விதி வரைந்த கோலங்கள்-3
காலங்கள் காற்றாய் கரைய… ஜேர்மன் பயணத்திற்காய் சாந்தி காத்திருந்த அந்த நாளும் வந்து சேர்ந்தது. ம்… பொழுது விடிந்தால் சாந்தியின் பயணம். அவளைப் பயணம் அனுப்புவதற்காக அவளின் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் அங்கே வந்திருந்தார்கள்.
இதுவரை பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்பட்டு வீட்டையும், பாடசாலையையும் சுற்றிச் சுற்றி வந்த வளும் முதன் முதலாய் வெளியுலகில் கால் பதிக்கப் போகின்றாள்.
அது மட்டுமல்ல பஸ்ஸிலும், ரயிலிலும் ஏறிப் பழக் கப்பட்டவளுக்கு முதன் முதலாய் விமானத்தில் ஏறிப் பயணம் செய்வது என்பதும்… அதுவும் தனியாக…
பல மைல் தொலைவில் இருக்கும் நாட்டுக்கு பயணம் செய்யப் போவதை நினைத்த போது… மனதில் ஏதோ ஓர் படபடப்பும், பயமும் வந்து அவளுக்குள் புகுந்து கொள்ள… ஆழ்ந்த யோசனையில் இருந்தவளுக்கு…..
“சாந்தி!… இப்ப எதுக்கு இப்படிப் பயந்து சாகிறாய் ? எதுக்கும் நீ பயப்படத் தேவையே இல்லை. உன்னட்ட இருக்கிறது ஒரிஜ்ஜினல் பாஸ்போட், ஒரிஜ்ஜினல் விசா. அங்கே போய் தைரியமாக எல்லாத்தையும் காட்டிப் போட்டு… நீ பயணத்தை தொடங்க வேண்டியதுதானே? இதுக்குப் போய் சும்மா பயந்து நடுங்கிக் கொண்டு…
எனக்கு உன்ன நினைச்சால் சிரிக்கிறதா? அல்லது அழுகிறதா என்று தெரியாமல் இருக்கு சாந்தி.”
“இல்லை அரவிந்!… தனியே வருவதை நினைச்சால் தான் எனக்கு ஒரே பயமா இருக்கு… அரவிந்!… நீங்கள் அங்க… எயாப் போட்டில வந்து நிப்பீங்கள் தானே?”…
“பின்ன என்னவாம்?… நான் வராமல் அங்கே யார் வரப் போறது? என் மகாராணியை முதன் முதல்லில சந்திக்கப் போற சந்தோசத்தில இருக்கிற என்னைப் பார்த்துக் கேட்கக் கூடிய கேள்வியா இது?”…
“அரவிந்!… அங்க நீங்கள் என்ன நிற உடுப்போட வரு வீங்கள்? உங்களை நான் எங்க தேடிப் பிடிக்கிறது?”… குழந்தைப் பிள்ளைத்தனமாய் அவள் கேள்விகள் தொடர்ந்தன.
“அடி போடி… பைத்தியம்!… பைத்தியம்!… நீ எங்கேயும் என்னைத் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை. நீ அங்கே வந்திறங்கி உள்ளே எல்லா அலுவல்களையும் முடித்து விட்டு உள்ளே இருந்து வெளியே வர… நானே ஓடி வந்து என் செல்லத்தைத் தூக்கி… அப்படியே கட்டிப் பிடிச்சு ஒரு முத்தம் தருவன் ஓகேயா?”…
“சீ… என்ன அரவிந் நீங்கள்? அவ்வளவு சனங்களுக்கு முன்னால… இப்படியா நடந்து கொள்வது?”…
“சாந்தி!… வெளி நாட்டில இதுவெல்லாம் நோமலம்மா… இதை எல்லாம் இங்கே யாருமே கண்டு கொள்ளப் போவதில்லை. எதுக்கும் நீ வாவன்… உன்னை என்ன செய்யிறன் என்று பாரேன்.”…
“ம்கூம்…. எனக்குப் பிடிக்கவே இல்லை.”…
“என்ன?… என்னைப் பிடிக்கேல்லையா?”…
“சீச்சீ…இல்ல… இல்ல… நீங்கள் அப்படி நடந்து கொள்ளப் போவதுதான் பிடிக்கவில்லை என்று சொன்னன். கழுத் தில தாலி ஏற முதலிலேயே… அதுவும் பப்பிளிக்கில?”
“இதிலென்ன தவறு சாந்தி? நீ தானே எனக்கு நிச்சயிக் கப்பட்டவள் ஆச்சே. சரி சரி இப்ப நீ வீணாக குழம் பாத… முதல்ல இங்க வந்து சேரன். பிறகு இந்தப் பட்டிக் காட்டுப் பழக்கத்திற்கு எல்லாம் மூட்டை கட்டி அனுப்பி விடுறன் பார்…”
அவன் ஆயிரம்தான் சொன்னாலும் எல்லாவற்றையும் நினைத்த போது அவளுக்கு குப்பென்று வியர்த்துக் கொட்டியது.
மறு நாள் காலை விமான நிலையத்துக்கு வந்தவளும்.. அரவிந் சொன்னபடி தைரியமாக எல்லாவற்றையும் செய்து முடித்தாள்… விமான நிலையத்துக்குள் எந்த வித பிரச்சனையும் இருக்கவில்லை. எல்லாம் முடிந்து உள்ளே போக ஆயத்தமான வேளை… தன் மகளைப் பிரியும் கவலையில்….
“சாந்தி!… கவனமா போய்வாம்மா”… என்றவாறு மேலே சொல்ல வார்த்தைகள் வராமல் மகளை அணைத் தவாறு கண்ணீரோடு நின்ற தாயைப் பார்த்து…
“என்னம்மா நீங்கள்? சின்னக் குழந்தை மாதிரி? இதுக் கெல்லாம் வருத்தப்படலாமா?”… என்றவாறே… தனக் குள் பொங்கி வந்த அழுகையையும் அடக்கியவாறே… தாயின் தோளில் தட்டி சமாதானப்படுத்தினாள் சாந்தி.
“பிள்ள பயணம் போகும் போது இப்ப எதுக்கு அழுகி றாய்? அவளைச் சந்தோசமாய் அனுப்பிவையன் கனகம்… பயணம் போகும் போது அழக் கூடாது என்று உனக்குத் தெரியாதா என்ன? இப்படிக் கண்ணீரோடு அனுப்பி வைச்சால் போற வழியில கூட ஏதாவது நடந்து விடும். அது போக… அவள் அங்க போய் எப்படி நிம்மதியா இருப்பாள்?”…
“சாந்தி!… நீ சந்தோசமா போய்வாம்மா… போய்ச் சேர்ந்ததும் போன் பண்ணு… நீ எல்லாத்தையும் யோசிச்சு கவனமாய் நடக்கிற பிள்ள. உனக்குப் புத்தி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீயும் போய் சேர்ந்து அங்கு மாப்பிள்ளையோட குடும்பமாய் நல்ல சந்தோசமாய் வாழ வேண்டும் என்று கடவுளிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்ளுறன்”…
என்றவாறே மகளின் கையை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாலும் அவரையும் மீறி அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. வடிந்த கண்ணீரை மறு பக்கம் திரும்பித் துடைத்துக் கொண்டார் பரமசிவம்.
தங்கைகள் இருவரும்… “அக்கா அங்க போய் அத்தா னைக் கண்டதும் எங்களை எல்லாம் மறந்து விடாத… என்ன? அத்தானையும் சுகம் கேட்டதாக சொல்லி விடு… சரியா?”… என்று கிண்டல் செய்த தங்கைகள் இருவரையும் அணைத்தவாறே…
“அப்பா, அம்மாவை கவனமா பார்த்துக் கொள்ள வேணும். அவர்கள் சொல்லைத் தட்டாமல் நல்ல பிள்ளைகளாக நீங்கள் இருக்க வேணும்… சரியா?”…
இப்படியே… தாய், தந்தை, சகோதரிகள், உற்றார், உறவி னர்கள்… இவர்கள் மட்டுமல்ல தான் பிறந்து வளர்ந்த தாய் நாட்டுக்கும்… கண்ணீருடன் கை அசைத்து விடை கொடுக்க… அவளுக்கு இதயம் முழுவதும் வலித்தது. இருப்பினும் விடை கொடுத்த படி அவளும் விடை பெற்றாள்.
உள்ளே சென்று பயணிகள் இருக்கும் இடத்தில் தானும் அமர்ந்து கொண்டாள். பின் விமானத்துக்குள் பயணிகள் செல்வதற்கான அழைப்பு வந்ததும் பயணிகள் விமானத் தில் ஏறத் தயாராகினர். பயணிகளது நோக்கம் பயண த்தை தொடர்வதுதானே?…அவர்களோடு சேர்ந்து சாந்தியும் பயணிக்கத் தயாரானாள்.
பயணிகளை ஏற்றிக் கொண்ட விமானமும் வட்ட மிட்டு… வட்டமிட்டு வானில் ஏறிப் பறக்கத் தொடங்கியது.
ஆயிரம் ஆசைகளை நெஞ்சினுள் சுமந்த படி… கற்ப னைகள் பலவற்றை கண்ணுக்குள் கட்டிய படி… ஏதேதோ எண்ணங்கள் எழுந்து ஊஞ்சலாட சாந்தியும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.
பல மணி நேரப் பயணத்தின் பின்னர் பிராங்போர்ட் (FRANKFURT) விமான நிலையம் வந்து சேர்ந்து விட்டதாய் விமானத்திற்குள் அறிவிக்கப்பட்டதும்… அவளும் இறங்குவதற்குத் தயாராகி…பயணத்தை முடித்துக் கொண்டு உடல் சோர்ந்தவளாய் வெளியே வந்தாள்.
வெளியே வந்ததும் அவள் கண்கள் அரவிந்தைத் தேடின. அவனைக் காணவில்லை. அங்கும் இங்குமாய்ப் பார்த்தாள். அவனை எங்குமே காணவில்லை. கொஞ்சத் தூரம் அடிவைத்து நடந்து சென்றும் தேடிப் பார்த்தாள். எங்குமே அவன் தென்படவில்லை.
ஒரு வேளை சிறிது தாமதமாக வருவாரோ? …”ம்கூம்… அப்படி இருக்காது. என்னை அழைத்துச் செல்ல நேரத் தோடேயே வந்து நிற்பதாய்ச் சொன்னாரே? அப்போ என்ன நடந்திருக்கும்?”… கேள்விகள் உள்ளே அவளைக் குடைய என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.
இப்போ என்ன செய்வது? யாரிடம் போய் கேட்பது? அவர்களிடம் என்ன மொழியில் பேசுவது?… என்று யோசித்து யோசித்து மூளை குழம்பிப் போய் தட்டுத் தடுமாறி நின்றாள் சாந்தி.
தொடரும்……..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4738
