நினைவோ ஒரு பறவை-1

 

என் வாழ்க்கையில், நான் கண்கூடாகக் கண்ட ஓர் உண்மைச் சம்பவத்தை
மீண்டும் ஓர் பதிவேட்டின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

அப்போது நான் 10 ஆம் ஆண்டுப் பரீட்சையில் சித்தியெய்தி 11 ஆம் ஆண்டிற்குள் காலடி வைத்த காலம்.
என்னுடைய நண்பி பிரியாவும் அதே பிரிவிற்குள் என்னுடன் நுழைகின்றாள்.

அவளின் குடும்பம் பற்றி முதலில் நான் சிறிது கூற வேண்டும்.
பிரியாவின் குடும்பம் மிகவும் எளிமையானது. தந்தையார் ஓர் சாதாரண கூலி வேலை பார்ப்பவர்.
தாயார் வீட்டோடு, தன் குடும்பத்தைக் கவனித்தபடி. 3 பெண் பிள்ளைகள்.
தந்தையாரின் சாதாரண கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தில் தான்
இவர்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றது.

படிப்பில் கெட்டித்தனம் கொண்ட பிரியா, பருவக் கோளாறு காரணமாக காதலெனும்
கடலில் மூழ்கி விட்டாள். மொட்டாக முளைத்த இவளது காதல் மெல்ல மெல்ல மலராக மலர்ந்தது.
காதலர்கள் இருவரும் தினசரி தம்மை மறந்து காதல் பறவைகளாக சிறகடித்துப் பறந்தனர்.

ஆயிரமாயிரம் கனவுகள், கற்பனைகள் அவளுக்குள் குடி புகுந்தன.
அடிக்கடி தன்னை மறந்து கனவுலகில் சஞ்சரித்தாள் பிரியா.
இப்படியே நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் வழமை போல் பிரியா காலையில் பாடசாலைக்கு வந்தாள்.
வழமையாக அவள் முகத்தில் காணப்படும் சிரிப்பினையோ, சந்தோசத்தினையோ
அன்று அவள் முகத்தில் காணவில்லை. முகம் முழுவதும் சோகத்தில் மூழ்கி இருந்தது.
அவளது பார்வையில் ஓர் ஏக்கமும், கவலையும் தாண்டவமாடியது.

எனது இனிய நண்பி ஆகையால் நான் சும்மா விடவில்லை. என்ன பிரச்சனை என்று
உரிமையுடன் நானும் கேட்டேன். நான் கேட்டதும் அடக்கி வைத்திருந்த அவளது சோகம்
கண்களில் திரண்டு, சட்டென்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பிரியா சிறிது நேரம் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாது தவித்தாள்.
அவளின் கண்ணீர் என் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
காரணம் தெரியாமலேயே என் கண்க ளும் அழுதன. சில மணி நேர அழுகையின்
பின்னர் தன் கண்களைத் துடைத் வாறே தன் அழுகையின் காரணத்தை
மெல்லக் கூறத் தொடங்கினாள் பிரியா …… ………

பிரியா தன் தாய், தந்தை, தன் இரண்டு சகோதரிகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கின்றாள்
என்பதை பல தடவைகள் அவள் கதைகளிலிருந்து நான் அறிந்த விடையம்.
அதிலும் அக்கா தேவியுடன் இவளுக்கு இருக்கும் உறவு அக்கா தங்கை உறவாக மட்டுமல்லாது
ஓர் உற்ற நண்பியைப் போல் பழகுவதை அடிக்கடி பிரியா என்னிடம் கூறியிருக்கிறாள்.

அழுகையினை சிறிது நிறுத்திக் கொண்ட பிரியா……….”சத்தியா…” என்றாள்.

“அழுகையை நிறுத்தி விட்டு உன் அழுகையின் காரணத்தைச் முதலில் சொல்” என்றேன்.

“என் அக்கா தேவி ஒருவரைக் காதலிக்கின்றாள்” என்றாள்.

“இதற்கு ஏன் நீ அழ வேண்டும்? நீ மட்டும் காதலிக்கலாம். உன் அக்கா காதலிக்கக் கூடாதா?
இது எந்த நாட்டுச் சட்டம்? அக்கா காதலிப்பதை அறிந்து அதற்கு சந்தோசப்படாமல் அழுவது ஏன்?”
என்றேன்.

“நான் விரும்பும் என்னவனை அல்லவா என் அக்காவும் காதலிக்கின்றாளாம்.”
என்று கூறியபடி மீண்டும் அழத் தொடங்கினாள்.

பிரியா கூறியதைக் கேட்டதும் நான் வாயடைத்து மெளனமானேன்.
பிரியாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவள் தலையை தடவிக் கொடுத்த படி…..

“அழாதே பிரியா” என்று அவளைத் தேற்றினேன்.

சிறிது நேரத்தின் பின் நான் தொடர்ந்தேன்…..

“அது எப்படி? புரியும் படி கூறு” என்றேன்.

“நான் காதலிக்கும் சுரேனைத் தான் என் அக்கா விரும்புகின்றாளாம்.
அது மட்டுமா? தன் விருப்பத்தை அவருக்கு கூற கடிதம் எழுதி என்னிடம் தந்து
என்னை அல்லவா தூது செல்லும் படி கேட்டு விட்டாள்…..”

என்று கூறிய படியே அந்தக் கடிதத்தை என்னிடம் நீட்டியவாறே விம்மி விம்மி அழுதாள் பிரியா.
அவளை எப்படித் தேற்றுவது என்று எனக்குப் புரியவில்லை.

சுரேன் இவர்களது குடும்ப நண்பன். அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு சென்று வரும் போதுதான்
பிரியாவிற்கும், சுரேனுக்குமிடையில் காதல் மலர்ந்தது.
இவர்கள் காதல் விடையம் எதுவும் இவர்கள் வீட்டிற்குத் தெரியாது. இந்த
வேளையில் தான் சுரேனின் மேல் தேவிக்கும் காதல் பிறந்திருக்கிறது.

சொல்ல முடியாத ஓர் சோகம் பிரியாவின் நெஞ்சை சூழ்ந்து கொள்ள, அவள்
மனது கனத்துப் பாரமாக கண்ணீர் ஆறாகப் பெருகியது.

“ஏன் பிரியா நீ சுரேனைகாதலிக்கும் விடையத்தினை உன் அக்காவிற்கு கூற வேண்டியது தானே…..?” என்றேன்.

“இல்லை சத்தியா. அக்காவின் மனம் மிகவும் மென்மையானது. அவளின்
முதல் காதல் தோல்வியில் போய், அவள் துவண்டு போவதை தாங்கும் சக்தி
என்னிடமில்லை” என்றாள்.

“அப்படியானால் என்ன முடிவை எடுக்கப் போகின்றாய் என்றேன்”……..????

“என் அக்காவின் சந்தோசத்தில் நான் மண்ணைப் போட விரும்பவில்லை.
அக்கா தேவிக்காக என் காதலை தியாகம் செய்யப் போகின்றேன்.”என்றாள்.

“என்ன பைத்தியக்காரியைப் போல் பிதற்றுகிறாய்? உன்னால் சுரேனை அவ்
வளவு சுலபமாக மறந்து விட முடியுமா?” என்றேன்.

“மறந்துதான் ஆக வேண்டும். என் மனதில் கட்டிய காதல் கோட்டையை,
என் ஆசைகளை எல்லாம் அடக்கி வைக்கப் போகின்றேன்” என்று கூறிய
வாறே தன் கண்ணில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் பரியா.

அன்றே தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். தன் காதலை தன் அக்கா
விற்காக தியாகம் செய்தாள். தேவியின் கடிதத்துடன் சுரேனிடம் தூதும்
சென்று வெற்றியும் கண்டாள். பின்னர் தன் தந்தை, தாயிடம் தேவியின்
காதலைப் பற்றி, பிரியா மெல்ல பக்குவமாய் எடுத்துக் கூறினாள். இதை
அறிந்ததும் பெற்றோர்கள் எதிர்த்தனர்.

“அவர்கள் வசதியுள்ள குடும்பம். எப்படி நாம் சம்மந்தியாக முடியும்?” என்றனர்.
ஆனாலும் பிரியா விடவில்லை. பெற்றோர்களோடு வாதாடி ஒருவாறு சம்மதி
க்க வைத்தாள். பின்னர் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீடு சென்றனர். சம்மந்தப்
பேச்சு ஆரம்பமாகியது. குடும்ப நண்பர்கள் ஆகையால் மாப்பிள்ளை வீட்டாரும்
ஒருவாறு சம்மதித்தனர்.

ஆனாலும் பணத் திமிர் அங்கு எழுந்து நின்று தாண்டவமாடியது. சீதனம் முந்திக்
கொண்டு வந்து நின்றது. அவர்கள் கேட்ட தொகையைக் கேட்டதும் பெண்
வீட்டாருக்கு தலையைச் சுற்றியது. மாப்பிள்ளை சுரேனும் அதற்கு மறுப்புத்
தெரிவிக்காமல் கோயில் மாடு போல் தலையை ஆட்டிக் கொண்டது பிரியா
விற்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது.

உலகம் ஏதேதோ எதிர்பார்ப்புக்களுடன் நாளும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கி
றது. ஆனால் அங்கே சீதனம் என்னும் பேய் எழுந்து நின்றது. பிரியாவின்
சிந்தனை விழித்துக் கொண்டது. உழைத்து சீதனம் கொடுத்து, ஓர் குமரைக்
கரை சேர்க்க அங்கு ஆண் பிள்ளை இருக்கவில்லை. தந்தையாரின் நாளாந்த
கூலிப் பணத்தை வைத்து அவர்கள் கேட்ட சீதனத்தை எப்படிக் கொடுத்து விட முடியும்?

பிரியா ஒரு முடிவுக்கு வந்தாள். தன் உயர்தரப் படிப்பை ஒரு வருடம் இடை
நிறுத்தினாள். வீட்டில் இருந்த நகைகளை விற்று அந்தப் பணத்தில் சிங்கப்பூருக்கு
ஓர் பணிப் பெண்ணாகச் சென்றாள். ஒரு வருடம் அங்கு வேலை
செய்தாள். வருமானத்தை அப்படியே சேமித்து வைத்து, அவர்கள் கேட்ட
வரதட்சனைக்கு மேலான பணத்துடனும், தன் அக்கா தேவிக்கு வேண்டிய
சகல நகைகளுடனும் வந்து இறங்கினாள்.

தேவியின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேவியின் கழுத்தில்
தாலி ஏறியது. பெற்றோர்களின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்
கெடுத்து ஓடியது. பிரியாவின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்து
ஓடியது. அவள் வடித்த கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா? அல்லது வேதனைக் கண்ணீரா?
பிரியாவின் நெஞ்சிற்கு மட்டும் தான் வெளிச்சம்.

பதினேழு வயதில் ஓர் தந்தையாக, ஓர் தாயாக, ஓர் அண்ணனாக நின்று ஓர்
பெரிய பொறுப்பை முடிக்க ஓர் பெண்ணால் கூட முடியும் என்பதை என்
சினேகிதி நிரூபித்தாள். அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு தன் உயர்
தர படிப்பை மீண்டும் தொடர்ந்தாள் பிரியா.

இது ஓர் உண்மைச் சம்பவமாகையால் இதை நிலா முற்றத்தின் பதிவேட்டில்
உங்களுடன் பகிர்ந்து கொண்டு விடைபெறும் இவ் வேலையில்…

இந்தப் பாடல் வரிகளை என் நெஞ்சினில் சுமந்து கொண்டு
உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.

உனை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல்
உனக்குள்ளே நான் என்னைத் தொலைப்பது
அது தான் அன்பே காதல் காதல்…….

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=858

*** இவள் - சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக