இது யார் போட்ட பந்தம்…?

 

சமையல் வேலைகளை முடித்து…
அப்படியே வீட்டு அலுவல்கள் யாவையும் முடித்து விட்டு…

வழமை போல் இணையத்துக்குள் நுழைந்து
அன்றைய செய்திகளை எல்லாம் ஓர் தடவை நோட்டம் விட்டாள் சந்தியா.

என்ன… எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் ஒரே அழுகையும் சோகமுமாய்…
கண்கொண்டு பார்க்க முடியாத காட்சிகளும் தென்படவே…

அதற்கு மேல் அவற்றைப் பார்க்க முடியாமல்
அப்படியே இசைப் பகுதிக்குள் நுழைந்த போது…

அண்மைக் காலத்தில் வெளிவந்து…
அவள் மனதில் இனம் புரியாத ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட
அந்தப் பாடல் அவள் கண்ணில் தென்படவே
அதை அழுத்தி… பாடலில் மூழ்கிப் போனாள் சந்தியா.

படம் – யாரடி நீ மோகினி.
பாடல் – வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…

தன்னையே மறந்து… பாடலில் சிறிது நேரம் லயித்திருந்தவளின் சிந்தனையைக் கலைத்தது
அந்தத் தொலைபேசி அழைப்பு… ஓடிச் சென்று தொலைபேசியை எடுத்தவளும்…

”ஹலோ” … என்றாள்.

” சந்தியா… நான் கத்ரின்.”

”ஓ… சொல்லுங்க கத்ரின்… எப்படி இருக்கிறீங்க…?”

” நலம் சந்தியா… அப்புறம்… நாளை காலை கட்டாயம் வருவீங்க தானே…?”

” இதிலென்ன சந்தேகம் கத்ரின்…? நிச்சயமா நான் நாளை காலை உங்க வீட்டுக்கு வந்திடுவன்… ஓகே? ”

என்றவாறே அவள் வீட்டு விலாசத்தையும் கேட்டு சரியாகக் குறித்து வைத்துக் கொண்டாள் சந்தியா.

ம்… யாருக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை இவள் தன் மனதில் கட்டி வைத்துள்ள எதிர்காலத்திட்டங்கள் பற்றி.
அது அவள் மனதோடு மட்டுமே வளர்ந்திருக்கும் திட்டம். பதின்ம வயதில் அவள் எடுத்துக் கொண்ட இலட்சியம் அது.

தன் வாழ்நாளில் பல பகுதியை…
தாய் தந்தையில்லாது தவித்திருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு…
அன்புத் தாயாக மாறி, அவர்கள் தாகம் தீரும் வரை தாய்ப்பாசம் காட்ட வேண்டும்.

அல்லது பிள்ளைகளினால் கைவிடப்பட்டு முதியோர் இல்லங்களில் முடங்கிப் போய்க்கிடக்கும்
பெற்றோருக்கு பணிவிடை செய்து தன் காலத்தைப் போக்க வேண்டும்.

இவை இரண்டில் ஒன்றை எப்படியாவது செய்தே தீரவேண்டும் என்பதே அவள் எதிர்கால இலட்சியம்.
காலம் கை கொடுத்தால்… கடவுள் அவள் உயிரை வாழ விட்டால்… இது கட்டாயம் நடக்கும்.

மறுநாள் பொழுதும் புலர்ந்தது
காலைக் கடமைகளை முடித்து விட்டு…
அவசர அவசரமாக புறப்பட்டு புகையிரதத்தைப் பிடித்து…
அந்த முகவரியைத் தேடிப் பிடித்துக் கொண்டவளும்…

மீண்டும் வீட்டு எண் சரிதானா என சரிபார்த்துக் கொண்டு…
வாசலில் இருந்த அந்தக் கோலிங் பெல்லை அழுத்தினாள்.

சற்று நிமிடத்தில் அந்த வாசல் கதவு திறந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான்.

”ஹாய்… நான் சந்தியா… அம்மா நிக்கிறாங்களா…?”… என்றாள்.

” அம்மா… அம்மா… உங்களைத்தான் கேட்கிறாங்க… ” என்றான் அவன்.
உடனே அங்கே வந்த கத்ரின்…

” ஓ… சந்தியாவா… வாங்க வாங்க”…

எனப் புன்னகை தவளும் முகத்துடன் வரவேற்றவளுக்கு…
காலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டாள் சந்தியா.

பதிலுக்கு அவளும் வணக்கத்தைத் தெரிவித்தவாறே உள்ளே அழைத்துச் சென்றாள்.

