குறளில் பிறந்த கதை - 2

 

தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
(குறள் - 56)

(தன்னைப் பேணியும் தன்னைக் கொண்டவனைப் பேணியும், தங்கள் குடியின்
நற் பெயரைப் பேணியும், இவற்றினால் ஒரு போதும் சோர்வு காணாதவளே
நல்ல மனைவி என்கிறார் வள்ளுவர்.)


ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையில் நடுவழியில் வந்து இணைந்து கொள்
பவள் மனைவி. அவனுடைய வாழ்க்கைப் பாதையை உயர்ந்த கோபுரத்திற்கு
கொண்டு செல்வதும்… அதல பாதாளத்திற்கு இழுத்துச் செல்வதும்… மனைவியின் கையில்தான் தங்கியுள்ளது.

எந்தக் கெட்டவனையும் நல்ல அறிவுள்ள மனைவியானவள், திருத்தி
அவனை நல்லவனாக்கி… ஊர் புகழ வைத்து அவனை ஓர் இலட்சியவாதி ஆக்கி விடுவாள்.

எந்த நல்லவனையும், அறிவில்லாத மனைவியானவள்… நாலு பேர் பார்த்துப் பரிகசிக்கும்படி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுவாள்.

இதைத்தான் முன்னோர்கள் “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

அறிவுள்ள மனைவியானவள் எந்த ஒரு கோழையையும் வீரனாக்கி விடுவாள்.
அறிவுள்ள மனைவியைப் பெற்ற ஆடவர் எல்லோரும் உண்மையில் பாக்கிய
சாலிகளே! அன்பினால் அரவணைத்து… பண்புடன் இனிமை பேசி… நான்கு
சுவர் மத்தியிலே, நல்லவையை எடுத்துக் கூறி… இல்லறத்தில் புதுமை செய்யும் பெண்கள் இன்னும் உலகில் உண்டு.

தன் கணவன் தேவையறிந்து… அவன் துன்பத்தில், துயரத்தில் பகிர்ந்து துடித்து
நின்று… இன்பத்தை இனிமையுடன் தானும் பகிர்ந்து கொண்டு… தன் கணவனுடைய முன்னேற்றமே, தன் முன்னேற்றமாக எண்ணி… உணர்வுகளில் பிணைந்து நின்று… இனிமை தரும் மனைவி என்றும் புனிதமான குணவதியே. அவள் கூறும் அறிவுரைகள் ஆணித்தரமாக அவன் மனதில் பதிந்து கொள்ளும். அந்த அறிவுரைகளின் படி செயல்பட எந்த ஒரு ஆண்மகனும் பின்னிற்க மாட்டான்.

பெண் புத்தி பின் புத்தி” என்ற காலம் மலையேறி “பெண் புத்தி முன் புத்தி” என்று மதிக்கும் காலம் வந்து விட்டது. அறிவுள்ள மனைவியானவள் அரசனுக்கு மந்திரி போல அவன் கூடவே இருந்து அறிவுரை கூறும் மந்திரி என்பதே உண்மையானதாகும்.

நம் கண்முன்னே காணும் எத்தனையோ உதாரணங்கள் சாட்சி கூறுகின்றன.
அன்றும் சரி… இன்றும் சரி… என்றும் சரி… நல்ல அறிவுள்ள மனைவி கூறும்
வார்த்தைகளிற்கு மதிப்பளித்தவர் இன்றும் உலகுக்கு உதாரண புருஷர்களாக
இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள், இனிமேலும் இருப்பார்கள்.

அறிவுள்ள மனைவியினால் உயர்ந்த ஒரு நாவலாசிரியர் “நதேனியல் ஹார்தோன்”. இவர் அமெரிக்காவில் பிறந்தவர். சிறந்த சிறுகதைகள் எழுதுவார். இளம் வயதிலேயே எழுத்துத்துறையில் மிகுந்த ஆர்வம்
கொண்டு விளங்கினார். நிறைய எழுதுவார். ஆனால் அதை வாங்குவோர் இருக்காது.

எல்லா எழுத்தாளர்களையும் பீடித்த வறுமை இவரையும் பீடித்துக்
கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டார். வறுமை நோயிலிருந்து மீள்வதற்காக ஒரு துறைமுகத்தில் சாதாரண பணியாளனாக வேலைக்குச் சேர்ந்தார். பணியாளனாக வேலையில் அமர்ந்தாலும்… தான் ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் மனதினில் அவரை ஆட்கொண்டு நின்றது.

தனது முப்பத்தெட்டாவது வயதில் “சோபியா” என்ற பெண்ணை மணம் முடித்தார். சோபியா ஒரு நல்ல மனைவியாக அவருக்கு வாய்த்திருந்தாள். நல்ல அறிவுடையவள் தன் மனைவியென்பதில் நதேனியல் ஹார்தோனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவளது குணாதிசயங்கள் அவருக்கு நன்கு பிடித்துப் போய் விட்டது. தனது விருப்பு வெறுப்புகளை அறிந்து தன் மனைவி பக்குவமாக நடக்கின்றாள் என்று தன் நண்பர்களிடம் பெருமைப்பட்டுக் கொள்வார். நண்பர்களுக்குக் கூட மனதினில் பொறாமை. இப்படி ஊரே பொறாமைப்படும்படி இருவரும் உணர்வுகளில் ஒன்றாகி, ஐக்கியப்பட்டு குடும்பம் நடத்தினார்கள்.

திடீரென்று அவர்கள் எதிர்பாராத விதமாக, நதேனியல் ஹார்தோனுடைய வேலை பறிபோய் விட்டது. தன் குடும்பம் பிச்சையெடுக்கும் நிலைக்கு வரப்போகிறதே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார். தன் மனைவி
தன்னிடம் வந்து கஷ்டப்படப் போகிறாளே என்று அவர் மனம் வேதனைப்பட்டது.

தன் வேலை பறிபோய் விட்டதை, தன் மனைவி சோபியாவிடம் தெரிவித்து வருத்தப் பட்டார். அந்த நேரத்தில் சோபியா… அவரை அன்பினால் அரவனைத்து ஆறுதல் கூறினாள்.

உங்களுடைய வேலை போனது கூட ஒரு வழியில் உங்களிற்கு நல்லதுதான்
என்று எண்ணிச் சந்தோஷப்படுங்கள். இன்னொருவருக்குக் கீழே நீங்கள் பணி
யாற்றுவதை என் மனம் விரும்பவில்லை. நீங்கள் வேலைக்குப் போகும் நேரம் எல்லாம் நான் மனத்தளவில் செத்துக் கொண்டுதானிருக்கிறேன். உங்களிற்கு
நல்ல திறமை இருக்கிறது. நீங்கள் எழுத்துத் துறையில் நன்கு பிரகாசிப்பீர்கள்.
ஏன் கவலைப் படுகிறீர்கள்? மற்றவர்களிடம் கை கட்டி நின்று சேவகம்
செய்வதை விட, நீங்கள் பேனா எடுத்து எழுதத் தொடங்குங்கள் என்று
அன்பான வார்த்தைகளில் ஆறுதல் கூறினாள்.

எழுத்து சாப்பாடு போடுமா சோபியா? சாப்பாட்டுக்குப் பணம் வேண்டாமா?
நான் எங்கேயாவது கூலி வேலைக்குப் போய் வருகிறேன் சோபியா.
உன்னைப் பட்டினி போட எனக்கு எப்படி மனம் வரும்?… என்று தன் மனைவி சோபியாவின் மடியில் முகம் புதைத்து சிறு குழந்தை போல் கேவிக் கேவி அழுதார் ஹார்தோன்.

சோபியா எழுந்து சென்று அறையில் இருந்து கை நிறையப் பணத்துடன் திரும்பி வந்தாள். ஹார்தோன் ஆச்சரியப் பட்டார். திகைப்போடு அவளைப் பார்த்தார். இந்தப் பணம் கடந்த எட்டு வருடங்களாக தங்கள் சம்பளத்தில் இருந்து மிச்சம் பிடித்து சேர்த்து வைத்திருந்தவை. இந்தப் பணம் குறைந்தது ஒரு வருடத்திற்கு உட்கார்ந்து நாம் சாப்பிடப் போதுமானவை. எனவே இன்றிலிருந்து உட்கார்ந்து எழுதத் தொடங்குங்கள். தங்கள் எழுத்தாற்றலில் எனக்கு நிறைந்த நம்பிக்கை இருக்கிறது. கவலைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு எழுதத் தொடங்குங்கள்… என்று அவருக்கு உற்சாகமூட்டினாள் சோபியா.

தன் மனைவியின் அறிவையும், தன்னம்பிக்கையையும் எண்ணி ஹார்தோன்
மிக்க பெருமிதப்பட்டார். தன் வாழ்வில் இப்படியொரு மனைவி வாய்த்ததை
இட்டு மிகுந்த சந்தோஷப்பட்டார். அன்றே ஆரம்பித்தார்… 1850 ஆம் ஆண்டு
“ஸ்கார்லெட் லெட்டர்” என்ற நாவலை எழுதி வெளியிட்டார். அந்த நாவல்
அமெரிக்காவையே பிரமிக்க வைத்து… ஹார்தோனுக்கு பெரும் பணத்தையும்
புகழையும் பெற்றுக் கொடுத்து. இந்தப் புகழ் மூலம் அமெரிக்க ஜனாதியினால்
புகழப்பட்டு “கன்சல்” பதவியில் அமர்த்தப் பட்டார் ஹார்தோன்.

ஹார்தோனின் புகழிற்கு காரணம் அவர் மனைவி சோபியா என்று சொன்னால்
ஹார்தோன் மறுப்பாரா? தான் பெற்ற பணமும், புகழும் சோபியாவினால்தான்
என்று பெருமிதப்பட்டு பத்திரிகையாளர்க்கு பேட்டி கொடுத்தார் ஹார்தோன்.
தன் கணவனின் பெருந்தன்மையை எண்ணி எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்
டாள் சோபியா. சோபியா மட்டும் அன்று நம்பிக்கையூட்டா விட்டால் இன்று நாம் ஹார்தோனைப் பற்றிப் பேசியிருப்போமா?

அறிவுள்ள மனைவியின் அன்பு வார்த்தைகளால்… ஆக்க பூர்வமான ஆலோ
சனைகளால், “நாதேனியல் ஹார்தோன்” உலகம் போற்றும் உயர்ந்த நிலையை
அடைந்தார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்” என்று ஹார்தோனுக்கு நாம் கூறினால்… தன் மனைவியை கட்டி அணைத்து
முத்தம் கொடுத்திருக்க மாட்டாரா?

ஹார்தோன் போன்ற எத்தனை கணவர்மார் இன்றும் நம் முன்னே
வாழ்கிறார்கள்? சோபியா போலே எத்தனை மனைவிமார் இன்றும் வாழ்கிறார்கள்?

ஆக்கம் -”சத்தியா”

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=23&t=1608&st=0#entry17043

 

*** இவள் - சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக