முத்தத்தால் ஒரு… 1
முத்தத்தால் ஒரு யுத்தம்! - 1
———————————–
அன்று வெள்ளிக் கிழமை…
அன்றைய காலை வகுப்பு முடிவடைந்ததும்…
அந்த வகுப்பு மாணவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து…
மியூஸியத்திற்குச் செல்வதுதான் அவர்களின் அன்றைய திட்டம்.
அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து செல்வதற்கு வசதியான
ஒரு வாகனத்தை சந்துருதான் ஒழுங்கு செய்திருந்தான்.
திட்டமிட்டிருந்தது போலவே மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு
எல்லோரும் கிளம்பினார்கள்.
இரண்டு மணி நேரப் பயணம்… அந்த வேளை…
நட்போடு… நண்பர்களும், நண்பிகளும் ஒன்று சேர்ந்து விட்டால்…
சந்தோசத்தைக் கேட்கவும் வேண்டுமா என்ன…?
ம்… பயணத்தின் போது…
ஆடலும், பாடலும், கூடலும், ஊடலும் என…
பலவித பாவனைகள் காட்டும்
அந்தப் பறவைக் கனவுகள் எல்லாம்
அங்கே அட்டகாசமாய் அரங்கேறிக் கொண்டிருந்த அந்தவேளை…
“டேய் சந்துரு… நீயும் ஒரு பாட்டொன்று பாடனடா…”
சந்துருவின் நண்பன் பாலா நச்சரிக்கத் தொடங்கினான்.
சந்துரு நன்றாகப் பாடுவான்…
அவனின் குரல் ஹரிஹரனின் குரலை ஒத்திருக்கும்…
அதனால்தானோ என்னவோ…
அவனும் ஹரிஹரன் பாடிய பாடல்களையே எப்போதும் தெரிவு செய்து…
அதேபோல் நெளிவு சுளிவுகளோடு அழகாகப் பாடுவான்.
பாலா கேட்டதைத் தொடர்ந்து…
எல்லோருமே அவனைப் பாடும்படி கேட்க…
அவனும் என்ன பாடலைப் பாடலாம்…
என யோசித்துக் கொண்டிருந்தான்.
“டேய்… பாடச் சொன்னால் நீ பாடுவதை விட்டுவிட்டு…
அப்படி என்னதான்டா யோசித்துக் கொண்டிருக்கிறாய்…?”
“பொறுடா பாலா…
எந்தப் பாட்டு இப்போ முழுமையாக ஞாபகத்தில் இருக்கு…
என்று யோசித்துக் கொண்டிருக்கிறன்…
என்னை குழப்பாமல் கொஞ்சம் சும்மா இருடா பாப்பம்.
அப்போது சந்தியாவும்…
“என்ன சந்துரு எல்லோரும்தான் கேட்கிறோமே…
இந்த இனிமையான குரலால்…
ஒரு பாட்டை எமக்காகப் பாடத்தான் கூடாதா… என்ன…?”
ஒரு சின்ன அதிகாரக் குரல்…
அங்கே சலங்கை ஒலி போல!… ஒலித்து ஓய்ந்தது.
சந்தியா சொன்னதும்…
சந்துரு நிமிர்ந்து சந்தியாவைப் பார்த்தான்.
அந்தக் கணத்திலும்…
அவள் கண்களில் ஒரு குறும்பு கலந்த கவர்ச்சி இருந்தது…
அவள் விழிகளின் வீச்சு…
அவன் விழிகளை ஒரு தடவை மயக்கி…
ஆயிரம் கவிதைகளை அள்ளி வீசிச் சென்றன.
அடுப்பில் விழுந்த சுள்ளிகளாய்த் துடிக்கும் பதின்ம வயது அது!…
உற்சாகம் கொப்பளிக்கும் இளங்கன்று பருவம்
அவனின் அந்தப் பருவம்!…
அவளின் பார்வையையே வரமாய் வேண்டி…
தினமும் அலையும் பருவம்!
ம்… அன்று ஒருநாள் காலைப் பொழுதில்… முதன் முதலாய்…
வெள்ளை நிற யூனிபோமும்… இரட்டைப் பின்னலோடும்…
கையில் இருந்த புத்தகங்களை தன் மார்போடு அணைத்துக் கொண்டு…
வகுப்புக்குள் புதிய மாணவியாக நுழைந்தாள் சந்தியா.
ஆசிரியர் இருக்கையில் அமரச் சொன்ன போது…
இவனைக் கடந்து போனவள்…
மெல்லத் திரும்பி இவனைப் பார்த்து…
எழிலாய்ச் சிரித்த அந்தக் கணப் பொழுதிலேயே…
இவனின் மனத்தில் தீப்பற்றிக் கொண்டது.
அந்தக் காந்தப் பார்வை!
அந்தப் புன் சிரிப்பு!
அந்த அழகிய அமைதியான முகம்!
திரும்பத் திரும்ப…
இவன் மனத்தில் எப்போதும் அவளே!
எங்கோ இருந்து வந்து…
அந்த வகுப்பில் சேர்ந்த நாள் முதல்…
அவன் மனதில் இவள் நுழைந்து…
அவனை இம்சை செய்த வண்ணமே இருந்தாள்.
அவளைப் பார்க்கின்ற ஒவ்வொரு வேளைகளிலும்…
ஒரு தேவதையின் பூரண முகவரியே அவனுக்குத் தெரிந்தது.
அவள் அழகு ஒரு வித்தியாசமான கவிதை மாதிரி!
குணம் அறிவார்ந்த அவள் குணம்!
அவள் அழகார்ந்த குணம்!
ஓ!… அது தங்கத் தாம்பாளத்திற்கு…
வைரப் பொட்டிட்ட அழகாக இருந்தது.
காலங்கள் உருண்டோடின… இருவருக்குள்ளும் சிநேகிதம் உருவாகின.
அவளுடைய ஒவ்வொரு பார்வைக்குள்ளும்…
ஓராயிரம் பொருள் பொதிந்து சிதற… பேதலித்துப்போய்…
அவள் அழகிலும்… அவளின் விழி வீச்சிலும்…
அவன் இதயம் அடிக்கடி தடுக்கி விழந்து கொண்டுதான் இருந்தது.
இதுவரை அவன் காதலில் விழாத போதும்…
கல்லில் பூக்கும் பூ போல…
அவன் மனதிலும் காதல் பூ மெல்லப் பூக்கவே ஆரம்பித்தது.
சந்தியா பாடுங்களேன்… என்று சொன்னதுதான் தாமதம்…
சந்துரு மெய் மறந்து… பாடலைப் பாடத் தொடங்கினான்…
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே…
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா…
என அந்த அழகான பாடலை…
அந்த மயக்கும் மதுரக் குரலால் பாட…
எல்லோரும் தம்மை மறந்து ரசித்துக் கேட்டவண்ணமே இருந்தனர்.
சந்துருவின் பார்வை சந்தியா மேல் விழுகிறது…
சந்தியாவும் தன் விழிகளை வெளியே வீசியவளாய்…
இயற்கையை ரசித்தபடியே…
அவனின் பாடலையும் ரசித்துக் கொண்டே இருந்தாள்.
சந்துருவின் அந்தப் பாடல் கேட்ட சந்தோசத்தோடு…
மியூஸியத்தை சென்றடைந்து…
மியூஸியத்தையும் சுற்றிப் பார்த்தாயிற்று.
மியூஸியத்தை விட்டு எல்லோரும் வெளியே வரும் நேரம்…
வெளியே எங்கும் இருள்…
அது மட்டுமல்லாமல்…
சோவென மழையும் வேறு அடித்துக் கொட்டிக் கொண்டிருந்தது.
அந்த மழையையும்… இருளையும் தாண்டி…
எல்லோரும் வீடு போய்ச் சேர வேண்டும்…
அருகில் வீடு உள்ளவர்கள் தம் வீடு செல்ல தயாரானார்கள்…
சிலர் அவர்களின் பெற்றோர்கள் வந்திருக்க…
அவர்களோடு போக ஆயத்தமானார்கள்…
மிகுதிப்பேர் ஒரு புறமாக ஒதுங்கி நின்று கொண்டனர்.
உள்ளேயிருந்து வந்த சந்துரு…
மெல்ல வெளியே கண்களைச் சுழல விட்டான்…
பின்னர் திரும்பி எல்லோரையும் பார்த்துவிட்டு…
தன் சக நண்பர்களை அழைத்தான்.
“டேய்… வெளிய நல்லா இருட்டிப் போச்சுதடா…
அதோட நல்ல மழை வேறு கொட்டுது…
நீங்க நீங்க தனித் தனிய மாறாமல்…
நம்ம தோழிகளையும் அவரவர் வீட்டுக்கு கூட்டிச் சென்று
விட்டு விட்டுப் போக வேணும்…
அதுதான் நமக்கும் நமது நட்புக்கும் நல்லது”… என்றான்.
அந்த வகுப்பில் சந்துருதான் ஹீரோ…
அவன் எது சொன்னாலும் அது போலதான் அங்கே எல்லாமே நடக்கும்.
அவன் பேச்சுக்கு யாரும் மறு வார்த்தை சொல்லி…
யாரும் மறுப்புத் தெரிவிக்கவும் மாட்டார்கள்.
ம்… சந்துரு மிகவும் நல்லவன்…
அன்பானவன்… நேர்மையானவன்.
ஒரு காரியத்தைத் திட்டமிட்டான் என்றால்…
அதை அப்படியே செய்து முடிக்கும் வல்லமை உள்ளவன்.
அவன் கெட்டிக்காரன் மட்டுமல்ல… மிகுந்த கோபக்காரனும்தான்.
ஆனாலும் பழகுவதற்கு மிக மிக இனிமையானவன்…
எல்லோருடனும் மிகவும் அன்பாகத்தான் பழகுவான்.
அவன் படிப்பில் மட்டும் கெட்டிக்காரன் அல்ல…
இன்னும் பல பல திறமைகள் அவனுள் குடிகொண்டிருந்தன…
அவனின் அத்தனை திறமையாலும்…
அவன் எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்திருந்தான்…
என்பதுதான் உண்மை.
சந்துரு சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு…
எல்லோரும் செயல்பட ஆரம்பித்தனர்.
அவனும் ஒவ்வொருவரையும் பிரித்துப் பிரித்து…
நண்பர்களிடம் பொறுப்பைக் கொடுத்தான்…
மிகுதியாக நின்றது சந்தியாவும், அவளின் தோழி சுகந்தாவும்தான்.
சந்தியாவின் மிக நெருங்கிய நண்பி சுகந்தா…
சந்தியாவின் வீடு, அவள் தோழி சுகந்தாவின் வீடு…
சந்துருவின் வீடும் ஒரளவு கிட்டக் கிட்டத்தான் இருந்தது.
அதனால் அவர்களை தான் கூட்டிச் சென்று விடுவதாகச் சொன்னான் சந்துரு.
சரி என எல்லோரும் புறப்பட்டனர்.
வீதியில் வந்த ரக்ஸியை மறித்தான் சந்துரு…
அதில் சந்தியாவையும், சுகந்தாவையும் ஏற்றிக் கொண்டு…
தானும் ஏறிக் கொண்டான்.
மழையும் விடுவதாக இல்லை…
ஆனாலும் கூட…
யாருக்கும் அந்தப் பொழுது சலிப்பையும் கொடுக்கவில்லை.
கொட்டும் மழையும்…
மெல்லத் தீண்டும் தென்றலும்…
மேனியை வருடிச் செல்ல…
அதுவே அன்றைய பொழுதில் ஒரு இனிய சுகத்தைக் கொடுத்தது.
அந்த சுகத்தை அனுபவித்தவாறு…
மூவரும் அன்று நடந்தவைகள் பற்றி அளவளாவியபடியே…
பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
முதலில் சுகந்தாவின் வீடு வந்தது…
சுகந்தாவை அவள் வீட்டில் இறக்கி விட்டு…
Bye சொல்லி விட்டு…
மீண்டும் சந்துருவும், சந்தியாவும் ரக்ஸியில் ஏறிக் கொண்டனர்…
சந்தியாவின் வீட்டிற்குச் செல்ல இன்னும் ஒரு பத்து நிமிடம்…
பயணம் செய்ய வேண்டி இருந்தது.
மீண்டும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.
அன்றைய கால நிலையும், சூழ்நிலையும் சேர்ந்து…
அவன் மனதுக்குள் புது வித ராகம் பாட…
அவளுடன் பயணிக்கும் ஒவ்வொரு கண நேரத்திலும்…
அவன் முகத்திலும், அகத்திலும்…
ஆயிரமாயிரம் உணர்ச்சி வெள்ளம்…
இன்பமாக பொங்கி எழத் தொடங்கின.
நல்ல மழை!
இரவு நேரம்!
அருகில் தேவதையாய் அவள்!
அந்தத் தேவதைக்குப் பக்கத்தில் இருந்ததால்…
இதுவரை அவனுள் புதைந்திருந்த காதல் தீ…
பட்டெனப் பற்றிக் கொண்டு…
சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.
எதிர்புறம் இருந்து வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்திலும்…
தாண்டிச் செல்லும் மின் கம்பங்களில் இருந்து ஒளித்த…
மின் குமிழ்களின் வெளிச்சத்திலும்…
அவள் முகம் மறைந்து மறைந்து…
மீண்டும் தெரியவும்…
மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல..
