காணவில்லை!
“காணவில்லை” ஒலிபெருக்கியில் அறிவிப்பு!
……………………………………………………………..
அப்போது எனக்கு 7 வயதிருக்கும். ஒரு நாள் எனது அம்மம்மா அன்ரிமாருடன்
ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒரு கலை விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன்.
அம்மம்மா, அன்ரி, அன்ரியின் மகள் எல்லோருமாகச் சேர்ந்து சென்றோம்.
எங்கள் வீட்டில் இருந்து அந்தத் தேவாலயம் தூரத்தில் இருந்தமையால் எம்மை எல்லாம் காரில் ஏற்றிச் சென்று இறக்கி விட்டு அப்பா திரும்பிச் சென்று விட்டார். ![]()
நாம் அங்கு செல்லும்போது மாலை 5 மணியிருக்கும். பெருந்திரளான மக்கள் கூட்டமாகையால்… ஒரே சன நெருக்கம். அங்கே கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருந்தமையால் எல்லோரும் முந்தியடித்துக் கொண்டு தமக்கான இடத்தைப் பிடித்து விட்டிருந்தார்கள். என்ன செய்வது? எமக்கு முன்னால் இடம் கிடைக்கவில்லை. பின்னால்தான் இடம் கிடைத்தது. ![]()
எங்கும் ஒரே கலகலப்பு. எங்கும் மிகப் பிரகாசமான மின் விளக்குகளின் ஒளிகள். அதைவிட பல மணிக்கடைகள் வரிசையாக காணப்பட்டன. தேவாலயத்தின் வாசலில்… கச்சான், கடலை போன்ற வியாபாரிகளின் திடீர் கடைகள். இப்படி எல்லாமே மனதிற்கு இனம் புரியாத ஒரு மகிழ்வினைத் தந்தன. ![]()
கிட்டத்தட்ட 6 மணி இருக்கும். கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பாட்டுக்கள்,
நாடகங்கள், நடனங்கள், மேடைப் பேச்சுக்கள் என பலவகையான நிகழ்ச்சிகள்
தொடர்ந்த வண்ணம் இருந்தன. ![]()
என்னவோ தெரியவில்லை. சின்ன வயதில் இருந்தே பாட்டுக்களில் லயித்துப் போவதும்… நடனங்கள் நாடகங்களை ரசிப்பதிலும் அதிக ஈடுபாடு எப்போதும் எனக்குள் இருந்தது.
ம்… கிட்டத்தட்ட 9 மணியிருக்கும் தூரத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கக் கூடும், தம் வீடுகளிற்கு செல்வதற்காக மெல்ல மெல்ல கலையத் தொடங்கினார்கள். பின்னே இருந்த எமக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு இது தடையாக இருந்தது. அதிலும் நான் சிறியவளாக இருந்தமையால் எனக்கு அதிகமாக மறைக்கத் தொடங்கியது. ஆனாலும் நான் விடுவதாக இல்லை. அங்கும் இங்குமாக சரிந்து சரிந்து நிகழ்ச்சிகளை விடாது ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது…
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ…
என்ற பாடலை ஓர் அக்கா மிகவும் அருமையாகப் பாடத் தொடங்கினார். பாடலில் லயித்த நான் என்னை அறியாமலேயே எழுந்து மெல்ல முன்னே சென்று விட்டேன். அந்தப் பாடலைத் தொடர்ந்து…
கூந்தலிலே நெய் தடவி…
என்ற பாடலுக்கு இரண்டு அக்காமார் அபிநயம் பிடித்து ஆடத் தொடங்கினார் கள். அதை ரசிப்பதற்காக என் கால்கள் என்னை மறந்து இன்னமும் முன்னே நடந்து சென்று விட்டன. யாரின் மறைப்பும் இன்றி அந்த நடனத்தை நன்றாக ரசித்தேன். அந்த நடனம் முடியத்தான் நான் எங்கோ நிற்பது என் நினைவிற்கு வந்தது. ![]()
உடனடியாக அம்மம்மா, அன்ரிமார் இருந்த இடத்திற்கு ஓடிச் சென்றேன். அங்கே அவர்கள் இருந்த இடத்தில் அவர்கள் எவரையும் காணவில்லை. ![]()
அந்த சனத்திற்குள் ஓடி ஓடித் தேடுகின்றேன். அவர்களைக் காணவே இல்லை. எனக்கு மெல்ல அழுகையும் வந்து விட்டது. பெலத்து அழாமல் மெல்ல அனுக்கத்துடன் அழுதபடி மணிக்கடைகளின் பக்கமாக தேடுகின்றேன். அங்கும் அவர்கள் எவரையுமே காணவில்லை. என்னை மறந்து விட்டுப் போய் விட்டார்களோ?… என்ற பயம் எனக்குள் வந்தது. ![]()
உடனடியாக தேவாலயத்தை விட்டு வெளியே வீதிக்கு அழுதபடி ஓடுகின்றேன். வீதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக போய்க் கொண்டிருக்கிறார்கள். நானும் அழுதழுது ஒவ்வோர் கூட்டத்திற்குள்ளும் அவர்களைத் தேடுகின்றேன். ![]()
இப்படியே கால் போன போக்கில் அதிக தூரம் ஓடிச் சென்று விட்டேன். நான் எங்கு நிற்கின்றேன் என்றும் எனக்குத் தெரியவில்லை.அப்படியே வீதியில் நின்ற படி ஓவென்று அழத் தொடங்கி விட்டேன். ![]()
அப்போது அந்த வழியில் வயது முதிர்ந்த ஒரு அப்பு சயிக்கிலில் வந்து கொண்டிருந்தார். நான் அழுவதைக் கண்டதும் சயிக்கிலில் இருந்து இறங்கி என் அருகில் வந்தார். நானோ பயத்தில் ஒரே ஓட்டமாக ஒடத் தொடங்கினேன். ![]()
அந்த அப்புவும் சயிக்கிலை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து ஒருவாறு என்னைத் துரத்திப் பிடித்து விட்டார். பின் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு என் கண்ணீரைத் துடைத்து விட்டபடி… என்னைப் பற்றி விசாரித்தார். நான் சகலதையும் விபரமாகச் சொன்னதும் தான் என்னை எனது அம்மம்மாவிடம் கொண்டு போய் விடுவதாகக் கூறி என்னை தனது சயிக்கிலில் ஏற்றிக் கொண்டு அந்தத் தேவாலயத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அருகே நாம் வந்து கொண்டிருக்கிறோம். அப்போது ஒலிபெருக்கியில்…
நீலச் சட்டை போட்டு… இரட்டைப் பின்னல் கட்டியபடி… சத்தியாவைக் காணவில்லை.
என அடையாளம் கூறப்பட்டு ஒலிப்பது என் காதுகளில் விழுகின்றது. ![]()
என்னை கூட்டி வந்த அப்பு, என்னைக் காரியாலயத்தில் ஒப்படைத்தார். பின்னர் அம்மம்மா வந்து என்னை கூட்டி வந்த அப்புவிற்கு நன்றி கூறி விட்டு என்னைக் கூட்டிச் சென்றார். ![]()
இன்றும் அந்த சம்பவமும்… என்னை கூட்டி வந்த அப்புவின் முகமும் என்
மனதில் நிழலாய் பதிந்துள்ளது. என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத
சம்பவங்களில் இதுவும் ஒன்று. அதுவும் சின்ன வயதில் நடந்திருந்தாலும்…
என் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்த ஒரு சம்பவம் இதுவாகும்.
![]()
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=850
*** இவள் - சத்தியா ***
