முத்தத்தால் ஒரு… 3
முத்தத்தால் ஒரு யுத்தம்! - 3
————————————
தவிப்பில் அமிழ்ந்து…
தேடலில் தொலைந்து…
பரிதவித்து…
கண்ணீரோடு கரைந்து…
ஒரு நாள் கழிந்து…
மறு நாள் பொழுதும் விடிந்தது.
காதலென்பது என்ன…
இழந்து விட்டு வருந்துவதா…?
இல்லை பிரிந்து கொண்டு அழுவதா…?
இல்லை… காதல்… காதல்… காதல்…
காதல் போயின் சாதல்… சாதல்… சாதல்…
என்று சொல்லிச் சொல்லிச் சாவதா…?
ம்… நேரம் செல்லச் செல்ல…
சந்துரு பொறுமையை இழந்தான்…
எப்படியும் இன்று சந்தியாவைச் சந்தித்தே ஆக வேண்டுமென்று
அவன் மனம் துடி துடித்தது…
அதற்கு மேலும் அவன் பொறுமை இல்லாதவனாய்…
ஒரு முடிவோடு தொலைபேசியை எடுத்து…
சந்தியாவின் கைபேசி நம்பரை அழுத்தினான்.
மறு முனையில்…
“ஹலோ”…
அந்தக் குரலைக் கேட்டதும்தான்…
தன்னையே மறந்து நின்றான் சந்துரு.
”ஹலோ… யார் பேசுறீங்க”… என்று சந்தியா கேட்கவும்…
மீண்டும் நிஜ உலகிற்கு வந்தவனாய்…
“சந்தியா… நான் சந்துரு பேசுறன்…
ப்ளீஸ்… போனைக் கட் பண்ணிப் போடாத…
உன்னோடு நான் கொஞ்சம் பேச வேணும்…
இன்னும் முப்பது நிமிசத்தில…
உங்க வீட்டிற்குப் பின்னால உள்ள…
அந்த ஒழுங்கைக்கு நான் வருவன்…
நீயும் கட்டாயம் வந்திடு…
நான் உனக்காகக் காத்திருப்பன்… என்ன…?”
என மூச்சு விடாமல் கூறி விட்டு….
சந்தியாவின் பதிலுக்குக் காத்திராமல்…
தொலைபேசியை வைத்தான்.
அவன் பேசி முடித்து…
தொலைபேசியை வைத்தும் விட்டான்…
இவள் மட்டும் இன்னும் கைபேசியை காதில் வைத்தபடியே நின்றாள்.
சிறிது நேரம் ஏதோ ஆழ்ந்த யோசனையில் நின்றவளும்…
ம்… போகாவிடிலும் இவன் கோபித்து விடுவான்…
எதற்கும் போய்… என் கோப தாபம் எல்லாம் தீரும் வரை…
நல்ல ஏச்சு கொடுத்திட்டு… திரும்பி வந்திட வேணும்…
என்ற முடிவோடு சந்துருவைச் சந்திக்கத் தயாரானாள்.
”ஆயா… நான் சுகந்தா வீட்டிற்குப் போய் வாறன்”…
என்று கூறிவிட்டு சந்துரு சொன்ன இடத்திற்குப் போனாள்…
அங்கே சந்துரு அவளுக்காகக் காத்து நின்றான்.
எப்படி எப்படி எல்லாம் ஏச வேண்டும்…
என திட்டமிட்டுச் சென்றாலும்…
அவனைக் கண்டதும் பேச்சு மூச்சில்லாமல்…
ஏதோ வேப்பம் குழை அடித்து விட்டவள் போல்…
விறைத்துப் போய் நின்றாள் சந்தியா.
அவளின் மௌனத்தைக் கலைத்தவனாய்…
”சந்தியா… என் மீது உனக்குக் கோபமா?”…
“பின்ன… கோபம் இல்லாமல்…?…
நீங்க நடந்து கொண்ட விதம் சரியா சந்துரு…?
சொல்லுங்க பார்க்கலாம்…?”
பதிலுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்தான் சந்துரு.
தனக்குச் சரியென்று மனதில் பட்டால்…
அதில் தவறில்லை என நினைத்து…
அதை அப்படியே செய்து முடித்துவிடும் சுபாவம் உள்ளவன் அவன்.
சந்துரு தன் உதடுகளை அழுத்தமாக இறுக்கி…
பிறகு ‘சப்’ புக் கொட்டிக் கொண்டு…
தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு…
அவனே சொன்னான்…
“அது சரி என்று வாதாட நான் வரவில்லை சந்தியா…
ஆனாலும்… எனக்கு அது பிழை போலவும் தெரியவில்லை…
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு…
காலம் நேரம் சந்தர்ப்பம் வர… நான் அப்படி நடந்து கொண்டன்”.
“சந்துரு…
நான் உங்கள்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் தெரியுமா…
இத்தனை காலமாய்…
நல்ல ஒரு நண்பியாகத்தானே உங்களோடு பழகினேன்…
அதை எல்லாம் ஒரு நிமிடத்தில் உடைத்தெறிந்து விட்டீங்களே…
எப்படி சந்துரு உங்களால இப்படி…?”…
“சந்தியா… திரும்பத் திரும்ப என்மீது பழி போடாதே…
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு… அவ்வளவுதான்.”…
“ஓ… உங்களுக்குப் பிடிச்சுக் கொண்டால்…
நீங்கள் எப்படி வேணுமென்றாலும் நடந்து கொள்ளுவீங்களோ? …
எனக்குப் பிடிச்சிருக்கா இல்லையா…
என்று கேட்டறிய மாட்டீங்களோ…?”
அவன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.
”அதைவிட இன்னுமொன்று சந்துரு…
இந்தக் காதல் கீதல் என்று…
ஏதாவது என் அப்பா அறிந்தார் என்றால்…
என்னை வெட்டிப் போடக் கூடத் தயங்க மாட்டார்…
நான் எப்போதுமே அப்பா பிள்ளை…
என் அப்பா சொல்லைத் தட்டி நடக்கவும் மாட்டேன்…
எனக்கு இதில் எல்லாம் இஷ்டமே இல்லை…
இனிமேல் தவறியும் கூட…
இப்படி ஒரு காரியத்தை செய்யத் துணியாதீங்கோ…
சீ… நினைச்சுப் பார்க்கவே ரொம்ப அசிங்கமா இருக்கு…
தெரியாமல்தான் கேக்கிறன்…
நீங்க அப்படி நடந்து கொண்டது… சரியா சந்துரு…?…”
என்று அவள் கூறி முடிக்கவும்…
அந்தக் காந்தக் கண்களில் இருந்து…
கண்ணீர் நீர்த் திவலைகள் உருண்டு விழுந்தன.
அவள் கண்களிலிருந்து வடிந்த நீர்த் திவலைகளை…
தன் கைக்குட்டையால் ஒற்றிக் கொண்டாள்.
அவள் கண்ணீரைக் கண்டு…
சந்துருவின் மனமும் லேசாக சோகம் சுமந்தது…
இருப்பினும் அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல் தைரியமாக…
” சந்தியா…
நான் உனக்கு ஒரு விஷயத்தை சூசகமா சொல்லட்டுமா..?
ம்… இது நாள்வரை என் மனதில்…
உன்னைப் போல் யாரும் இப்படிப் பதிந்ததும் இல்லை…
யாரோடும் நான் வலியப் போய்… கதைத்ததும் இல்லை…
நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால்…
இது உண்மையா இல்லையா என…
எம் வகுப்பில் யாரிடமாவது கேட்டுப் பார்.
சந்தியா… உன்னைக் கண்ட நாள் முதல்…
நான் உன்னைத்தான் நேசிக்கிறன்…
எனக்கு உன் நேசிப்பை விட…
இந்த உலகத்தில் வேறு எந்த நேசிப்புமே கிடையாது…
இது உனக்குப் புரியுமா?”…
சந்தியா பதில் ஏதும் சொல்லாது சிலைத்துப் போய் நின்றாள்…
சில நிமிடங்களாகியும் சந்தியாவின் மௌனம் கலையவில்லை.
அந்த மௌனத்தின் அர்த்தம்…
சந்துருக்கும் மெல்லப் புரியத்தான் செய்தது.
முழு விடுதலையைச் சுவாசித்து…
பூப்பதுதான் புனிதமான காதல்…
அது எந்தச் சிறைக்குள்ளும்…
எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும்…
அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது.
அந்தக் கணத்தில்…
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுக்களாகி…
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன.
அமைதியாய் நின்ற அவள் கண்களிலிருந்து…
பொழ பொழவென கண்ணீரும் வடிந்தது…
அவள் மனமெல்லாம் ஏதோ ஓர் பயம் தொற்றிக் கொள்ள…
” சந்துரு… இந்தக் காதல் எல்லாம் என் அப்பாவுக்குப் பிடிக்காது”…
”என்ன சந்தியா?…
நான் உன்னைத்தானே காதலிக்கிறன் என்று சொன்னன்….
உன் அப்பாவையா நான் காதலிப்பதாகச் சொன்னன்..?
இப்போது எதுக்கு போய்…
அந்தப் பெரிசை எல்லாம் இங்கே இழுக்கிறாய்…?”
என… அவளைச் சிரிக்க வைக்க முயன்றான் அவன்.
அவன் தந்தையை அப்படிச் சொன்னதும்…
அதுவரை அழுகையோடு அமைதியாய் நின்ற அவள்…
கண்களில் கோபம் கொப்பளிக்க…
”நிறுத்துங்க சந்துரு…
யாரைப் பற்றி நீங்க என்ன கதைக்கிறீங்க…?
என் அப்பாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்…?
யாரைப் பற்றி வேணும் என்றாலும்…
நீங்க என்ன வேணுமென்றாலும் சொல்லுங்கோ…
ஆனால் என் அப்பாவைப் பற்றி…
ஒரு வார்த்தை தேவையில்லாமல் கதைத்தீர்களேயானால்…
நான் கொலைகாரி ஆகக் கூடத் தயங்க மாட்டேன்…”
ஆமா… நான் ஒன்று சொல்லுறன்…
அதை வடிவாகக் கேட்டுக் கொள்ளுங்கோ…
இன்றோடு எனக்கும் உங்களுக்கும் இருந்த உறவே அறுந்து போகிறது…
இனிமேல் எந்தக் காரணம் கொண்டும்…
என் முகத்தில் நீங்கள் முழிக்கவும் கூடாது.
நானும் உங்கள் முகத்தில் முழிக்கவும் மாட்டேன்…”
என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள் சந்தியா.
சந்தியாவின் இந்த வார்த்தைகள்…
சந்துருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தின.
அவன் கண்கள் சிவந்தன…
அவனது மனதின் படபடப்பு அதிகரித்தது.
ஏட்டிக்குப் போட்டியாக எவரும் எதிர்த்துக் கதைப்பது…
அவனுக்கு ஒரு போதும் பிடிப்பதில்லை.
“ஏய்… ஏய்… ஏய்… கொஞ்சம் நில்லு…
இப்ப என்ன நடந்து போச்சு என்று நீ இப்படி துள்ளிக் குதிக்கிறாய்?”…
என கேட்டவாறு ஒரு அடி முன் வைத்து அவளை நெருங்கினான்.
“நான் சொல்வதையும் நீயும் வடிவாகக் கேட்டுக் கொள்…
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு…
உன்னை பிடிச்சபடியாலதான்…
நான் அப்படி நடந்து கொண்டன்….
அது சரியென நான் வாதாட வரவுமில்லை…
அது பிழை என எனக்குப் படவும் இல்லை.
ஆனால் உன் அப்பாவைப் பற்றி கதைச்சது…
ஒரு நகைச் சுவைக்காகத்தான்…
அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுறன்.”
அதோடு விடாமல் அவன் மேலும் மேலும்…
தன் உள்ளத்தைத் திறந்து தைரியமாகப் பேசினான்.
சந்தியா… நான் மனம் விட்டுச் சொல்கிறேன்…
உன்னைப் பார்க்காமல்…
உன்னோடு பேசாமல்…
உன்னோடு பழகாமல்…
என்னால் இருக்கவே முடியவில்லை…
இனி முடியவும் முடியாது.
உன்னை நான் நேசிக்கிறேன்…
உயிருக்குயிராய் நேசிக்கிறேன்…
என் உயிருக்கும் மேலாய் …
உன்னை நான் நேசிக்கிறேன்.
நீ எனக்கு இல்லை என்றால்…
எனக்கு இந்த உலகமே வேண்டாம்…
ஏன் இந்த வாழ்க்கை வேண்டாம்…
ம்… எதுகுமே எனக்கு வேண்டாம்…
இது விளையாட்டு அல்ல…
இது நிஜம்… இது சத்தியம்.”
எனச் சொல்லியவாறே…
மீண்டும் அவளை இழுத்து…
அவள் இதழ்களில் தனது இதழ்களைக் குவித்து…
மெல்லியப் பூவினை முத்தமிடுவதைப் போல்…
”இச்” என முத்தத்தை பதித்து விட்டு…
தன் மோட்டார் சைக்கிலை ஸ்ராட் செய்தவாறே…
“ஐ லவ் யூ சந்தியா…
நீ செய்வதை செய்து பார்… இதுதான் சந்துரு!”…
என கூறியவாறே விரைந்து பறந்தான் அவன்.
முதல் முத்தத்திலிருந்தே மீளாது தள்ளாடி நின்ற சந்தியா…
இந்த இரண்டாவது முத்தத்தோடு…
அப்படியே கற்சிலையாகிப் போனாள்!
அன்றோடு அவள் மனம் கல்லாய் போனதுதான்…
அதன் பின் கனியவே இல்லை.
காலங்கள் விரைந்தோடிக் கரைந்தன.
கல்லூரி வாழ்க்கையும் முடிந்து…
பல்கலைக்கழக வாழ்க்கையும் ஒன்றாகவே முடித்த போதும்…
அவள் மனம் மட்டும் இன்றும் கரையாமல்…
மௌனத்தால் யுத்தம் செய்கிறாள்!
அன்று அந்தக் கவிதையைக் கண்ட நாள் முதல்…
அவன் கவிஞனாகிப் போனதுவும்…
அவள் நினைவால் பக்கம் பக்கமாய்…
கவிதை வடித்ததுவும் யாருக்கும் தெரியாது.
தினமும் அள்ளி அள்ளி எடுத்துத் தீர்த்தாலும்…
கொஞ்சமும் குறையவேயில்லை…
அவளது நினைவின் நீட்சி.
அள்ளக் அள்ளக் குறையாது…
அன்றாடம் தொடரும் நினைவுகளோடு…
இதோ இப்போதும்…
கவிதை வடித்த வண்ணமே இருக்கிறான் அவன்.
ஓ!…
எனது நிழலில்
ஒளிந்து கொண்டே
எனக்கு
மருத்துவம் பார்க்க மறுக்கும்
என் இதயத்துத் தேவதையே!
இப்போதும்
உனை நான் நெருங்க நெருங்க…
நீ எனை விட்டு
விலகி விலகியே செல்கிறாய்!
உனது நிழலைத் தேடியலைந்து
நாளெல்லாம்
காதலால் கவிமாலை புனைந்து
உனக்காய் காத்திருக்கிறேன்!
நான் நடந்து செல்லும்
பாதைகள் எங்கிலும்
உன் நினைவுகளின் தடங்கள்தான்!
கடலின் கரையில்
நடக்கும் பொழுதிலும்
அலையாய் வந்து
என் கால் பிடித்திழுப்பதும்
உன் நினைவுகள்தான்!
இப்படியே
உன் நினைவுகளின் கிளைகளைப்
பிடித்துத் தொங்கித் தொங்கி
உனக்காய்த் தேய்ந்து தேய்ந்து
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
இந்த மனசு!
ஓ!…
என் சுவாசமே!
இன்னும் எத்தனை காலங்களிற்கு
மௌன யுத்தம் செய்து
எனைக் கொல்லப் போகின்றாய்…?
முற்றும்!
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8634
K. MATHURAVALLI சொன்னது,
ஜூன் 13, 2008 இல் 10:47 நான்
Hello Sandhiya Madam,
This is very fantastic love story.
Madhu.
சத்தியா சொன்னது,
ஜூன் 13, 2008 இல் 8:55 பிற்பகல்
//Hello Sandhiya Madam,
This is very fantastic love story.
Madhu.//
ம்ம்… உங்கள் வாழ்த்திற்கு நன்றி மது.