பூர்வ ஜென்ம பந்தம்!
ஆதவன் தன் கடமைகளை கணம் தவறாது செய்து கொண்டுதான் இருக்கின்றான். காலதேவன் அவன் கடமையில் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றான். காலச் சக்கரம்தான் எவ்வளவு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது? அந்தச் சக்கரங்களிற்குள் மனிதன் தன்னை நுழைத்துக் கொண்டு நசிபட்டுக் கொண்டிருக்கின்றான். இயந்திர இனமாகத் தேய்ந்து கொண்டிருக்கின்றான். இதற்கு விதிவிலக்கானவர்கள் யாருமே இருக்க முடியாது தானே? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலச் சக்கரங்களிற்குள் மனிதன் அகப்பட்டுக் கொண்டு தானே உழல வேண்டியிக்கிறது.
நான்கு சுவர்களுக்கு மத்தியில் சிவாவின் மனம் மட்டும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது. எங்கும் ஒரே நிசப்தம். அமைதி என்னும் போர்வைக்குள், உலகம் என்னும் பாவை உறங்கிக் கொண்டிருந்தாள். அந்தப் பாவையின் வயிற்றுக்குள் இருக்கும் மனிதக் குழந்தைகள் மத்தியில்தான், அந்த மனிதக் குழந்தைக ளின் உள்ளக் குமுறல்களும், பெரு மூச்சுக்களும்தான் எத்தனை எத்தனை சுமைகள் கொண்டவை? கனன்று கொண்டிருக்கும் இதயங்களில் இருந்து வெளிப்படுகின்ற மூச்சுக் காற்றில்தான் எத்தகைய கொடிய வெம்மைகள்?
பொதுவாக கன்னியர்கள்தான் பெரு மூச்சுக்களோடும், விடியாத இரவுக ளோடும் போர்வைக்குள் தாங்கள் உறங்கிக் கொண்டிருப்பதாக, மற்றவர்கள் தம்மை நினைக்கும் படியாக தலையணையைக் கண்ணீரால் சத்தமின்றி நனைத்துக் கொண்டிருப்பார்கள். பெண்களிற்குத்தான் கண்ணீர் சொந்தம் என்ற உலகப் பொது அபிப்பிராயத்தை உடைத்து விடும்படியாக சில ஆண்கள் இருந்து விடுகின்றார்கள் என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மிகக் குறைவுதானே?
பலத்த சிந்தனைகள் மத்தியில் சிவாவின் மனம், தன் மனதிற்குள் உள்ள ஏக்கங்கள், தாபங்களை எண்ணி தணியாத தாகமாக தவித்துக் கொண் டிருந்தது. அவனது ஏக்கப் பெரு மூச்சுக்கள் அந்த நான்கு சுவர்களுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அவனது உள்ளம் அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்தது.
பாடல்—-எங்கே எங்கே என் வெண்ணிலவு…
படம்—–சதுரங்கம்
அவன் மனம் இப்படி அமைதியின்றித் தவியாய் தவித்துக் கொள்ள ஓர் காரணமும் இருக்கிறது.
ஆம். அன்று வெள்ளிக் கிழமை. வேலைகள் முடித்து சரியான களைப்புடன் வீட்டுக்கு வந்த சிவா, குளித்து விட்டு அந்த சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான். மேசையில் இருந்த பத்திரிகையை எடுத்துப் புரட்டியவன்…
“ஓ… இன்று வெள்ளிக் கிழமை”… என்ற ஞாபகம் வந்ததும் அவன் தவறாது கேட்கும் அந்த வானைலை நிகழ்ச்சியை கேட்கத் துடித்தவனாய் தன் றேடியோவை முடுக்கினான். எந்த ஒரு வெள்ளிக் கிழமையிலும் அந்தக் “கானக் குயில்கள்” நிகழ்ச்சியை செவிமடுக்க அவன் தவறுவதில்லை. ஏனோ அந்த நிகழ்ச்சியை கேட்பதில், அவன் மனதில் ஓர் ஆத்ம திருப்தி. றேடியோவை போட்டு விட்டு சோபாவில் போய் விழுந்தவனாய் பாடும் குயில்களின் பாடல்களை ரசித்த வண்ணம் இருந்தான். அப்போது வானலைகளில்…
“வணக்கம்… வானலைகளில் யாரோ?”… இது அறிவிப்பாளரின் குரல்.
“வணக்கம் நான் சுருதி கதைக்கின்றேன்.”
“பெயரைக் கேட்டதும் படுத்திருந்த சிவா துடித்து எழுந்தான்.
“ஓ!… வணக்கம் சுருதி . நீங்கள் வானலைகளுக்கு புதியவர். அப்படித் தானே?”
“ஆமாம். நான் இன்றுதான் முதன் முதலாய் பங்கு பற்றுகின்றேன்.”
“உங்களைப் பற்றி சிறிது அறிமுகம் தாருங்களேன் சுருதி”… இது அறிவிப்பாளர்.
“நான் பிரான்சில் இருந்து கதைக்கின்றேன். நான் பிரான்ஸுக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. என் தனிமையை போக்கிக் கொள்ள உங்கள் றேடியோவை கேட்டு வருகின்றேன்.” …
“நன்றி சுருதி. நீங்கள் தொடர்ந்தும் எங்கள் வானலை யில் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். சரி. இப்போது நீங்கள் பாட வந்த பாடலைப் பாட ஆரம்பிக்கலாம்.”…என்று அறிவிப்பாளர் கூறவும்…
அந்தத் தேனான குரலால் தன் பாடலைப் பாடத் தொடங்கினாள் சுருதி…
பாடல் —– சுற்றாதே பூமித் தாயே நில்லு…..
படம் —— நிலவே முகம் காட்டு.
கேட்டுக் கொண்டிருந்த சிவா துடித்து எழுந்தான். ஓடிச் சென்று அதை அப்படியே பதிவு செய்து விட்டு தடுமாறி நின்றான். அதை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டான்.
குரலா அது? இல்லை!… இல்லை!… குயிலா அது?… பெண் குரலா அது? தேனைக் குழைத்து குரலாகக் கொடுத்த அந்தக் குரல் அவனுடன் நன்கு பழக்கப்பட்ட குரலாகவும், அவன் உயிரோடு பின்னிப் பிணைந்து ஒன்று கலந்த குரலாக, அந்த ஜீவராகம் அவன் உள்ளத்து உணர்வுகளை தட்டி எழுப்பி நின்றது.
அவன் உள்ளத்தில் இனம் புரியாத பரபரப்பு. ஓர் ஏக்கம் நிறைந்த தாபமும் இணைந்து நின்று அவனை ஆக்கிர மித்துக் கொள்கிறது. அந்தக் கணமே அது தன் சுருதி தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டது அவன் மனம்.
அந்த ஆத்ம ராகம் இணைந்து, கடந்த கால எண்ண அலைகளாக உணர்வுகளை பின்னோக்கி எங்கோ இழுத்துச் செல்வது போல் உணர்ந்தான்.
ஆம். சிவா அப்போது ஓர் பட்டதாரி ஆசிரியராக கடமை யாற்றிக் கொண்டிருந்தான். அப்போதுதான் உயர்தர வகுப்பில் புதிய மாணவியாக வந்து சேர்ந்து கொண்டாள் சுருதி.
அன்று அந்த வகுப்பிற்கு பாடம் எடுக்கச் சென்ற சிவாவின் கண்களில் தென்பட்டாள் சுருதி. அவளைக் கண்டதும் அவன் மனம் சட்டெனத் தடுமாறியது. தான் முன் பின் தெரியாத ஓர் பெண்ணைப் பார்ப்பதாக அவன் உள்ளம் அவனுக்குக் கூறவில்லை.
அவன் உள்ளம் ஏதோ ஓர் இன்ப வெள்ளத்தில் மூழ்கி, இறக்கை கட்டிக் கொண்டு எங்கோ பறந்தது. அவன் கண்களையே அவனால் நம்ப முடிய வில்லை.
“யாரிவள்?… என் உள்ளத்தை சடுதியாய் திருடிச் செல்பவள்?”…
பாடல் — யாரிந்த தேவதை யார் இந்த தேவதை…
படம் —- உன்னை நினைத்து
சிவா!… பெண் என்றால் மனதை அலைபாய விடும் எண்ணங்கள் கொண்ட சபலம் நிறைந்தவன் இல்லை. அவனது இத்தனை வருட காலத்தில் எத்தனையோ பெண்களைச் சந்தித்திருந்தும் , தன்மனதை, தன் உள்ளத்தை யாரிடமும் பறி கொடுத்தவனும் அல்ல. எத்தனையோ சந்தர்ப்பங்கள் வலிய வந்தும் கூட அவனது மனம் “தான் உண்டு. தன் கடமை உண்டு என்று” கடமைக்கு தன்னை பழக்கப் படுத்திவிட்ட ஓர் பண் பட்ட குணத்தினால் அவன் நிரப்பப்பட்டிருந்தான்.
ஆனால் இப்போது அவனது ஆத்ம ராகம் அல்லவா அவனை இழுத்துச் செல்கிறது. ஏதோ ஓர் சக்தி தன்னை இழுத்துச் செல்வதை உணர்ந்து கொள்ள அவனால் முடிந்தது. தன்னுடன் பின்னிப் பிணைந்த ஓர் ஆத்மா வைதான்தான் சந்தித்திருக்கிறேன் என்ற ஓர் உணர்வே அவனுக்குப் பட்டது.
ஏதோ “நீண்ட கால தொடர்புள்ள ஓர் ஆத்மாவை சந்திக்கின்றாய்”… என்று அவனது அந்தராத்மா துடித்துக் கொண்டது. இதய உணர்வுகளை, தன் உள்ளத்தை இணைத்துக் கொண்டிருக்கும் ஓர் ஆத்ம பந்தத்தை சந்தித்திருப்பது போன்ற உணர்வே அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
ஏன் இந்தப் பரபரப்பு?… என்று அவனால் உணர முடிய வில்லை.ஆனாலும் உள்ளுணர்வு இனம் புரியாத சந்தோஷத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
காலங்கள் கடந்தன. சுருதியின் கெட்டித்தனம், அவளது அமைதியான, பண்பான அடக்கம் அவனை மேலும், மேலும் ஈர்த்துக் கொண்டது. அந்த ஈர்ப்பு காலப் போக்கில் காதலாய் மாறியது. சுருதியும் வகுப்பில் சரளமாக பழகத் தொடங்கினாள். தனக்குத் தெரியாத சந்தேகமெல்லாவற்றையும் தயக்கம் இன்றி கேட்டுத் தெரிந்து கொள்வாள் சுருதி. அவள் சரளமாகப் பழகினாலும் தன் காதலை சுருதியிடம் சொல்லத் தயங்கி நின்றான் சிவா.
“ஒரு வேளை என் காதலை ஏற்க சுருதி மறுத்து விட்டால்”…? என்ற தயக்கம் சிவாவிற்கு இருந்தது. காலச் சுழற்சியில் அவர்களின் ஆழமான உணர்வுகள் ஒன்றை ஒன்று கெளவிக் கொள்ள இருவரும் கருத்தொருமித்த காதலர்கள் ஆனார்கள்.
அந்த காதல் ஜோடிகள் அந்தர வானதில் பறந்து கொண்டிருந்த கால கட்டத்தில், சிவா தன் வேலை அலுவலாக கொழும்புக்கு வந்த போது ஊரில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலையால், சுருதி இடம் பெயர்ந்து விட்டாள்.
கொழும்பால் திரும்பிய சிவா சுருதியை தேடிச் சென்ற போது… அங்கே எவருமே இருக்கவில்லை. இதனால் காதலர்கள் இருவரும் திசைக் கொன்றாய் சிதறிப் போனார்கள். சுருதியைத் தேடி அலைந்தான். அவர்கள் எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? என்று எதுவுமே தெரியாமல் துடிதுடித்தான்.
வருடம் ஒன்றை சோகத்துடனனேயே கழித்தான் சிவா. சுருதி பற்றிய தகவல்கள் எதுவுமே அவனுக்குக் கிடைக்கவில்லை.
அந்த வேளையில் நாட்டின் பயங்கரமான சூழ்நிலையில் சிவாவின் பெற்றோர் சிவாவை வெளி நாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டார்கள். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலை என்பதால் சிவாவும் வெளிநாடு வந்து சேர்ந்தான்.
சிவா வந்து ஐந்து வருடங்களைத் தாண்டிய போதும், அவன் மனதினுள் சுருதியின் நினைவுகள் அழியாமல் வாழ்ந்து கொண்டிருந்தன. என்றாவது என் சுருதி வருவாள். அவள் எனக்காகப் பிறந்தவள், என்னை விட்டு எங்குமே செல்ல மாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சிவாவின் மனதில் இருந்தது. தினசரி அவன் தன் மனதில் சுருதியை பூஜித்த வண்ணமே இருந்தான்.
இந்த வேளையில்தான் அவன் எதிர்பாராத அந்தச் சம்பவம் அன்று நடந்தது. அன்று சுருதியின் குரலையும், பாடலையும் கேட்டதும் உடனே அந்த றேடியோ நிலையதிற்கு தொலைபேசியை சுழற்றினான். அங்கு…சுருதி தன் உறவினர் என்று சொல்லி, நீண்ட காலமாய் பிரிந்து விட்டோம். இப்போது தான் கண்டு பிடிக்க முடிந்தது என்று பொய்க்கு மேல் பொய்யை கொட்டினான் சிவா.
ஆனாலும் அன்று அவனால் சுருதியின் தொலைபேசி நம்பரை எடுக்க முடியவில்லை.மறு நாள் இரவும் தொலைபேசி எடுத்து ஒருவாறு முயற்சி செய்து அவளின் நம்மரைப் பெற்றுக் கொண்டான்.
“ஓ!… இப்போது இரவு பத்து மணி ஆகி விட்டது. இனி ஒரு வீட்டிற்கு தொலைபேசி எடுப்பது அழகில்லை”… என்று நினைத்தவனும், விடியட்டும் என நினைத்து, அன்றைய நித்திரையைத் தொலைத்து… நாளைய பொழுதின் விடியலுக்காய் காத்திருந்தான். அவனது எண்ண அலைகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கின்ற எதிர் பாராத சம்பவங்களை எண்ணி அலைமோதிக் கொண்டிருந்தது. தன்னைச் சுற்றிச் சுற்றி அந்த நிகழ்வுகளே அவனது உள்ளத்தை வலம் வந்து, திரைப்படம் போல் அவனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
நேற்று முன்தினம்தான் அந்த எதிர்பாராத ஆச்சரியம் நிறைந்த அந்த நிகழ்வு நடந்தது. காலத்தின் ஓட்டத்தில் கடிகாரம் நகர்வின் வேகத்திற்கு தன்னை சுழற்றிக் கொண்டிருந்த அவனது அவசர அவசரமான கடமைகள் வேலைக்கு நேரம் போய்க் கொண்டிருக்கிறது என்று பம்பரமாக அவனை சுற்ற வைத்துக் கொண்டிருந்தது.
காலையின் பரபரப்பு உவகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பறவையினங்கள் இனிமை இராகம் மீட்டிக் கொண்டிருந்ததன. ஆதவன் அடிவானை விட்டு மெல்ல, மெல்ல பருவப் பெண் நாணம் கொண்டு அடி எடுத்து வைத்து நடப்பது போல் கீழ்வானில் அடி எடுத்து வைத்தான்.
காலை கடிகாரம் ஆறுதரம் அடித்து ஓய்ந்த வேளையில் வேலைக்கு அவசர அவசரமாய் ஆய்த்தமாகிக் கொண்டி ருந்த சிவாவின் மனதில் சுருதியின் எண்ணங்கள் நிறைந்து இன்ப அவஸ்தைக்குள் ஆட்படுத்திக் கொண்டிருந்தது”
இண்டைக்கு எப்படியாவது என்ர சுருதியுடன் நான் கதைத்து விட வேணும். அவள் என் சுருதிதான்… என்று ஊர்ஜிதப்படுத்திவிட வேணும். இனிமேலும் என்னால் இதைத் தாக்குப் பிடிக்கவே ஏலாது.”… என்று எண்ணி ஒரு முடிவுக்கு வந்தவனாய், தொலைபேசி அருகே சென்று அந்த நம்பரை டயல் செய்தான் சிவா.
அந்த ரம்மியமான காலைப் பொழுது. கானக் குயில்கள் குரல்களில் இராகம் மீட்டி பூபாளம் இசைத்தன. படுக்கையில், அன்று முதல்நாள் இரவு முழுவதும் இனம் புரியாத தவிப்புக்குள் சிக்கித் தவித்து சிவராத்திரியாக கடந்து விட்ட சோம்பல் ஒரு புறம், அசதி ஒரு புறம், சுருதியை மீண்டும் படுக்கையில் புரள வைத்துக் கொண்டிருந்தது.அப்போது வீட்டுத் தொலைபேசி மணி கணீர் கணீர் என்று ஒலித்தது.
“அட இந்த வேளையில் யார் தொலைபேசியில்?” … என்று தனக்குள் தானே கேட்டுக் கொண்டவளாக… தொலைபேசியை எடுத்து
“ஹலோ வணக்கம் “… என்றாள்.
ஆம். எதிர் முனையில் இருந்து ஓர் பெண் குரல்…
ஓ!… இது என் சுருதியின் குரல்தான்”… அவன் மனம் அடித்துக் கூறியது. தன்னை சுதாகரித்துக் கொண்டவனாய்…
“வணக்கம்… நான் சிவா கதைக்கிறன்… நீங்க சுருதி தானே கதைக்கிறீங்கள்?” …
ஓர் வித தயக்கத்துடன்… “ஓம் நான் சுருதிதான் கதைக்கிறன்.”… சுருதியின் குரலில் ஓர் படபடப்பு தெரிந்தது.
“சுருதி நான் உன்ர சிவாதான் கதைக்கிறன். என்னைத் தெரியேல்லையா?”…
“சிவா!… சிவா!…” அவளது வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வெளியே வர மறுத்தன. அழுகையும் பீறிட்டுக் கொண்டு முந்திக் கொண்டு வந்தது. அழுகையின் விம்மல் அவனின் காதுகளிலும் விழுந்து விடத் தவறவில்லை.
“ஆமாம்… ஆமாம்… நான் உன்னுடைய சிவாதான் கதைக்கிறன். சுருதி எப்படியம்மா இருக்கிறாய்?”
சிறிது நேர விம்மலின் பின்னர் …
“ம்… நான் சுகமாய் இருக்கிறன் சிவா. நீங்க எப்படி இருக்கிறீங்கள்? எங்கிருந்து கதைக்கிறீங்கள்?”… என்று அடுக்கடுக்காய் கேள்விகளை இனிய குரலால், அன்பு கலந்த உள்ளத்துடன் அடுக்கிக் கொண்டே போனாள் சுருதி.
அவனும் பதில்களை கூறிக் கொண்டே இருந்தான். பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமா? அதுவும் இந்த காதல் ஜோடிகள் சேர்ந்து கொண்டால்… அதை விபரிக்க வார்த்தைகள் தேவை இல்லை.
பாடல் — அழகே பிரம்மனிடம் மனுக் கொடுக்க…
படம்- — தேவதையைக் கண்டேன்…
“சுருதி உன்னுடன் நான் நிறையப் பேச வேணும் எண்டு என் மனசு துடியாய் துடிக்குது. ஆனால் வேலைக்கு இப்பவே ஒரு மணித்தியாலம் பிந்திப் போச்சு. வேலையால் இரவைக்கு வந்து உன்னுடன் ஆறுதலாய் கதைக்கிறன். சரியாம்மா சுருதி?…
“ம்… இரவைக்கு எத்தின மணிக்கு எடுப்பீங்கள்?”… ஏக்கம் நிறைந்த வினாவாய் தொடுத்தாள் சுருதி.
“ஓ!… இரவைக்கு ஒம்பது மணிக்கு சரியா எடுப்பன். வீட்ட நிப்பாய் தானே? …என்றான்.
“ம்… நான் பார்த்துக் கொண்டு இருப்பன். கட்டாயம் எடுங்கோ என்ன சிவா?”…என்றாள் சுருதி.
“ஓமோம்…கட்டாயமா எடுப்பன். சரியா?”…என்று கூறிய சிவா ரெலிபோனை வைக்க விரும்பாமலே வணக்கம் கூறியவனாய், மனமின்றி வைத்து விட்டு அவசர அவசரமாய் வேலைக்கு ஓடிச் சென்றான்.
அன்று முழுவதும் அவனுக்கு வேலை ஓடவே இல்லை. சுருதியுடன் பேசிய சந்தோசத்தில், தன் சுருதி கிடைத்து விட்ட மகிழ்ச்சிப் பெருக்கில் வானத்தில் பறந்தான் சிவா. இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவசர அவசரமாய் போன் எடுத்தான்.
அந்த போனுக்கு காத்திருந்தவளாய் உடனேயே போனை எடுத்தாள் சுருதி. இரவிரவாக, விடிய விடிய அவர்கள் கதை நீண்டு கொண்டே போனது. அப்போது தான் சுருதி கண்ணீர் மலக தன் சோகத்தையும் பகிர்ந்து கொண்டாள்.
ஆம். அவளின் தாய், தந்தை யாவரையும் பறி கொடுத்து, அனாதையாய் தவிதவித்து இப்போதான் உறவினர்கள் உதவியுடன் பிரான்ஸிற்கு வந்த விபரங்கள் யாவையும் கூறியும் முடித்தாள். இத்தனை வருட சோகத்தையும் பகிர்ந்து கொள்ள, அந்தப் பொழுதும் விடிந்தது.
“சிவா!… உங்களப் பார்க்க வேணும் போல இருக்கு. என்னை ஒரு தடவை வந்து பாக்க மாட்டீங்களா?”… என்ற ஏக்கத்துடன் இணைந்து ஒலித்தது அவள் குரல்.
சிவாவிற்கும் அவளை உடனடியாக பார்த்து விட வேண்டும் போல் இருந்தது.
“உன் விலாசத்தை சொல்லு சுருதி.”… என்று அவசரமாய் பேப்பர், பேனையை எடுத்து விலாசத்தை குறித்துக் கொண்டான். விலாசத்தைப் பார்த்தான். மூன்று மணி நேரம் போதும், அவள் கொடுத்த விலாசத்தை அடைவதற்கு.
“சரி சுருதி. நான் இன்றைக்கே நேர வந்து உன்னைச் சந்திக்கிறன்.”… என்று கூறி தொலைபேசியை வைத்த வனும் நேராக வேலை இடத்திற்கு அவசர அவசரமாக சென்று, இன்று எனக்கு லீவு தேவைப்படுகிறது என்று அறிவித்து விட்டு, தனது காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அவனது உள்ளம் அவனை முந்திச் சென்று சுருதியை பார்த்து விடத் துடித்தது.உள்ளத்து வேகம் அவனது காரின் வேகத்தை விட அதிகரித்தது. அவனது எண்ண வேகத்திற்கு ஈடு கொடுத்து அவனது காரும் குறிப்பிட்ட விலாசத்தை அடைந்து கொண்டது. காரை தரிப்பில் நிறுத்தி விட்டு, வீட்டு நம்பரை அறிந்து கொண்டு, அந்த மாடிக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான் சிவா.
வானத்து நிலவு வானத்தை விட்டிறங்கி மாடியில் நிற்பதைப் போல், வானத்துக் கரு மேகம் வானத்தை விட்டு விட்டு மங்கையவள் கூந்தலாக அமைந்தது போல், கானத்து கலைமான், தன் கண்களினை கடன் கொடுத்து விட்டதோ என்று தோன்றும் மருட்சி நிறை மானாக அங்கும், இங்கும் அந்தப் பேரெழில் அசைந்து நின்றது. பார்வைகள் சங்கமத்தில் பரிதவித்த உள்ளங்கள் பல காலக் கதைகளை ஓர் கணத்தில் பேசிக் கொண்டன.
தன் கண்களில் நிறைந்து, உயிரோடு கலந்து விட்ட தன் காதல் தேவதையை அள்ளி அணைத்து நின்றது அந்த அன்பு மனம். அந்த அணைப்பு ஆயிரம் ஜென்மங்கள் இணைத்து வந்த தொடர்பினை அந்த ஆத்மாக்களிற்கு உணர்த்திற்று. இதயங்கள் ஒன்றாக ஆத்ம இராகங்கள் மீட்டி நின்று அந்த இரண்டு ஜீவன்களையும் இணைத்து நின்றன.
அப்போது தன் சோகம் தீரும் வரை சிவாவின் நெஞ்சிற்குள் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள் சுருதி. அவளை தன் நெஞ்சோடு இறுக்க அணைத்து அவள் தலை கோதி அவளைத் தேற்றியவாறு, அவள் விழி வழிந்த கண்ணீரை துடைத்தான் சிவா.
“ஓ! …இதைத்தான் “பூர்வ ஜென்ம பந்தம்” என்பதோ?”…
படம் ——– காதல்
பாடல்——– உனக்கென இருப்பேன்….
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=1922