அந்த இருட்டான வாகனத்தில் வெளிச்சம் வந்து போகும் போது…
அவனுக்கு அந்தத் தேவதை தெரிந்தாள்.
அவனது இதயத்தின் அறைகளில் எல்லாம்…
மெல்லிய பூவாசம் அடித்தால் போல்…
சுகந்தமாய் வாசம் வீசத் தொடங்கியது.
விரைந்து சென்ற ரக்சியும் சந்தியாவின் வீட்டிற்கு முன்னால் நின்றது.
சந்துருவின் வீடும் நடந்து போகும் தூரத்தில் இருந்ததினால்…
ரக்ஸியை விட்டு இருவரும் இறங்கினார்கள்…
அதற்குரிய பணத்தை சந்துரு கொடுத்தான்.
பாய் சந்துரு…
திங்கள் கிழமை வகுப்பில் சந்திப்போம்… ஓகே தானே?”…
என்று சொல்லியவாறு அவள் நகர…
அந்த வேளை சந்தியாவின் கைகளை இழுத்து…
அவளைத் திருப்பி…
சட்டென அவள் இதழ்களில்…
“இச்” என்று ஒரு முத்தம் பதித்தான் சந்துரு.
அப்போது அவளது மூச்சு இவனது முகத்தில் உஷ்ணமாய்ப் பட்டது.
அவளின் மெல்லிய வாசம் நாசி வழி ஏறிய போதுதான்…
உணர்ச்சிவசப்பட்டு தான் அவளை நெருங்கி…
முத்தம் பதித்திருப்பதையும் உணர்ந்தான் அவன்.
அந்தக் கணத்தில் அவள் அண்ணாந்து…
இவனது முகத்தைப் பார்க்கிறாள்…
அந்தக் காந்தக் கண்களில்…
இவனுக்கு ஒரு புது உலகமே தெரிந்தது.
இன்றல்ல என்றோ பல பல…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்…
கூடிக் குலவிக் கலந்திருந்த ஆத்மாக்கள் இரண்டறக் கலந்திருப்துபோல்…
காதலின் உச்சக்கட்ட உன்னதமான தவிப்புடன் நின்றான் சந்துரு.
இதை சற்றும் எதிர்பாராத சந்தியா…
ஒரு கணம் திகைத்து…
அப்படியே நின்று போனாள்…
பின் அயர்ந்து போய்… விழியாய் விழித்தாள்!
அவன் பிடியிலிருந்து உதறி…
தன்னை விடுவித்துக் கொண்டாள்.
அவளுக்கு இந்த உலகமே ஒரு நொடி ஸ்தம்பித்து…
மீண்டும் உயிர் பெற்றது போல் இருந்தது.
அவளால் நம்பவே முடியவில்லை…
கையால் தன் உதடுகளைத் தடவியபடியே…
கண்களில் கோபம் கொப்பளிக்க…
அவனைப் பார்வையால் முறைத்துப் பார்த்தாள்.
சந்துரு பயப்படவில்லை…
அவன் புன்முறுவலோடு…
அவள் எதிரே நின்று கொண்டிருந்தான்.
சில நிமிடம் அவனையே பார்த்தவளும்…
பின் எதுவுமே பேசவில்லை…
அந்த இடத்தை விட்டு மள மளவென நகர்ந்தாள்.
”சந்தியா… சந்தியா… ஒரு நிமிடம் நில்லேன்”… சந்துரு அழைத்தான்.
அவள் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை…
தன் வீட்டுக் கேற்றைத் திறந்து…
சடாரென அடித்துச் சாத்திக் கொண்டு…
வீட்டுக்குள் போய் விட்டாள்.
சந்துரு அவள் போவதையே வைத்த கண் வாங்காது
பார்த்துக் கொண்டிருந்தான்…
அவன் இதயம் மட்டும் பேசியது!
என் இதயத்துள் புகுந்த
இனிய தேவதையே!
உனது விழி வாசல்
கற்கண்டுப் பார்வையில்
எனை இழந்தவன் நான்!
சில காலமாய்
என் இதயத்துள் நுழைந்து
என் உயிர்வரை கலந்து
ஊசலாடிய உனக்காய்…
ம்!…
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்!
என் இதழ் பதித்து
இன்று உனக்காய் தந்துள்ளேன்!
இதோ எடுத்துக் கொள்
இன்றோடு நான்
உன்னுடன் கலந்து விட்டேன்!
தொடரும்…
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8575