நிஜங்களின் தரிசனம் - 1

user posted image

நிஜங்களின் தரிசனம்!

——————————————–

அது ஓர் தொழிற்கல்வி பயிலும் கல்விக் கூடம். பல நாட்டவரும் பல இன, மொழியினரும் அந்தக் கூடத்தில் ஒன்று சேர்ந்தோம்.

என்னவோ தெரியவில்லை. அங்கு போய்ச் சேர்ந்த முதல் நாளிலேயே அவளை எனக்குப் பிடித்துக் கொண்டது. ம்… சிலருடன் சில நாட்களாவது பழகிய பின்புதான் அவர்களை எமக்குப் பிடிக்கிறது. ஒரு சிலரை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விடுவதும் உண்டு… இல்லையா?

ம்… அது போலவே அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்கும் எனக்கும் இடையில் இனம் புரியாத ஓர் ஈடுபாடு எனக்கு இருந்தது.

நாட்கள் நகர்ந்து மாதங்கள் ஆகின. ப்ரியாவிற்கும் எனக்கும் இருந்த ஈடுபாடு மெல்ல மெல்ல நட்பாக மலர்ந்தது.

அவளுக்குள் ஏதோ ஓர் சோகம் எப்போதும் நிழலாடுவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. ஆனாலும் நான் எதையும் அவளிடம் வாய் விட்டுக் கேட்கவில்லை. அவளாகச் சொன்னால் சரி. நானாக அவளின் சோகத்திற்குள் மூக்கு நுழைக்க விரும்பவில்லை. அவளாக என்றாவது ஓர் நாள் மனம் திறந்து சொன்னால் கேட்போம் என நானும் விட்டு விட்டேன்.

அதற்கான காலம் ஒன்று அன்று தானாகக் கனிந்தது. ம்… எனக்கும் அவளுக்கும் மிகவும் நீளமான தலை மயிர். அன்று வகுப்பில் இருந்த ஒருவர் குறும்புத்தனமாக எனது பின்னலையும், அவளது பின்னலையும் இணைத்து ஒன்றாக முடிந்து விட்டார்.

நாமிருவரும் அதைக் கவனிக்கவே இல்லை. எப்போதும் வகுப்பு முடிந்ததும், முதலாவது ஆளாக வகுப்பை விட்டு ப்ரியா சிட்டாகப் பறந்து சென்று விடுவாள். ஒரு நிமிடம் கூட அவள் தாமதிப்பதே கிடையாது. அது அவளது பழக்கம்.

அன்றும் வகுப்பு முடிந்ததும் வெளியே போய்விட சடுதியாக எழுந்தவள் முடியப்பட்டிருந்த பின்னலினால் இழுத்து நிறுத்தப்பட்டாள். அதன் பின்னர் தான் யாரோ செய்திருந்த அந்தக் குறும்பை நாம் இருவதும் கண்டோம்.

நான் கட்டப்பட்டிருந்த பின்னலை நிதானமாக அவிழ்த்தேன். ஆனால் அப்போது அவளின் கை நடுங்கியது, கண்ணீர் பெருக் கெடுத்தது.

“சீக்கிரம் அவுளு சத்தியா” எனப் பட படத்தாள். எனக்கு அவளின் அவசரம் புரிந்தது. உடனடியாக எனது பாக்கில் இருந்த சிறிய கத்தரிக் கோலை எடுத்து எனது பின்னல் பக்கமாக கத்தரித்து அவளை விடுதலை செய்தேன்.

“நன்றி சத்தியா” என கூறியபடி விரைந்து சென்றாள் ப்ரியா.

மறுநாள் காலை வகுப்பிற்குள் நுழைந்தவளும்…

“மன்னித்துக் கொள் சத்தியா”… என்றாள்.

“எதற்கு இந்த மன்னிப்பு?”… என்றேன்.

“இல்லை… உன் முடியை வெட்டி நேற்று என்னை விடுவித்து விட்டாயே அதற்காக நன்றி”… என்றாள்.

“ஆ!… அதுவா? ப்ரியாவிற்காக முடி வெட்ட வேண்டும் என்ற நேத்திக்கடன் இருந்தது அதைத்தான் நேற்று நிறைவேற்றினேன்”… என்றேன்.

கலகலவெனச் சிரித்த அவள் முகத்தில் மறு கணம் ஓர் சோகம் மூடிக் கொண்டது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக் கெடுத்தது. சிறிது நேர மௌனத்தின் பின் அவள் தன் சோகத்தை கொட்டத் தொடங்கினாள்.

ப்ரியாவின் குடும்பம் ஓர் வசதியான குடும்பம். இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவள். ப்ரியாவின் தந்தையார் ஓர் பிரபல்யமானவர். குடும்பத்தில் இவள் கடைக் குட்டி. படித்து பல்கலைக்கழகம் நுழைந்து பின் ஓர் ஆங்கிலப் பட்டதாரியாக கடமையாற்றியவள்.

பெண்கள் வயதுக்கு வந்ததும் தாயும், தந்தையும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்வது வழமையானதே. அதே போல் இவளின் பெற்றோரும் இவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள்.

சிறிய வயதில் திருமணத்தை அவள் விரும்பாத போதும்… பெற்றோரின் மனதைப் புண்படுத்தாமல்… அவர்கள் விருப்பப்படி திருமணத்திற்கு சம்மதித்தாள்.

கை நிறைய சீதனம் கொடுத்து வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பார்த்து முடிச்சுப் போட்டு முடிந்தாகி விட்டது. இவ்வளவிற்கும் போட்டோவைப் பார்த்துத்தான் சம்மந்தம் முடிந்தது.

பின்னர் திருமணத்திற்கு நாள் குறித்து மாப்பிள்ளை இந்தியாவிற்கு வந்து..; ப்ரியாவின் வீட்டிற்குச் சென்று ப்ரியாவைப் பார்த்ததும் மாப்பிள்ளை தனக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லை என கூறிவிட்டார்.

காரணம் பெண் நல்ல வெள்ளை இல்லையாம். ம்… அவள் வெள்ளை நிறம் இல்லைத்தான். பொது நிறமாக அவள் இருந்தாலும் நல்ல முக வெட்டு. சொல்லப் போனால் நடிகை சரிதாவின் இளமைத் தோற்றம் அப்படியே அவளுக்குள் குடி கொண்டிருந்தது.

ஆனாலும் என்ன செய்வது அந்த மாப்பிள்ளைக்கு அவளைப் பிடிக்கவில்லை யாம். (ஆனால் சும்மா சொல்லக் கூடாது பொட்டு இல்லை என்றால் உரஞ்சி பொட்டு வைக்கும் கலரில்தான் மாப்பிள்ளை இருக்கிறார்.)

திருமணத்திற்கு நாள் குறித்து ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்தும் ஆகிற்று. அதன்பின் பெண் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

ப்ரியாவின் தந்தையும் தாயும் தமது கௌரவம் போகப் போகிறதே என்ற பயத்தில் அழுது குழறி… மாப்பிள்ளையின் காலில் விழுந்து இன்னமும் பணம் கூடக் கொடுத்து ஒருவாறு திருமணம் முடிந்தும் ஆயிற்று.

திருமணம் முடிந்து சில காலத்தில் ப்ரியாவும் வெளி நாடு வந்து சேர்ந்தாள். இங்கு வந்தவுடன் மாமியாரின் பிரச்சனைகள் அவளுக்காகக் காத்துக் கிடந்தன.

தினமும் மாமியாரால் ஒரே பிரச்சனை. அவளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெளிநாடு வந்ததும் ப்ரியாவின் தாய் தந்தை சகோதரங்க ளின் தொடர்புகள் யாவும் அறுக்கப்பட்டன.

வெளி நாட்டில் ப்ரியாவின் சகோதரங்கள் இருந்தும் எவருடனும் கதைக்கவும் விடுவதில்லை. அது மட்டுமல்ல தன் கணவருடன் ப்ரியா சிரித்துக் கதைப்ப தையோ, அல்லது அவள் கணவனுக்கு உணவு பரிமாறுவதையோ, அல்லது கணவனுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையோ அந்த மாமியார் அனுமதிப்பது இல்லை.

அப்படி எதுவும் நடந்தால் அன்று முழுவதும் வீட்டில் ஒரே பிரச்சனைதான். இரண்டு மூன்று நாட்களுக்கு மாமியார் திட்டித் தீர்த்துக் கொண்டு சாப்பிடாமல் பட்டினி கிடப்பாராம்.

தாயாருக்குப் பயந்து ப்ரியாவை வெளியே எங்குமே கணவன் அழைத்துச் செல்வதும் இல்லை. வீட்டு வேலைகள் யாவற்றையும் செய்து கொண்டு…
ஓர் சிறைக் கைதியைப் போல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் பிரியா.

பெற்றோரின் அன்பும் இன்றி, சகோதரங்களின் பாசமும் இன்றி, கணவனின் பரிவும் இன்றி ஓர் ஜடமாக… உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் பயந்து ஒடுங்கியபடி அவளின் வாழ்க்கைச் சக்கரம் உருள்கிறது.

வெளிநாடு வந்து நான்கு, ஐந்து வருடங்கள் ஆகியும் ரெயினில் ரிக்கற் எடுத்து எங்கும் போகக் கூடத் தெரியாது என்றால் அவளின் நிலமையை என்னவென்று சொல்வது?

தன் இதயத்தில் இருந்த சோகங்களை எல்லாம் கண்ணீரோடு கொட்டித் தீர்த்தாள் ப்ரியா. இதுவரை யாருக்கும் தெரியாத தன் இதய வலிகளை முதல் முதலில் மெல்ல இறக்கி வைத்ததனால் தன் மனதின் சுமை கொஞ்சம் குறைந்துள்ளதாக கூறி மெல்லப் புன்னகை செய்தாள்.

ம்… இதைப் போல் எத்தனை எத்தனை சோகங்கள் இந்தப் புலம் பெயர் வாழ்வில் குடி கொண்டுள்ளதோ யாருக்குத் தெரியும்?

ம்… சரி… மீண்டும் மற்றுமொரு நிஜங்களின் தரிசனத்தில் சந்திப்போமா?

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=506

*** இவள் - சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக