தும்பி சொல்லும் கதை!
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…………………………..;
இந்தப் பாடல் என் அப்பாவிற்கு மிகவும் பிடித்தமான பாடலாகும். அம்மா இறந்த பின், இந்தப் பாடல் எம் வீட்டில் ஒலிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். சின்ன வயதில் அடிக்கடி கேட்ட இந்தப் பாடலை, இன்றும் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத ஓர் சோகம் என்னை வாட்டும். சரி அதை விட்டு வந்த விடையத் திற்கு வருகின்றேனே. சாதாரணமாக எம் வீட்டில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஓர் நாள் பல தடவை ஒலித்தது. அந்தச் சம்பவத்தை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்………………..
இலங்கையைப் பொறுத்தமட்டில் சின்ன வயதில் தும்பி பிடித்து விளையாடுவது
இயற்கை தானே? இதை நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன். உங்களுக்கும் தும்பி பிடித்து விளையாடிய ஞாபகங்கள் இப்போது நெஞ்சத் திரையில் நிழலாடும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. தும்பி பிடிப்பது மட்டுமல்லாமல், பிடித்த தும்பியின் வாலில் நூலால் கட்டி விட்டு, பின் அந்தத் தும்பியைப் பறக்க விட்டு துரத்திப் பிடிப்பதில் ஓர் சந்தோசம் தான். அன்று நானும் என் சகோதரர்களும் சேர்ந்து தும்பி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது …………………….
எங்கள் அம்மா நன்றாகத் தைப்பார். அதனால் எங்கள் வீட்டில் தையல் மெசின் இருந்தது. அம்மா இறந்ததும் அம்மாவின் உடமைகள் யாவற்றையும் ஓர் அறையில் வைத்து பத்திரமாக பூட்டி வைத்திருந்தார் எங்கள் அப்பா.
நாம் எல்லோரும் தும்பி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் குட்டித் தம்பியும் ஓர் தும்பியைப் பிடித்து விட்டான். அதன் வாலில் கட்டுவதற்கு நூல் தேவைப்பட்டதால் அவன் ஓடிச் சென்று மெசினில் கோர்க்கப்பட்டிருந்த நூலை இழுத்து எடுத்தான். தம்பி பலமாக இழுத்ததால் மெசினின் ஊசி உடைந்து விட்டது. நாமும் பத்திரமாக அப்படியே வடிவாக மூடி வைத்து விட்டோம். எமது கஸ்ர காலமோ என்னவோ தெரியவில்லை. அன்று மாலை அப்பா ஏதோ தைப்பதற்காக மெசினிற்குப் போனார். அங்கே ஊசி உடைந்திருந்ததால் ஊசியை யார் உடைத்தது? எனக் கேட்டார். நாங்கள் எல்லோரும் எமக்குத் தெரியாது என்று கூறி விட்டோம். நாம் எல்லோரும் சேர்ந்து பொய் கூறியதால் அப்பாவிற்கு கோபம் வந்து விட்டது. ஒவ்வொருவராக கூப்பிட்டு விசாரித்தார். அப்போதும் எவரும் தம்பியைக் காட்டிக் கொடுக்கவில்லை. சாதாரணமாக நாம் ஏதும் தப்புச் செய்யும் போதெல்லாம் அப்பா நல்ல பேச்சுத் தருவார். அப்பா பேசத் தொடங்கும் போதே நாம் ஏதோ அடி விழுந்தது போல் விம்மி விம்மி அழத் தொடங்கி விடுவோம். அவ்வளவு தான் ஓரளவோடு அப்பா பேச்சை நிறுத்தி விடுவார். பிஞ்சு வயதிலேயே அம்மாவை இழந்ததினால் அன்புக்காக ஏங்கிய எம் உள்ளங்கள் வேறு எவரின் பாசங்களும் கிடைக்காததால் சகோதரங்களுக்குள் அன்பையும், பாசத்தையும் நிறையவே வளர்த்திருந்தோம். ஒருவருக்கொருவர் சண்டை பிடிக்க மாட்டோம். அப்படி சண்டை தொடங்கினாலும் மற்றவர் அதை உடனடியாக தடுத்து சமாதானப் படுத்தி விடுவோம். இப்படி அன்பும், பாசமும், ஒற்றுமையும் பலத்த மதிலாக எமக்குள்ளே கட்டியிருந்தோம். என்ன குழப்படி செய்தாலும் எல்லோரும் சேர்ந்து செய்து பின் நன்றாக பேச்சு வாங்கிக் கட்டுவோம். அன்றும் அப்படி நடக்கும் என்று தான் எம் எண்ணம். ஆனால் அன்று அப்பாவிற்கு என்ன கோபம் வந்ததோ தெரியவில்லை. எம்மை அப்படியே விட்டு விடவில்லை. இன்று இந்த ஊசியை உடைத்தது யார் என்ற உண்மை தெரியாமல் விடமாட்டேன் என்று விட்டார். எல்லோரையும் முட்டுக் காலில் இருக்க விட்டு விட்டார். எல்லோரும் திரு திரு என முழித்தபடி நிற்கின்றோம். குளித்து விட்டு வருவதற்குள் உண்மை வெளி வரவேண்டும் என்று கூறி விட்டு அப்பா குளிக்கப் போய் விட்டார்.
நான் குட்டித் தம்பியைப் பார்க்கிறேன். பாவம் தம்பி. பயத்தினால் அழுதபடி நின்றான். பால் வடியும் அந்த முகத்தைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நாமெல்லோரும் சேர்ந்து ஓர் முடிவிற்கு வந்தோம். தம்பியைக் காட்டிக் கொடுக்காது தெரியாது என்று கூறிவிடுவோம் என்று. அப்பா குளித்து விட்டு வந்து மீண்டும் எல்லோரையும் கேட்டார். நாம் யாருமே உண்மை சொல்லாததால் அப்பாவிற்கு கோபம் பிய்த்துக் கொண்டு வந்து விட்டது. அவ்வளவு தான் எல்லோருக்கும் அடிதான். கையாலும் அடித்து உண்மை வெளிவராததால் பின் தடியாலும் அடித்து அப்பா களைத்துப் போய் விட்டார். நாம் எவரும் தம்பிதான் உடைத்தான் என்று காட்டிக் கொடுக்கவே இல்லை. எல்லோரும் பலமாக அழுத படி நின்றோம். சிறிது நேரம் கழித்து அப்பாவின் கோபம் தணிந்தது பிறகு என்ன? பெத்த மனம் அல்லவா? அதுவும் தாயில்லாப் பிள்ளை களுக்கு இப்படி அடித்து விட்டேனே என கலங்கியபடி எல்லோரையும் அணைத்து காயத்திற்கு எண்ணை பூசி விட்டு, எல்லோருக்கும் உணவையும் ஊட்டி விட்டார். ஆனால் பாவம் அப்பா. அன்று சாப்பிடவும் இல்லை. இரவு படுக்கவும் இல்லை. எம்மையெல்லாம் படுக்க வைத்து விட்டு தனிமையில் இருந்து இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் ஒலிக்க விட்டபடி, கலங்கிய கண்களோடு விழித்து இருந்தார். அன்று இரவு முழுவதும் நானும் புரண்டு புரண்டு படுக்கிறேன். எனக்கும் நித்திரையே வரவில்லை. அடி வாங்கி அழுத விம்மல் ஒரு பக்கம். தம்பிக்கு அடி விழாது தடுக்கப் போய் அப்பாவை நோகடித்தோமே என்ற கவலை மறு புறம்.
அதன் பின் தும்பியைக் காணும் போதெல்லாம் அடி வாங்கிய ஞாபகம் தான் எனக்கு வரும். ஆனாலும் என்ன? இன்று வரை அந்த ஊசியை தம்பி தான் உடைத்தான் என்பது அப்பாவிற்குத் தெரியாது. இதைக் கெட்டித் தனம் என்று இங்கு நான் கூற வரவில்லை. ஆனால் அந்த வயதில் நாம் செய்தது பிழை என அப்போது தெரியவில்லை. ஆனால் இன்று யோசிக்கும் போது மிகவும் மனம் வருந்துகின்றேன்.
இப்போது அன்று அடி வாங்க வைத்த இந்த தும்பியையும் நினைத்துக் கொண்டு, அன்று விடிய விடிய ஒலித்த இந்தப் பாடல் வரிகளை என் நெஞ்சில் சுமந்து கொண்டு இப்போது உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி……………………….….;
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=770
*** இவள் - சத்தியா ***
