கறுப்பன்!

கறுப்பன்!
அடடே!…. இந்தப் பதிவேட்டுப் பக்கம் நான் எழுதி ரொம்ப நாளாச்சே. ம்… என்ன எழுதலாம்?….. எதை எழுதலாம்?… என்று பலதடவை நினைத்துப் பார்த்ததுண்டு. அதை எழுதுவோம்… இதை எழுதுவோம்… என நினைத்துக் கொண்டாலும் பின்னர் ஏனோ அவற்றை எழுதாமலேயே விட்டு விட்டேன். ![]()
இன்று எதேச்சையாய் இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகம் ஒன்று மனதில் வந்து சோகமாய் நின்று விட்டது. மனதில் உள்ள சோகத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் மனம் லேசாகும் போல் இருந்திச்சா..
ம்… சரி சந்தோசமோ… துக்கமோ எதுவானாலும் மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரே ஒரு இடம் இதுதானே? சரி இங்கேயே அதையும் பகிர்ந்து மனதை லேசாக்குவோம் என்ற முடிவோடு நானும் இதை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ![]()
ம்… நாம் சின்ன வயதில் ஆடு, மாடு, பூனை, நாய், கோழி, கிளி, மைனா என ஆசையாய், அன்பாய் செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்த்திருக்கின்றோம். இல்லையா?… பின்னர் ஏதோ ஒரு காரணத்தினால் அவைகளை விட்டுப் பிரியும் போது… மனம் நொந்தும் இருக்கின்றோம் இல்லையா? ![]()
நானும் கூட மாறி, மாறி கிளி, மைனா, பூனை, ஆடு என்று ஒவ்வொன்றாய் செல்லமாய் வளர்த்துவிட்டு… கடைசியில் அவைகளை இழந்து நிற்கும் போது… ஏன்டா எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?… என்று அழுது வடித்த நாட்கள் பல உண்டு. ![]()
பாசமாய் வளர்த்த ஆடு 2 குட்டிகளை ஈன்று விட்டு அக்கணமே இறந்து
போனதும்… அதைப் பார்த்து விழி பிதுங்கி அழுததும்… ஆசையாய் வளர்த்த கிளி அழகாய் தமிழ் பேச… அதோடு கொஞ்சிக் குலாவி பொழுதுகளைக் கழிக்க… ஒரு நாள் இரவோடு இரவாய் பக்கத்து வீட்டுப் பூனை அதை பிடிச்சு சாப்பிட்டு விட்டு தலையை மாத்திரம் விட்டு விட்டு போயிருக்க… காலையில் அதைக் கண்டு கண்ணீர் வடித்து நின்றதும்… ம்… இப்படி பல கதைகள் உண்டு. ![]()
ம்… அப்படி நடந்த பல சம்பவங்களுள் கவலை தாங்காது ஒரு நாள் முழுவதும் அழுது வடித்த ஒரு சம்பவத்தைத்தான் இப்போது நானும் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். ![]()
ம்… மேலே இணைத்துள்ள படத்துக்கும், அதுவும் இலங்கையில் வசித்த சத்தியாவுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது?… என்று நீங்கள் மூளையைப் போட்டுக் குடைவது எனக்கும் தெரிகிறது. இதோ அதை நானே சொல்லி விடுகின்றேனே. ![]()
எங்கள் வீட்டில் அடிக்கடி கோழி முட்டைகளை அடை வைத்து… குஞ்சுகள் பொரிக்க வைத்து… வளர்ப்பது என்பது அடிக்கடி நடக்கும் சம்பவம்தான். ஆனாலும் ஒரு தடவை பொரித்த கோழிக் குஞ்சுகளுக்குள் வித்தியாசமாக
ஒரு கோழிக் குஞ்சு.
ம்… ம்… சரியாக அதைப் பார்த்தால் மேலே நான் இணைத்த படத்தைப் போலவே அந்தக் குஞ்சு இருந்தது. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அந்தக் குஞ்சு நடக்கும் அழகைப் பார்க்க ஓர் ஆசைதான். அது பேட்டுக் கோழியல்ல. ஒரு சேவல்.
அந்தச் சேவல் வித்தியாசமாக இருந்ததினாலும்… பார்ப்பதற்கு மிகவும் அழகாய்
இருந்ததினாலும்… எங்கள் வீட்டில் அந்தக் குஞ்சுக்கு நான் மட்டுமல்ல என் சகோதரர்களும் கூட தனிப்பட்ட செல்லம் கொடுத்திருந்தோம். அதுக்கு கறுப்பன் என்று செல்லப் பெயரையும் நாம் வைத்துக் கொண்டோம். கறுப்பன் என்று கூப்பிட்டால் போதும்… எங்கு நின்றாலும் செட்டை அடித்துக் கொண்டு பறந்தோடி வந்து காலுக்குள் நிற்கும்.
சாதாரணமாக எங்கள் வீட்டில் கோழிகளை முற்றத்துக்கு வர விடுவதில்லை. காரணம் நாம் எல்லோரும் முற்றத்து மணலில் விளையாடுவதால் கோழிகளை முற்றத்துக்கு வர எங்கள் அப்பா அனுமதிப்பதே இல்லை. ஆனால் இந்தக் கறுப்பனுக்கு மட்டும் அங்கு வர தடையே கிடையாது. வீட்டு வாசல் வரை வருவதற்கு அந்தக் கறுப்பனுக்கு மட்டும்தான் எப்போதும் அனுமதி உண்டு.
மற்றக் கோழிகள் சிலவேளை முற்றப் பக்கம் வந்தால் கூட… இந்தக் கறுப்பன் இருக்கிறானே… இவன் விடவும் மாட்டான். பறந்து, பறந்து கொத்தி துரத்தி விட்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஒரு சத்தம் ஒன்று போட்டபடி ராஜநடை போட்டு வருவான். இதையெல்லாம் நாம் அடிக்கடி பார்த்து ரசித்து சிரிப்பதும் உண்டு. ![]()
இந்தக் கறுப்பனுக்கு எல்லோராலும் தனிப்பட்ட கவனிப்பும் அதிகம். அதனால் கறுப்பன் தள தள என வளர்ந்து… மிகவும் அழகாகத்தான் இருந்தான். அதிகாலை வேளையில் அவனின் கூவல் கேட்டதும் அப்பாவும் எம்மை படிப்பதற்கும் எழுப்பி விடுவார். இப்படி அவனின் செயல்கள் எப்போதுமே எம்மைச் சுற்றிப் பின்னிப் பிணைந்தே இருந்தது.
ம்… “சனி நீராடு” என்பதை யார் ஒழுங்காகச் செய்தார்களோ இல்லையோ நானறியேன். ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் சனிக் கிழமை என்றாலே கட்டாயம் எண்ணை பூசி எம்மை அப்பா முழுக வைத்து விடுவார். அம்மா இல்லாவிடிலும் எம்மை பாதுகாப்பதில் அப்பா மிகவும் கவனமாகவே எப்போதும் இருந்தார். சனிக் கிழமை என்றால் வீட்டில் இறைச்சி, ரசம் என தடல்புடலான சாப்பாடாகத்தான் இருக்கும். வீட்டில் கோழிகளும் வளர்ப்பதால் இடையிடையே சனிக் கிழமைகளில் சேவல்களும் கறியாவதுண்டு.
இந்தக் கால கட்டத்தில் கறுப்பனும் வளர்ந்து குளுகுளென்று நின்ற வேளை… அப்பாவின் குறி இந்தக் கறுப்பனின் பக்கமும் திரும்புவதை நாம் கண்டு கொண்டோம். அதனால் சனிக் கிழமை காலையே நான் கறுப்பனைப் பிடித்து சாப்பாட்டை போட்டு விட்டு, வீட்டுக்கு பின் உள்ள தோட்டத்துக்குள் கூடையால் மூடி கறுப்பனை ஒளித்து விடத் தொடங்கினேன். அப்பாவும் பல சனிக் கிழமை அவனைத் தேடிப் பார்ப்பார். ஆனால் அவன் அப்பா கண்ணில் அம்பிடுவதே இல்லை. எப்படி அம்பிடுவான்? நான்தான் அவனை டம் பண்ணி விடுவேனே!… நான் கறுப்பனை பிடித்து ஒழிப்பது என் தம்பிமாருக்குக் கூட தெரிந்திருந்தாலும் யாரும் அதை காட்டிக் கொடுப்பதே இல்லை.
ம்… அன்றும் ஒரு சனிக்கிழமை. அப்போது நான் 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாடசாலையின் ஆண்டு விழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகளில் நானும் பங்கெடுத்ததால் அந்தக் கிழமை சனி, ஞாயிறு தினத்தில் நிகழ்ச்சிக்கான பயிற்சி
நடந்தது. காலை 9 மணிக்கே பாடசாலைக்கு நான் போக வேண்டி இருந்ததால் காலை எழுந்து, அலுவல்களை முடித்து விட்டு நானும் பாடசாலைக்குப் போய் விட்டேன்.
மதியம் 2 மணிக்கு எல்லாம் முடிந்து பாடசாலையால் வீட்டுக்கு வந்த போது என் கடைசித் தம்பியின் முகம் வாடி இருந்தது. என்னைக் கண்டதும் அழுவாரைப் போல் அருகில் வந்தான். என்ன என விசாரித்த போது…
அன்று அப்பாவின் கையில் என் கறுப்பன் பிடிபட்டு சட்டிக்குள் போன கதையைச் சொன்னான். நான் திரும்பி மற்றத் தம்பிமாரைப் பார்க்கிறேன். எல்லோரின் முகமும் வாடியே கிடந்தது. ![]()
எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை. நேராக போய் கட்டிலில் விழுந்து விட்டேன். அன்று காலையில் அவசரத்தில் நான் கறுப்பனை பிடித்து அடைக்க மறந்து போய் விட்டேனே என்பதை நினைத்த போது மனதில் கவலையும், அழுகையும் சேர்ந்தே வர…. என்னால் அழுகையை அடக்கிக் கொள்ளவும் முடியவில்லை.
நான் பாடசாலையால் வந்ததும் சாப்பிடாமல் படுத்திருப்பதைக் கண்டதும் அப்பா அருகில் வந்து….
என்னம்மா?… என்றார்.
எனக்கு பதிலே சொல்ல முடியாமல் அழுகை அழுகையாகவே வந்தது.
அப்பா என் தலையில் தன் கையை வைத்துப் பார்த்து விட்டு ஏன் இப்படி
தலை கொதிக்குது?… என்ன தலை இடிக்குதா?… என்றார்.
நானும் ஓம் என்பது போல் மெல்ல தலையசைத்தேன்.
ஆனால் கறுப்பன்தான் என் அழுகைக்கு காரணம் என்பதை நானும் சொல்ல வில்லை. அப்பாவும் அதை உணர்ந்து கொள்ளவும் இல்லை.
முகத்தை கழுவி விட்டு, சாப்பிட்டு விட்டு கொஞ்சம் நேரம் படுத்துக் கொள்ளம்மா… எல்லாம் சரியாகி விடும். இந்த வெய்யிலுக்கால வந்ததுதான் தலை இடிக்குது போல இருக்கு… எனச் சொல்லிக் கொண்டே என் முகத்தை கழுவ வைத்து, நெற்றியில் VICKS ம் போட்டு விட்டு சாப்பிட சொன்னார்.
என்னால் சாப்பிடவே முடியவில்லை. எப்படிச் சாப்பிடுவேன்? நான் ஆசை ஆசையாய் பாசம் வைத்து வளர்த்த கறுப்பனை கறியாய் சாப்பிட என்னால் எப்படி முடியும்? ![]()
எனக்கு வேண்டாம் அப்பா… என்று கூறி விட்டு அப்படியே வந்து விழுந்து படுத்து என் வேதனை தீரும் வரை தலையணைக்குள் முகம் புதைத்து
அழுது தீர்த்துக் கொண்டேன்.
வளர்த்த கடா ஒரு நாள் கசாப்புக் கடைக்குப் போகத்தான் வேண்டும்.
வளர்த்த சேவல் என்றோ ஒரு நாள் கறியாகித்தான் ஆகவேண்டும் என்று யோசித்துப் பார்க்கும் போது அப்பாவின் பக்கம் ஞாயம் இருந்தாலும்…
விபரம் அறியா வயதிலேயே இழக்கக் கூடாத பெரிய இழப்பாய்… என் அன்னையை இழந்து… அதனால் மனதில் ஏற்பட்ட சோதனைகளையும், வேதனைகளையும், மன விரக்தியையும் மறக்க, இப்படிச் சின்னச் சின்ன அன்பை வளர்த்து, அதுக்குள் ஏதோ ஒரு சின்ன சந்தோசத்தைக் கண்டேன் என்பதை அப்பா ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விட்டார்?…. என்பதை நினைத்தால் இப்போதும் எனக்குக் கவலைதான்.
——————–

kumar சொன்னது,
ஜூலை 2, 2008 இல் 12:59 பிற்பகல்
nanai
enakkul ennai
thedum…..
oru arpudhamana unarvu
miendum
varuma enroru yekkam
thulirthida
ithu oru
vithai