மெல்ல நடந்தான். அவனின் மேனி லேசாக நடுங்கியது. அருகில் சென்றவனும்…. சிறிது நேரத்தில்…..

“ஐயோ!….. மீனா”………. என அந்தக் காடே அதிரும்படி கத்தினான்.

அவன் உடல் ஆடியது. அலறல் சத்தம் அந்தக் காடெங்கும் எதிரொலியாய்!

என்ன கொடுமை?…. அங்கே மீனா நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தாள். அவளைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு…

“ஐயோ !!!…. அம்மா மீனா என்னைத் தனிய தவிக்க விட்டிட்டு போயிற்றியா?
ஐயோ!… நான் என்ன செய்வேன்? …. கடவுளே இது என்ன கொடுமை?…. நான்
என்ன பாவம் செய்தேன்?…. ஏன் என்னை இப்படிப் பழி வாங்கினாய்?…. ஐயோ
நான் இனி என்ன செய்வேன்?…. என்ர மூண்டு குஞ்சுகளும் வந்து அம்மா எங்கப்பா?…. எண்டு கேட்டால் நான் என்ன பதில் சொல்ல?… என்ர சின்னச் செல்வங்களுக்கு அம்மாவுக்கு இனி நான் எங்கே போவேன்?

ஐயோ! கடவுளே!….. நான் என்ன செய்வேன்?….. தவமாய் தவமிருந்து நான் பெத்த என்ர மகள் எங்கே?….. என்று உன் அம்மா கேட்டால், உன் அம்மா வுக்கு நான் என்ன பதில் சொல்லித் தேற்றுவேன்?

குமுறி வரும் அழுகையை அடக்கிக் கொள்ள அவனால் முடியாமல்… தனிமையில் இருந்து கதறிக் கதறி அழுதான் பாலு.

அவ்வேளை அந்த வழியே வந்த ஒருவர் அவனைக் கண்டு, நடந்தவற்றை எல்லாம் அறிந்து… பாலுவையும், மீனாவையும் காரில் ஏற்றிக் கொண்டு அவர்கள் வீட்டில் சேர்த்தார்.

அந்த வீடே சோகத்தில் மூழ்கியது. தன் மூன்று பிள்ளைகளையும் கட்டிப் பிடித்துக் கொண்டு… பாலு கதறிக் கதறி அழுதான்.

தன் ஒரே ஒரு மகளைப் பறிகொடுத்த தாயோ தலை தலையாய் அடித்து கதறி அழுதாள். தாங்க முடியாத சோகத்தை சுமந்தபடி அந்தக் குடும்பம் கண்ணீரில் தத்தளித்தது.

கண்ணீரை அறுவடை செய்ய இவர்கள் செய்த பாவம் என்ன?

வாழுகின்ற வாழ்வில் துன்பங்கள், துயரங்கள் எல்லாம் புதுப் புது வடிவில் வந்து துவட்டும் போது யாரை நொந்து கொள்வது?

இப்படி எத்தனை எத்தனை நெஞ்சை விட்டும் அகலாத அநியாயச் சாவுகள்…?

அழுவதுவும், இறப்பதுவும், அழுது கொண்டே மடிவதுவும் தமிழனாய்ப் பிறந்தமையால் தலை விதியாய் அமைகிறதோ…?

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=4&t=454&st=0#entry3391

*** இவள் – சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக