முத்தத்தால் ஒரு… 2
முத்தத்தால் ஒரு யுத்தம்! - 2
———————————-
மணி இரவு… 21 . 30
சந்தியா இன்னும் வீடு வந்து சேராததால்…
அவள் வருகையையே எதிர் பார்த்துக் கொண்டிருந்தார் அவளின் தந்தை.
சந்தியா கதவைத் திறந்து உள்ளே நுழையவும்…
“வந்திட்டியாம்மா சந்தியா…? …
என்னம்மா இவ்வளவு லேற்…?”…
மகளைக் காணாத தவிப்போடு காத்திருந்த அந்தத் தந்தையின் உள்ளம்
பரிவோடும், பாசத்தோடும் விசாரித்தது.
“இல்லப்பா… எல்லாம் முடிஞ்சு வெளிய வர நேரமாச்சு…
அதோட வெளியில வேறு ஒரே மழை…
அதுதான் சரியான லேற்றாப் போச்சப்பா…”
“அடடா… அதுதான் லேற்றா…?…
சரிம்மா… நீயும் நல்லா களைச்சுப் போய்த்தான் வந்திருக்கிறாய்…
நீ சாப்பிட்டுப் படம்மா… நாளைக்குக் கதைப்பம்”…
என்று கூறி விட்டு… தந்தையும் தூக்கத்திற்குச் சென்று விட்டார்.
அந்த வேளை சந்தியாவின் அருகில் வந்த ஆயாவோ…
“சந்தியாம்மா… என்னம்மா இது…
மழையில நல்லா நனைஞ்சு போனீங்க போல இருக்கே…?”…
என்றவாறே ஓடிச் சென்று துவாயை எடுத்து வந்து…
அவள் தலையைத் துவட்டினாள்.
“இல்லை ஆயா…
கொஞ்சத் தூறல்தான் தலையில பட்டிருக்கு…
விடுங்கோ ஆயா… நானே துடைக்கிறன்”…
“சும்மா விடம்மா சந்தியா…
அடை மழையில வேணுமென்றால் நனையலாம்…
இந்தத் தூறலில் தானம்மா நனையக் கூடாது…
அது தலையிடி, காச்சல், சளி என்று…
இல்லாத பொல்லாத வருத்தங்களை எல்லாம் கொண்டு வந்திடும்”…
என்று சொல்லியவாறே…
அவள் கூந்தலை அவிழ்த்து ஈரத்தை நன்றாகத் துடைத்தாள்.
ம்… சந்தியா பிறந்த போது அவளின் தாய் இறக்கவும்…
அந்தவேளை சமையலுக்காக…
அந்த வீட்டுக்குள் நுழைந்தவளே இந்த ஆயா.
சமையலுக்கு என நுழைந்தவளும்…
பிள்ளைகள் மேல் காட்டிய அன்பாலும், பாசத்தாலும், பரிவாலும்…
அதேவேளை…
அவளுக்கென்று சொந்த பந்தமென்று யாருமில்லாமல்…
அனாதையாகத் திரிந்த…
அவளின் கண்ணீர்க் கதையை அறிந்த சந்தியாவின் தந்தை …
அப்படியே நிரந்தரமாக வீட்டில் இடம் கொடுத்து…
அவளை வேலைக்காக அமர்த்தி விட்டிருந்தார்.
தனித்து திரிந்த அவளும்…
அந்தப் பிள்ளைகளின் மேல் பாசத்தைக் கொட்டி…
அன்பாகக் கவனித்து…
தன் தனிமையையும், வெறுமையையும் போக்கி நின்றாள்.
இருப்பினும்… சந்தியாமேல் தனியான ஒரு பாசத்தை
வளர்த்து வைத்திருந்தாள் அந்த ஆயா.
ஆயா அந்த வீட்டிற்குள் நுழைந்த போது… சந்தியா மிகவும் சிறியவள்.
அன்னையைத் தேடி அழுவதும்…
யாரோடும் பேசாது அடிக்கடி தனியே ஒதுங்கிக் கொள்ளும் அவளை…
எப்போதும் தன்னோடு அணைத்து வைத்திருப்பாள் இந்த ஆயா.
அந்தச் சின்னஞ் சிறு பிஞ்சின் ஏக்கமும் பார்வையும்…
ஆயாவைப் பாடாய்ப்படுத்த…
பெற்ற தாயைப் போல் அவள் மேல் பரிவு காட்டத் தொடங்கினாள்.
அன்று குழந்தையாய் அள்ளிக் கொஞ்சிய சின்னச் சந்தியா…
இன்று குமரியாய் ஆயா முன்னால்!
ஆனாலும் கூட…
இன்றும் சந்தியா குழந்தைதான்… இந்த ஆயாவுக்கு…
தலையை நன்கு துவட்டி விட்ட ஆயாவும்…
“சாப்பிடவாம்மா சந்தியா”… என்றாள்.
“இல்லை ஆயா… எனக்குப் பசிக்கவே இல்லை.
எனக்குச் சாப்பாடு வேண்டாம் ஆயா…
எல்லாவற்றையும் எடுத்து மூடி வைச்சிடுங்கோ”…
எனக் கூறி விட்டு கட்டிலில் போய் விழுந்தாள்.
ஆம்… சந்தியா இன்னமும் சந்துரு கொடுத்த…
அந்த முத்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.
அவள் கட்டிலில் விழுந்தது மட்டும்தான்…
ஆனால் அவளால் கண்களை மூடித் தூங்கவும் முடியவில்லை…
தூக்கமும் கூட அவளை அணைக்கவில்லை.
சந்துருவை நினைத்துப் பார்த்த போது…
அவளுக்குக் கோபம் கோபமாகவே வந்தது.
ஏன்… ஏன்… ஏன்….
இப்படி நடந்து கொண்டான் சந்துரு…?
அவன் மனதைச் சஞ்சலப்படுத்தும்படி…
நான் ஒரு போதும் நடந்ததில்லையே…
மறந்தும் கூட ஒரு வார்த்தை…
எல்லை தாண்டிக் கதைத்ததில்லையே…
இப்படி நான் இருந்த போதும்…
இவன் எப்படி… இப்படி…?
நான் இதுவரை எங்காவது பிழை விட்டிருக்கிறேனா?…
அல்லது இன்று ஏதாவது பிழை விட்டேனா…?
இப்படியே அவள் உள்ளம்…
எல்லாவற்றையும் தேடித் தேடி ஆராய்ந்து கொண்டிருக்க…
அந்த இரவின் மடியில் உறக்கத்தைத் தொலைத்து விட்டு…
தவித்துப் போய்க் கிடந்தாள் சந்தியா.
மறுபக்கம்…
வீடு சென்ற சந்துருக்கும் தூக்கம் தொலைவாய்ப் போக…
ஜன்னலைத் திறந்து…
மெல்லத் தீண்டும் தென்றலின் சுகத்தோடு…
தன்னையே மறந்து…
அந்தத் தேவதையின் நினைவுகளில் நனைந்து போய் நின்றான்.
அந்த நிலவைப் பார்த்தான்…
அந்த நிலவிலும்…
அந்தத் தேவதையின் முகமே தென்பட…
அவன் மனசு மாடு மாதிரி அவள் நினைவுகளை
அசை போடத் தொடங்கியது.
முதல் முத்தத்தின் பரவசம் ஒரு புறமுமாய்…
இனம் புரியாத தவிப்பும் ஒரு புறமுமாய்…
குட்டி போட்ட பூனை போல்…
குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்.
படிக்கப் புத்தகம் திறந்தான்…
பக்கமெல்லாம் அவளாய் நிறைந்தாள்.
படுக்கையில் போய் விழுந்தான்…
பஞ்சனை முள்ளாய்க் குத்தியது.
வீட்டில் இருக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை…
எந்த வேலையிலும் முழுக் கவனத்துடன் ஈடுபடாமல்…
மனம் சண்டித்தனம் செய்தது.
அவளின் முதல் பார்வைத் தீண்டலால் பைத்தியமாகி…
அவன் மனம் அலைந்த போதும்…
இது நாள் வரை அந்தக் காதலை அடக்கித்தான் வைத்திருந்தான்.
ஆனால் இன்று…?
ம்… அவன் இதுவரை நினைத்துப் பார்க்கவில்லை…
இப்படி ஒரு சம்பவம் நடக்குமெனவும்…
இந்த நாள் அவனுக்கு ஒரு இன்ப நாளாய்…
மறக்க முடியாமல் போகுமெனவும்.
அவன் உடம்பெல்லாம் புதுவித உணர்வில் தவித்தது…
அவன் உதடுகள் இரண்டும் கரன்ட் அடித்தது போல்…
கிர்… கிர்… என்ற வண்ணமே இருந்தன.
கனவுகள் பல மொட்டவிழும்…
பயமறியாப் பருவம் அது…
காதலையே கண்ணில் நிறைத்து…
தேவதையை தேடும் நெஞ்சம் அது.
ஓ!… முத்தம்
முதல் முத்தம்
உண்மையில் இத்தனை இனிப்பானதா…?
தீக்குள் விரலை வைத்து…
தீண்டும் இன்பத்தைக் காணும் தவமா இது…?
நினைத்து நினைத்து…
ஏதோ ஓர் இன்ப வெள்ளத்தில் மிதந்தவனாய்…
மீண்டும் போய்ப் படுக்கையில் விழுந்தான்…
ம்கூம்… தூக்கம் வரவே இல்லை.
ஆனாலும் ஒரு இரவு கழிந்து…
புதுப் புலர்வு மலர்ந்தது.
காலை 09.00 மணி…
வீட்டு வாசலின் பெல் அழுத்தும் சத்தம்…
எழுந்து சென்ற ஆயா கதவுத் துவாரத்தினூடே பார்த்தாள்…
அங்கே சந்துரு நின்று கொண்டிருந்தான்…
விரைந்து வந்து…
“சந்தியா சந்தியா”…
என அழைத்தவாறே கதவில் தட்டினாள் ஆயா…
படுக்கையில் உழன்று கொண்டிருந்த சந்தியாவும்…
“என்ன ஆயா”…
“உங்க கூடப் படிக்கிற அந்த சந்துருத் தம்பி வந்திருக்கம்மா”
சந்துரு… என்று ஆயா கூறியதும்…
சந்தியாவின் உடல் ஒரு கணம் நடுங்கியது…
எழுந்து வந்து மெல்லக் கதவைத் திறந்த சந்தியா…
“ஆயா நான் இல்லை என்று சொல்லுங்கோ”…
“ஏம்மா சந்தியா…?”
“இல்லை ஆயா… நான் இன்னமும் எழுந்திருக்கவே இல்லை…
இதோடு எப்படி சந்துருவோடு…
பரவாயில்லை ஆயா…
நான் சுகந்தா வீட்டிற்குப் போய் விட்டதாகச் சொல்லுங்கோ”…
“ம்”.. என கூறிச் சென்ற ஆயாவும் கதவைத் திறந்து…
“ஓ… தம்பி சந்துருவா?…
வாங்க தம்பி… சந்தியாவைத் தேடியா வந்தீங்க…?”…
“ம்” … என்றவாறே தலையசைத்தான் சந்துரு.
“தம்பி இப்ப கொஞ்சத்துக்கு முன்னாடிதான்…
சந்தியா, சுகந்தா வீட்டுக்குப் போவதாகச் சொல்லிப் போனாளே…”
“ஓ… அப்படியா?” …
என்றவாறு தலையைத் திருப்பியவனுக்கு…
வாசலில் கிடந்த சந்தியாவின் செருப்பு…
அவள் உள்ளே இருப்பதை…
அவனுக்கு அடையாளம் காட்டிக் கொடுத்தது.
அவனும் சிரித்தவாறே…
“சரி ஆயா…
சந்தியா வந்ததும் சந்துரு வந்ததாகச் சொல்லி…
எனக்கு மறக்காமல் ஒரு தடவை போன் பண்ணச் சொல்லுங்கோ…
ஒரு முக்கியமான விசயம் கதைக்கனும்…
மறந்திடாமல் சொல்லுங்கோ… என்ன?”…
எனக் கூறி விட்டு திரும்பினான் சந்துரு.
ஓ… நான் நேற்று நடந்து கொண்டது…
சந்தியாவுக்குப் பிடிக்கவில்லைப் போல…
அதுதான் அவள் உள்ளே இருந்து கொண்டும்…
இல்லை எனச் சொல்லியிருக்கிறாள்…
இது நாள்வரை அவள் ஒரு தடவை கூட…
இப்படி நடந்ததே இல்லையே…
எப்போது போனாலும் அன்போடும் மரியாதையோடும்…
வரவேற்றுக் கதைப்பாளே…?
அதை எல்லாம் நினைக்கும் போது…
அவன் மனதுக்குள்ளும்…
இனம் புரியாத ஒரு வலி புகுந்து மெல்ல வாட்டவே செய்தது.
அன்று முழுவதும்…
சந்தியாவின் அழைப்பிற்காகக் காத்திருந்தவனுக்கு…
இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
அவனுக்கு உலகமே இருண்டது போல் கிடந்தது…
அந்த வீடே பூக்கள் இல்லாத சோலை போல…
களையிழந்து சூன்யமாய் தெரிந்தது.
அவளை நான் இழந்து விடுவேனோ…
என்று உள்ளம் துடிக்க…
அந்த இழப்பின் வேதனையை…
அன்று அவன் முதன் முதலாய் அனுபவித்தான்…
அன்றைய பொழுது…
அவளைப் பார்க்க முடியாமல் போனதையும்…
அவள் குரலைக் கேட்க முடியாமல் போனதையும்…
அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அன்றைய நாள் முழுவதையும்…
நரக வேதனையில் கழித்தான்.
ஒருபோதும் எதற்கும் கலங்காதவன்…
அன்று முதன் முதலாய்க் கலங்கினான்…
இரவு முழுவதும் கண்ணீரிலேயே கரைந்தது.
அடி
என் வானத்துத் தேவதையே!
வந்த ஒரு நாளிலேயே
ஒரு விநாடிப் பொழுதில்
மின்னலாய் பறந்து வந்து
என் இதயத்துக்குள் புகுந்து…
இம்சை செய்த
இன்பத்துப் பட்டாம் பூச்சி
நீ தானடி!
பள்ளிப் பூங்காவில்
என் படிப்பை
அடிக்கடி குழப்பித் திரியும்
பருவத்துத் தேரும் நீ தானடி!
நான்
என்ன பாவம் செய்தேன்…?
நரகம் பிடித்த நாளாய்
நகர்ந்த பகலிலும்…
கிரகணம் பிடித்த நிலவாய்
நீளும் இரவிலும்…
உனக்காய் ஏங்குகிறேன்
உன் நினைவில் வாடுகிறேன்!
துக்கம் நெஞ்சைப் பிழிய
தூக்கம் தொலைத்துக் கிடக்கிறேன்!
விழி மூடிக் கொள்ள முடியாமல்
விழித்துக் கொண்டு…
உன்னிடம்
காதல் பிச்சை ஏந்துகிறேனே…!
ஏன் இப்படி
என்னை வஞ்சித்தாய்…?
தொடரும்…..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8610