விதி வரைந்த கோலங்கள்-4
அவள் கண்கள் சுழன்று சுழன்று சுற்றும் முற்றும் அவனைத் தேடிய வண்ணமே இருந்தன. புரியாத மொழி, தெரியாத இடம், எல்லாத் திசையும் வேற்று நாட்டவர்களின் நடமாட்டம்… அவள் நெஞ்சுக்குள் பயம் நிறைந்து கொள்ள அங்கும் இங்குமாய் அவனைத் தேடியவாறு திரும்பிய போது அங்கே…
அவன் போட்டு வருவதாய்ச் சொன்ன கறுப்புக் கலர் ரீ சேட்டோடும், நீல ஜீன்சோடும் ஒருவர் தென்படவே… உற்றுப் பார்த்தாள்… இன்னும் சற்று உற்றுப் பார்த்தாள். “இது அரவிந்தா?” … பார்த்ததும் அப்படியே பேயறைந் தவள் போல் விறைத்து நின்றாள் சாந்தி.
“என் மகாராணியைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடிச்சு தூக்கி முத்தம் தருவேன்”… என்று ஆசை வார்த்தைகளை அடிக்கடி அள்ளி எறிந்த அரவிந்தும்… கண்ணுக்கெட்டிய தூரத்தில்… அவளையே பார்த்தபடி அப்படியே சிலையாய் நின்றான்… சிறிது நேரம் பார்வைகள் மட்டும் மோதிக் கொண்டன.
இருவரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போய் நின்றனர். அந்த நிமிடம் வரை மனதில் இருந்த அத்தனை எதிர்பார்ப்புக்களும் மொத்தமாய் வற்றிப் போனது. இருவரின் முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள்.
சாந்திக்கு அவனைப் பார்த்ததுமே அவள் கண்களையே நம்ப முடியாமல் போனது. மொட்டைத் தலையும், பானை போல் பெரிய வண்டியும் தொந்தியுமாய்… ஒரு 40, 45 வயது மதிக்கத்தக்க கோலத்தில் அவன்.
ஆனாலும் மனதுக்குள் எழுந்த அந்த அதிர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல்… அவன் நிற்கும் இடம் நோக்கி மெல்ல நகர்ந்து சென்றாள். இவள் அருகில் போனதும்… அவனின் கண்கள் கோவத்தில் சிவந்தன…
“உன்ர மூஞ்சிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தேவைப் படுதோ?…ஏன்ரி… தெரியாமல்தான் கேக்கிறன்… உன்ர மூஞ்சிய நீ ஒருக்கா கூட கண்ணாடியில பார்த்ததே கிடையாதா?”… அரவிந் ஆத்திரத்தில் நிலை மறந்தான்.
அவனிடமிருந்து பாய்ந்து வந்த சொல்லம்புகள் அவளை நிலை குலையச் செய்ய… அப்படியே செய்வதறியாது திகைத்துப் போய் நின்றாள்.
“உன்ர சொந்தக்காரங்கள் யாரும் ஜேர்மனியில இருக் கினமே?”…
கோவம் கொப்பளிக்க அவளைப் பார்த்துக் கேட்டான். இவற்றை எல்லாம் சற்றும் எதிர் பாராத சாந்திக்கு வார்த்தைகள் தடுமாறின…
“இல்லை… எனக்கு இங்க யாருமே இல்லை”…
“பின்ன எந்த நாட்டில இருக்கினம்?”
“பிரான்சில ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவர் இருக்கிறார்”
“அவன்ர நம்பர் வைச்சிருக்கிறியே?”
“ஓம்… இருக்கு”… என்றவாறு தனது கான்பாக்கைக் கிண்டிக் கிண்டி ஒரு ஒற்றையைத் தேடி எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“உன்ர கொண்ணனுக்கு போன் அடிச்சு சொல்லுறன்… நீ அவனோட போயிடு என்ன?”…
அவன் சொன்னதைக் கேட்டதும் சாந்திக்கு தலையே சுற்றியது… கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோட…
“ஏன்?… எதுக்கு என்னைப் போகச் சொல்லுறீங்கள்?”… என விம்மலுடன் கேட்டாள்.
“உன்ர மூஞ்சியைப் பார்க்கவே எனக்குச் சகிக்க முடியல்ல. உன்னோட எப்படி நான் குடும்பம் நடத்திறது? என் பக்கத்தில நிக்கவாவது உனக்குத் தகுதி இருக்காடி? மொத்தமா சொல்லப் போனால் உன்ன எனக்குப் பிடிக்கவே இல்ல”…
அவள் கட்டி வந்த கற்பனைக் கோட்டைகள் யாவும் ஒரு நொடிப் பொழுதில் உடைந்து நொருங்கி விழ… “ஐயோ”… எனக் குழறி அழ வேண்டும் போல அவளுக்கு இருந்தது. பொங்கி வந்த அழுகையை கைக் குட்டையால் பொத்தி… வந்த அழுகையை அடக்கிக் கொண்டு நின்றாள் சாந்தி.
அவளிடமிருந்து போன் நம்பரை வாங்கியவனும் உடன டியாக அந்த நம்பருக்கு போன் எடுத்தான். அங்கே போனை யாரும் எடுக்கவில்லை. கோவத்துடன் ஏதோ முணுமுணுத்தவாறு அங்கும் இங்குமாக நடந்தவ னும்… சிறிது நேரம் கழித்து….
“அங்க ஒரு நாயும் போனை எடுக்குதில்லை. இண்டைக்கு எப்படியாவது அடிச்சு பிடிச்சு நீ அண்ணனோட போயிடு… புரியுதே?…. அதட்டினான் அரவிந்.
அவள் அண்ணனை சின்ன வயதில் பார்த்தவள்தான். அதன் பின் அவள் கண்டதும் கிடையாது. கதைத்ததும் கிடையாது. வெளிநாட்டுக்கு இவள் புறப்பட ஆயத்த மான போது… அவளின் பெரியம்மா வீட்டுக்கு வந்த போது… அங்க போனால் அவனோடு கதை என்று சொல்லிக் கொடுத்த நம்பர்தான் அந்த நம்பர்.
இவனுக்கு அதை எப்படி சொல்ல முடியும்? விசர் நாய் போல் கடித்துக் குதற நிற்கும் அவனிடம் அதைச் சொன்னாலும் கேட்கவா போறான்?… என எண்ணிய வளாய்… வாய் திறந்து எதுவும் கதைக்காமல் “ஓம்”… என தலையை மட்டும் ஆட்டியவாறு நின்றவளை நோக்கி…
“இந்தக் கோதாரிகளை இழுத்துக் கொண்டு வா”… எனக் கூறி விட்டு கட கடவென முன்னே நடந்தான்.
ஒரு கையில் ஒரு சூட்கேசை தூக்கியவாறு, மற்ற சூட்கேசை இழுத்தவாறு மூச்சு வாங்க வாங்க அவனுக்குப் பின்னாலேயே விரைந்தாள். வெளியே சென்று காரின் அருகில் சென்று சூட்கேசுகளைத் தூக்கி காரின் டிக்கியினுள் தூக்கி எறிந்தவனும்…
“ஏறித் தொலை”… என காரின் பின் சீற் பக்கம் கையைக் காட்டினான். அவன் சொன்னதும் பயத்துடன் ஏறி அமர்ந்தாள் சாந்தி.
கார் வேகமாக நகர்ந்தது. அவளுக்கு அடுத்து என்ன செய்வது?… என்ன நடக்கப் போகிறது?… என்று தெரியா மல் குழம்பிப் போய்… அழுத வண்ணமே பின்னால் அமர்ந்திருந்தாள்.
“ஏன்டி… உங்க வீட்டில திருவலையே வேண்டினது இல்லையா? பார் தேங்காய் திருவும் திருவலை மாதிரி பல்லும். நெருப்புக் கொள்ளியில தண்ணி ஊத்தின கலரும்… இந்த லட்சணத்தில உனக்கு வெளிநாட்டு மாப்பிளை வேற தேவைப்பட்டிருக்கு”…
நெருப்பாய்க் கொட்டிய வார்த்தைகள் அவளைச் சுள் என்று சுட… அதுவரை அமைதியாக அழுது கொண்டி ருந்த அவள்… ஓவென அழத் தொடங்கினாள்.
“சனியன்… சனியன்… வாயை மூடு. இல்லையெண்டால் இப்படியே றோட்டில தள்ளிப் போட்டுப் போயிருவன்… பட்டிக்காட்டு நாயே!… எல்லோருமாச் சேர்ந்து போட்டோவைக் காட்டி என்னை நல்லா ஏமாத்திப் போட்டீங்களேடி”…
“நீ மட்டுமா ஏமாந்தாய்? … நானும் கூடத்தானே ஏமாந்து போனன்? தலை நிறைய முடியோட போட்டோ அனுப்பினியே? இப்ப பார்… திறந்த முத்த வெளி போல மொட்டை மண்டையும், கருவாட்டு மூஞ்சி போல ஓர் ஓரல் மூஞ்சியையும் வைச்சுக் கொண்டு என்னை மட்டும் இந்தக் கேள்வி கேக்கிறியே? முதல்ல நீ உன்ர மூஞ்சியை கண்ணாடியில பாத்தியா?”… எனக் கேட்கத் துடித்து… மனசுக்குள்ளிருந்த அக்கினிக் குழம்பு வெடித்துக் கொப்புளித்தது. ஆனாலும் எதையும் கேட்க முடியாது அடக்கிக் கொண்டு அழுதபடியே அமர்ந்திருந்தாள்.
கார் வேகமாக விரைந்து அவனின் வீட்டுக்குச் சென்ற டைந்தது. வீட்டுக்குள் சென்றவனும் உடனடியாக ரெலி போனை எடுத்து பிரான்ஸுக்கு டயல் பண்ணினான். அங்கே அவளின் அண்ணனின் பெயரைச் சொல்லிக் கேட்ட போது…
தானே கணேஸ் என்று சொல்லி அவளின் அண்ணன் கதைத்தான். உடனே அவளிடம் ரெலிபோனை நீட்டியவாறு…
“இந்தா உன்ர கொண்ணன் கதைக்கிறான். அவன உடன வரச்சொல்லி அவனோட போயிடு. இல்லை என்றால் நடக்கிறது வேற… விளங்கிச்சே?”…
பயத்துடன் ரெலிபோனை வாங்கியவளும் அழுதழுது நடந்தவற்றை எல்லாம் அண்ணனிடம் சொல்லி… எப்படியாவது உடனே வந்து தன்னைக் கூட்டிச் செல்லு மாறு அழுதழுது கெஞ்சிக் கேட்டாள். அவனும் தான் அன்றே வருவதாக கூறினான்.
சரி என போனை அரவிந்திடம் நீட்டியவளும் … அண்ணா இண்டைக்கே வாறாராம்… என்றாள். அவன் பதில் எதுவுமே சொல்லாது ஒரு முறைப்புப் பார்வை யோடு அவளைப் பார்த்தான்.
நேரம் இரவு ஒன்பது மணியைத் தாண்டி இருந்தது. அப்போது அங்கே வந்தவனும்… “சாப்பிடிறியே”… என்றான்.
“இல்லை எனக்கு எதுவும் வேண்டாம்”… என்று அவள் கூற… அவன் சாப்பிட்டு விட்டு… அறையைப் பூட்டிக் கொண்டு படுத்து விட்டான்.
அவளுக்கோ என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து… தன் தலை விதியை நினைத்து நினைத்து அழுத வண்ணமே இருந்தாள்.
இரவு 12.30 அளவில் வீட்டு வாசல் மணி அழுத்தப் பட… அறைக்குள் படுத்திருந்த அரவிந்… அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்து வாசல் கதவைத் திறந்தான். அங்கே….
தொடரும்………
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4748&b=1&st=0&p=0&#entry0