அப்போது அங்கே அவளின் மூன்று குழந்தைகளும் ஓடி வரவே…

”சந்தியா… இவங்க மூணுபேரும்தான் என் குழந்தைகள்.
இவன் என் மூத்த மகன். வயது பத்து. படு சுட்டி.
இது என் இரண்டாவது மகள். வயது எட்டு. மிகவும் அமைதியானவள்.
இது என் மூன்றாவது மகன். வயது ஆறு…”

என்று அறிமுகப்படுத்தவும்…
ஒவ்வொரு குழந்தைக்கும் ”ஹாய்” சொல்லியவாறே
அவர்களுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டாள் சந்தியா.

பின்னர் அவளை அப்படியே ஓர் அறைக்குள் அழைத்துச் சென்ற கத்ரின்…

”இவர் என் அம்மா.”… என்றாள்.

அவளின் தாயார் வாத நோயினால் பாதிக்கப்பட்டு…
ஒரு பக்க கையும், காலும் இழுக்கப்பட்ட நிலையில் படுத்தபடுக்கையாகக் கிடந்தாள்.

”சந்தியா… நான் மதியம் திரும்பி வரும்வரை கொஞ்சம் என் அம்மாவைக்
கவனித்துக் கொள்ள வேண்டும்”…

” ஓகே கத்ரின்… நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாமல் நீ போய் வா.”… என்றாள் சந்தியா.

கத்ரினும் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாடசாலையில் விட்டு விட்டு…
அப்படியே வேலைக்குச் சென்று விட்டாள்.

சந்தியாவும் அந்தத் தாயாருக்கு காலை உணவை ஊட்டி, மருந்துகளையும் குடிக்கக் கொடுத்து
கவனமாகக் பார்த்துக் கொண்டாள். மதியம் கத்ரின் வந்ததும் அவளுடன் சிறிது நேரம் பேசி…
அவள் தாயாரைப் பற்றி சகல விபரங்களையும் அறிந்து கொண்டு வீட்டுக்குக் கிளம்பி விட்டாள்.

மறு நாள் காலை அங்கு சென்றவளும்… அந்தத் தாயாரைக் கூட்டிச் சென்று குளிக்கவைத்து…
அழகாய் உடைகள் எல்லாம் மாற்றி, உணவை ஊட்டி, மருந்தையும் கொடுத்து விட்டு…
தாய் இருந்த அந்த அறையை எல்லாம் நன்கு சுத்தம் செய்து…
அந்த அறையையே மாற்றி அமைத்து மிக அழகாக அழகுபடுத்தினாள்.

வீட்டின் பின்புறம் சென்று… அங்கு நின்ற பூஞ்செடிகளில் பூக்களைப் பறித்து வந்து…
ஓர் ஜாடியில் வைத்து… கம கம என மணம் கமழ வாசனைத் திரவியமும் அறைக்குள் அடித்து…
அந்த அறையையே மாற்றம் செய்து வைத்திருந்தாள்.

மதியம் வீட்டுக்கு வந்த கத்ரின் அந்த அறைக்குள் நுழைந்ததும்…

” வாவ்… என்ன அழகா, சுத்தமா இருக்கு”… என்று வாயில் கை வைத்தபடி…

” ஏன் சந்தியா உனக்கு இந்தச் சிரமம் எல்லாம்…?” என்றாள்.

”இதில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை கத்ரின். என் தாயாக இருந்தால் எதைச் செய்வேனோ
அதைத் தான் இங்கேயும் செய்தேன். உனக்கு அவள் தாய். எனக்கும் அவள் தாய் போல்தான்.
அதிலும் நீயில்லாத அந்த சில மணி நேரங்கள் உன் தாய்க்கு நான் தாயாகிறேன். அவ்வளவுதான்.”

சந்தியாவின் பதிலைக் கேட்டதும் அவளை ஆரத் தழுவி தன் அன்பைப் பகிர்ந்து கொண்டாள் கத்ரின்.

படம் – அபூர்வ சகோதரிகள்.
பாடல் – அன்னை என்னும் ஆலயம்…

நாட்கள் சில கழிந்தன…

வழமைபோல் அன்று காலையும் சந்தியா சென்றாள்.
வாசற் கதவைத் திறந்த கத்ரினும் அங்கே சோகமாக நின்றாள்.

” சந்தியா… காலை உன் மொபைலுக்கு போன் பண்ணினனே… நீ எடுக்கல்ல… அது நேரடியா மெசேஜ்சுக்குப் போச்சே…”

” ஓ… புகையிரதத்தில் வரும் போது இடையில் சிக்னல் இல்லைப் போலும்…
அது சரி எதுக்கு எனக்கு காலையில போன் எடுத்தாய்”…?…

அதிகாலை தாயாருக்கு நெஞ்சுவலி வந்ததாகவும்….
அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும்
அங்கே தாயார் இறந்து விட்டதாகவும் கண்ணீரோடு கூறி முடித்தாள் கத்ரின்.

கத்ரின் கூறியதைக் கேட்டதும் என்ன செய்வது…? என்ன சொல்வது…?… என்று தெரியாமல்
சிறிது நேரம் சந்தியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
பின் கத்ரினுக்கு ஆறுதல் கூறியவளாய்… அவளோடு சேர்ந்து மருத்துவமனைக்குச் சென்றாள்.

”சந்தியா… நீ வந்த நாளில் இருந்து அம்மாவில் நல்ல முன்னேற்றம்.
தன்னை நீ மிகவும் அன்பாகக் கவனித்துக் கொள்வதாகக் கூட நேற்று எனக்குச் சொல்லி
சந்தோசப்பட்டுக் கொண்டா. உன்னை என் அம்மாக்கு ரொம்ப பிடிச்சிருந்தது”…
என்று போகும் வழியில் சொல்லிக் கொண்டே வந்தாள் கத்ரின்.

மருத்துவமனை சென்று அந்தத் தாயின் உடலைப் பார்த்தவளும்…

சிறிது நேரம் தன் கண்களை மூடி… அந்தத் தாயின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்து விட்டு…
கத்ரினுக்கும் ஆறுதல் வார்த்தை கூறி விட்டு… கிளம்ப ஆயத்தமானாள் சந்தியா.

அவளை ஒரு கணம் நிறுத்திய கத்ரின்…
தன் கான்பாக்கில் இருந்து பணத்தை எடுத்து சந்தியா கையில் திணித்தாள்.

” இது எதுக்கு கத்ரின்…?”

” என் அம்மாவைக் கவனித்துக் கொண்டாயே… அதுக்காக.”

” இல்லை கத்ரின்… எனக்கு என் அம்மா இல்லை…
உன் தாயை என் தாயாகத்தான் நான் நினைத்து இத்தனை நாட்களும் கவனித்துக் கொண்டேன்.
என் தாயைக் கவனித்துக் கொள்ள எனக்குக் கூலியா…? வேண்டாம் கத்ரின்.
எனக்காக ஒன்று செய்யேன்… உன் தாய் பிறந்த நாட்டில் நடக்கவிருக்கும் இறுதிக் கிரிகையின் போது…
அந்தத் தாயின் பாதங்களில் என் பெயர் சொல்லி ஒரு பூ ஒன்று போட்டு விடேன். அது போதும் எனக்கு.”

என்று சொல்லி முடிக்கு முன்னர்… சந்தியாவின் கண்களை உடைத்து கண்ணீரும் வெளியேறியது.

கத்ரினிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தாள் சந்தியா.
அவள் மனமெங்கும் இனம் புரியாத ஓர் சோகம் கௌவிக் கொண்டது.

”ஓ… நேற்று இந்த நேரம் என் கவனிப்பில் இருந்த தாய்… இன்று இல்லை.
இவளுக்கும் எனக்கும் என்ன பந்தம்…?
எங்கோ பிறந்து… எங்கோ வளர்ந்த நான்…
எதற்காக சில நாட்கள் பணி செய்யப் பணிக்கப்பட்டேன்…?
இது யார் போட்ட பந்தம்…?”

அவள் மனதில் எழுந்த இந்தக் கேள்விக்கு… அவளுக்கே விடை கிடைக்கவில்லை.
இதுதான் மனித வாழ்க்கை.

இந்திரியத் துளியால் உருவான உடல்…
வழங்கப்பட்ட இரவல் உயிர்… நிரந்தரமற்ற வாழ்நாள்…
இவைகளுடன்தான் மனிதன் தன் வாழ்க்கைப் படகை மரணத்தை நோக்கி ஓட்டிக் கொண்டிருக்கின்றான்.

ம்… வாழ்க்கை என்பது ஒரு மாயச்சுடர்.
அந்த மாயச்சுடர் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் அணைந்தே போய் விடுகிறது.

படம் – நீங்கள் கேட்டவை.
பாடல் – கனவு காணும் வாழ்க்கை யாவும்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10287&st=0#entry142650

 

*** இவள் – சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக